விஜய்யின் ரசிகர் நான்... இனி நாடு முழுவதும் பரப்புரை செய்வேன் - தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத் பேட்டி!
TVK Vijay Nanjil Sampath
தி.மு.க., ம.தி.மு.க., அ.தி.மு.க. எனத் தமிழகத்தின் மூத்த கட்சிகளில் பயணித்த மூத்த மேடைப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத், இன்று (டிச. 5) தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தார். இதையடுத்துச் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனது மனநிலையையும், தவெக மீதான பார்வையையும் வெளிப்படுத்தினார்.
விஜய்யின் ரசிகர்
"ஜெயலலிதா மறைவுக்குப் பின் எந்தக் கட்சியிலும் சேராமல் இருந்தேன். பெரியார், அண்ணா இலட்சியங்களைப் பேசி வந்த நான் இன்று தவெகவில் இணைந்துள்ளேன். கடந்த காலக் காயங்களில் இருந்து விடுபட்டவனாக உணர்கிறேன். உற்சாக மனநிலையில் உள்ளேன்," என்று நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.
விஜய்யின் அன்பு:
"நான் உங்கள் ரசிகர் என விஜய் என்னைப் பார்த்துக் கூறியபோது மெய்சிலிர்த்துப் போனேன். நாடு முழுவதும் பரப்புரை செய்ய அவர் எனக்கு அனுமதி தந்துள்ளார்," என்றும் அவர் மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
திராவிடத்தின் நீட்சி
தவெகவில் திராவிடம்: தவெகவில் திராவிடம் உள்ளது. பெயரில் இல்லாமல் இருக்கலாம். தமிழ் தேசியமும், திராவிட தேசியமும் ஒன்றுதான். திராவிட இயக்கத்தின் நீட்சியாகவே விஜய்யைப் பார்க்கிறேன் என்றும் நாஞ்சில் சம்பத் கூறினார்.
இளைஞர்கள் மூலதனம்:
லட்சக்கணக்கான இளைஞர்களை மூலதனமாகக் கொண்டிருக்கும் ஒரே இயக்கம் தவெகதான். இளைஞர்களை வைத்துக்கொண்டு அதிரடி மாற்றங்களைச் செய்வதற்கு விஜய்யிடம் திட்டம் இருக்கிறது என நம்புவதாகவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் விவகாரம்
திருப்பரங்குன்றம் சம்பவம் குறித்து விஜய் பேசாமல் இருப்பது நல்லது என்று நாஞ்சில் சம்பத் கருத்துத் தெரிவித்தார். "இதில் ஒரு தரப்புக்கு ஆதரவாகவும், ஒரு தரப்புக்கு எதிராகவும் கருத்துச் சொல்லாமல் இருப்பது விஜய்க்கு நல்லது," என்றும் அவர் கூறினார்.