தனித் தொகுதிகளில் தவெக ஆதிக்கம்! 46-ல் 24 இடங்களை கைப்பற்றிய விஜய்! சரிந்த திமுக, அதிமுகவின் கோட்டை! விசிகவுக்கும் சேதாரம்!
Tvk dominates in individual constituencies Vijay wins 24 out of 46 seats DMK AIADMK stronghold collapses VK too suffers losses
2026 தமிழக சட்டசபைத் தேர்தல் முடிவுகள் மாநில அரசியலில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. பல தசாப்தங்களாக தமிழக அரசியலை ஆட்சி செய்த திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை உடைத்து, விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (தவெக) புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளது.
மொத்தம் 234 தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில், தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. திமுக 73 தொகுதிகளிலும், அதிமுக 53 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களில் தவெக அசாதாரண வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்தத் தேர்தலில் மிகவும் கவனிக்கத்தக்க விஷயமாக பார்க்கப்படுவது தனித் தொகுதிகளில் தவெக பெற்றுள்ள வெற்றிதான். தமிழகத்தில் உள்ள மொத்த 46 தனித் தொகுதிகளில், தவெக மட்டும் 24 இடங்களை கைப்பற்றி மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தியுள்ளது.
மறுபுறம், பல ஆண்டுகளாக இந்த தொகுதிகளில் ஆதிக்கம் செலுத்தி வந்த திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தலா 9 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளன. இதன் மூலம், தனித் தொகுதிகளில் பாரம்பரிய திராவிடக் கட்சிகளின் செல்வாக்கு கணிசமாக குறைந்துள்ளது தெளிவாகியுள்ளது.
அரசியல் பார்வையாளர்கள் கூறுவதன்படி, விஜய்யின் “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்ற சமூகநீதி சார்ந்த அரசியல் அணுகுமுறையும், சாதி - மத எல்லைகளை தாண்டிய பிரச்சாரமும், தலித் மற்றும் பழங்குடியின மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக வடதமிழகம் மற்றும் கொங்கு மண்டலங்களில் உள்ள பல தனித் தொகுதிகளில் தவெக வேட்பாளர்கள் பெரும் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளனர். இதில் பலர் எளிய பின்னணியில் இருந்து வந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஒரு புதிய கட்சி தனது முதல் சட்டமன்றத் தேர்தலிலேயே 50 சதவீதத்திற்கும் அதிகமான தனித் தொகுதிகளை கைப்பற்றுவது தமிழக அரசியல் வரலாற்றில் இதுவே முதல் முறை என அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், இளைஞர்கள் மற்றும் பெண்கள் சாதி - மத பேதமின்றி தவெகக்கு ஆதரவு அளித்ததே இந்த வெற்றிக்கான முக்கிய காரணம் எனவும் கூறப்படுகிறது. விசிக போன்ற சமூகநீதி அடிப்படையிலான கட்சிகளின் வாக்கு வங்கியிலும் தவெக தாக்கத்தை ஏற்படுத்தியிருப்பதாக தேர்தல் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தேர்தல் முடிவுகள் மூலம், தவெக ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்கான கட்சி அல்ல; அது மாநிலம் முழுவதையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் சக்தியாக வளர்ந்து வருவதை உறுதிப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Tvk dominates in individual constituencies Vijay wins 24 out of 46 seats DMK AIADMK stronghold collapses VK too suffers losses