தமிழ்நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை, பிழைப்புக்காகத் தமிழ்நாட்டை நம்பி வந்தவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை - விஜய் கண்டனம்!
tvk vijay condemn to dmk mk dtalin govt law and order
தலைநகர் சென்னையில் அடுத்தடுத்த பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களால் தமிழகமே அதிர்ச்சியில் உள்ளதாக தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அவரின் அறிக்கையில், "தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீரழிந்துவிட்டது என்பதற்குச் சான்றாக நாள்தோறும் குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.
தலைநகர் சென்னையில் அடுத்தடுத்த பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களால் தமிழகமே அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
சென்னை அடையாறு பகுதியில் காவலாளியாக வேலை பார்த்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளியும் அவர் மனைவியும் குழந்தையும் படுகொலை செய்யப்பட்ட சம்பவமும், நந்தனத்தில் அரசுக் கல்லூரி கேண்டீனில் பணிபுரிந்த இளம்பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவமும் பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. இச்சம்பவங்கள், கடும் கண்டனத்திற்கு உரியவை.
தமிழ்நாட்டு மக்களுக்கும் பாதுகாப்பு இல்லை, பிழைப்புக்காகத் தமிழ்நாட்டை நம்பி வந்தவர்களுக்கும் பாதுகாப்பு இல்லை என்ற சூழலைத்தான் இந்தக் கபட நாடகத் திமுக அரசு உருவாக்கி வைத்திருக்கிறது.
கொள்ளை அடிப்பதில் மட்டுமே கவனம் செலுத்துவதால், பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களைத் தடுப்பதிலும், சட்டம் ஒழுங்கைக் காப்பதிலும் இந்த ஆட்சியாளர்கள் கவனம் செலுத்துவதில்லை. இதனால்தான் கல்வி நிறுவனங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிகரிக்கின்றன.
குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டிய அரசு, மெத்தனப் போக்கைக் கடைப்பிடிப்பதால், கொடுங்குற்றங்களில் ஈடுபடச் சமூக விரோதக் கும்பல்களுக்குத் துணிச்சல் வருவதாகப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தர உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், முதல்வர் அவர்கள் கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாமல் பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு என்றும், எந்தக் கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சி என்றும் வாய்கூசாமல் பொய்யையே திரும்பத் திரும்பக் கூறி வருகிறார்.
ஆட்சியின் இறுதிக் கால நாள்களை எண்ணிக்கொண்டிருக்கும் முதல்வர் அவர்கள், இனி இருக்கும் கொஞ்சம் நாள்களிலாவது சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க, தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மக்களுக்கு எதிரான, மக்களுக்குக் கொஞ்சமும் பாதுகாப்பே இல்லாத, இந்த வெற்று விளம்பர மாடல் ஆட்சிக்கு முடிவுரை எழுதத் தமிழக மக்கள் தயாராகிவிட்டார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
tvk vijay condemn to dmk mk dtalin govt law and order