''வாக்குத் திருட்டு என்று ஒன்று கிடையவே கிடையாது;'' வானதி சீனிவாசன்..! - Seithipunal
Seithipunal


''வாக்குத் திருட்டு என்று ஒன்று கிடையவே கிடையாது. இது ஒரு தவறான, தீய நோக்கத்துடன் கூடிய பிம்பத்தை உருவாக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாடல் மட்டுமே; வாக்காளர் பட்டியலில் இருந்து யாருடைய பெயரையும் தன்னிச்சையாக நீக்க முடியாது. வாக்காளர் பட்டியலிலிருந்து ஒரு பெயர் நீக்கப்படுவது, சட்டப்படி வரையறுக்கப்பட்ட நடைமுறைகளின்படியே நடைபெறுகிறது'' என பாஜகவை சேர்ந்த வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது;

''வாக்குத் திருட்டு என்று ஒன்று கிடையவே கிடையாது. இது ஒரு தவறான, தீய நோக்கத்துடன் கூடிய பிம்பத்தை உருவாக்குவதற்காகப் பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாடல் மட்டுமே. இதைப் புரிந்துகொள்ள, வாக்காளர் பட்டியல் தயாரிப்பு முதல் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை வரையிலான முழு செயல்முறையையும் அறிந்து கொள்வது அவசியம்.

எஸ்ஐஆர் முறையில் வாக்காளர் பட்டியலை தயாரிக்கும் செயல்பாட்டில், வாக்குச்சாவடி நிலை அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டு, வீடு வீடாகச் சென்று சரிபார்ப்புகளைச் செய்கின்றனர். இதனுடன், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சுமார் 20 லட்சம் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் இந்த வாக்காளர் பட்டியல் தயாரிப்புச் செயல்முறையை மிக நெருக்கமாக இருந்து கண்காணிக்கின்றனர். இவர்கள் பெயரளவில் மட்டும் நியமிக்கப்படவில்லை; இந்த முழுச் செயல்முறையிலும் ஒரு தணிக்கையாளரைப்போல முக்கியப் பங்காற்றுகின்றனர்.

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் நிலையில், ‘இல்லாதவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இறந்தவர்கள், ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் இருப்பவர்கள் குறித்த பட்டியல், அரசியல் கட்சிகளுக்கும், அவர்களின் வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கும் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் அவர்கள் தங்கள் தரப்பிலிருந்து தகவல்களைச் சரிபார்க்க முடியும். இதே தகவல்கள் பொதுவெளியிலும் கிடைக்கின்றன.

தகுதியுள்ள எந்தவொரு வாக்காளரும், வரைவுப் பட்டியலில் உள்ள பதிவுகள் குறித்து, கோரிக்கைகளையோ அல்லது ஆட்சேபனைகளையோ தெரிவிக்கலாம். இத்தகைய அனைத்துச் செயல்முறைகளும் முடிந்த பின்னரே, இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதோடு அனைத்தும் முடிந்துவிடுவதில்லை; தேர்தல் பதிவு அதிகாரியின் முடிவுக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்கான வாய்ப்பும் உள்ளது.

வாக்காளர் பட்டியலில் இருந்து யாருடைய பெயரையும் தன்னிச்சையாக நீக்க முடியாது. வாக்காளர் பட்டியலிலிருந்து ஒரு பெயர் நீக்கப்படுவது, சட்டப்படி வரையறுக்கப்பட்ட நடைமுறைகளின்படியே நடைபெறுகிறது. வாக்காளர் பதிவு அதிகாரி, தமக்குக் கிடைக்கும் ஆவணங்கள், சரிபார்ப்பு முடிவுகள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகளின் அடிப்படையில் மட்டுமே ஒரு முடிவை எடுக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் செயல்பாட்டில், ஒருபுறம் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் களப்பணியின் மூலம் சரிபார்ப்புகளை மேற்கொள்கின்றனர்; மறுபுறம், அரசியல் கட்சிகளைச் சேர்ந்த சுமார் 20 லட்சம் வாக்குச்சாவடி நிலை முகவர்கள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். இவை தவிர, கோரிக்கைகள், ஆட்சேபனைகள் மற்றும் மேல்முறையீடுகளுக்கான முறையான வழிமுறைகளும் உள்ளன.

இப்போது சிந்தித்துப் பாருங்கள். இவ்வளவு விரிவான சரிபார்ப்பு, தொடர் கண்காணிப்பு முறைகள் இருக்கும்போது, 'வாக்குத் திருட்டு' எப்படி நடக்க முடியும்? வாக்குப்பதிவு நாளன்றும் வேட்பாளர்களின் அரசியல் கட்சிகளின் முகவர்கள் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர். வேட்பாளர்களின் வாக்குச்சாவடி முகவர்கள், வாக்குச்சாவடிகளில் நேரில் இருந்து, வாக்குப்பதிவு நடைமுறையைக் கண்காணிக்கின்றனர்.

மூன்று தேர்தல் ஆணையர்களின் ஒருமித்த உடன்பாட்டுடன் எஸ்ஐஆர் மேற்கொள்ளப்பட்டது. அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இணையவழி நேரலை வசதி செய்யப்பட்டுள்ளது. இது வாக்குப்பதிவுச் செயல்பாட்டை அதிக வெளிப்படைத்தன்மை கொண்டதாக மாற்றுகிறது.

பிஹார், மேற்கு வங்கத்தில், சுதந்திரத்திற்குப் பிந்தைய காலத்திலேயே மிக அதிக அளவிலான வாக்குப்பதிவு சதவீதம் பதிவானது; முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக எண்ணிக்கையிலான மக்கள் வாக்களித்தனர். வாக்கு எண்ணிக்கையின்போதும் வேட்பாளர்களின் பிரதிநிதிகள் உடன் இருக்கின்றனர். வாக்கு எண்ணிக்கை நடைபெறும் இடத்தில், வேட்பாளர்களின் வாக்கு எண்ணிக்கை முகவர்கள் நேரில் இருந்து, அந்தச் செயல்பாட்டைக் கண்காணிக்கின்றனர்.

சுருக்கமாகச் சொன்னால், வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, சரிபார்ப்பு, கோரிக்கைகள் மற்றும் ஆட்சேபனைகள், இறுதி வாக்காளர் பட்டியல், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை என ஒவ்வொரு முக்கியமான நிலையிலும், அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள், அவர்களின் பிரதிநிதிகள் உடன் இருந்து கண்காணிப்பை மேற்கொள்கின்றனர்.

எளிமையாகச் சொன்னால், வாக்காளர் பட்டியல் தயாரிப்பது என்பது ஏதோ ஒரு மூடிய அறைக்குள் நடக்கும் ரகசியச் செயல் அல்ல. இதில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் களப்பணிச் சரிபார்ப்பும், சுமார் 20 லட்சம் அரசியல் கட்சி முகவர்களின் தொடர் கண்காணிப்பும் உள்ளன; ஒவ்வொரு நிலையிலும் முறையான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.

இந்திய தேர்தல் முறை, உலகின் மிகப்பெரிய, மிக விரிவாகக் கண்காணிக்கப்படும் ஜனநாயகச் செயல்பாடுகளில் ஒன்றாகும். இதைப் புரிந்துகொள்ள, ஏதோ ஒரு தரப்பு முன்வைக்கும் பிம்பத்தை மட்டும் பார்க்காமல், ஒட்டுமொத்த தேர்தல் நடைமுறையையும் முழுமையாகப் பார்க்க வேண்டும்.'' எனத் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vanathi Srinivasan says that there is no such thing as vote theft


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!




Seithipunal
--> -->