1 கோடி வாக்குகளைக் கடந்து தவெக சாதனை: தமிழக அரசியலில் உருவான புதிய சகாப்தம்!
TVK Crosses 1 Crore Votes A Paradigm Shift in Tamil Nadu Politics
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை ஒரு வரலாற்றுப் பதிவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இன்று பிற்பகல் 3 மணி நிலவரப்படி வெளியாகியுள்ள அதிகாரப்பூர்வத் தரவுகள், தமிழக அரசியல் களத்தில் கடந்த 50 ஆண்டுகளாக நீடித்து வந்த இருமுனைப் போட்டியைத் தகர்த்து, ஒரு புதிய அரசியல் சக்தியின் உதயத்தைப் பறைசாற்றுகின்றன.
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் சுமார் 20 சதவீத வாக்கு வங்கியைத் தன்வசப்படுத்தி, 1.09 கோடி வாக்குகளுடன் அசுர பலத்துடன் முன்னிலை வகிக்கிறது.
தற்போதைய நிலவரப்படி, மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 107 இடங்களில் தவெக முன்னிலை பெற்று முதலிடத்தில் நீடிக்கிறது. ஆளும் திமுக 71.97 லட்சம் வாக்குகளுடன் 70 இடங்களில் முன்னிலை பெற்று இரண்டாம் இடத்திலும், அதிமுக 57 இடங்களில் முன்னிலையுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன. ஒரு புதிய கட்சி தனது முதல் தேர்தலிலேயே 1 கோடி வாக்குகளைக் கடந்து, திராவிடக் கட்சிகளுக்குச் சமமாக மல்லுக்கட்டுவது இந்திய தேர்தல் வரலாற்றிலேயே மிக முக்கியமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
தவெக: 107 இடங்கள் (1.09 கோடி வாக்குகள்)
திமுக: 70 இடங்கள் (71.97 லட்சம் வாக்குகள்)
அதிமுக: 57 இடங்கள் முன்னிலை
வாக்கு சதவீதம்: தவெக இதுவரை 20% வாக்குகளைப் பெற்றுள்ளது.
கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்ற திமுக 2.09 கோடி வாக்குகளையும், அதிமுக கூட்டணி ஒட்டுமொத்தமாக 1.83 கோடி வாக்குகளையும் பெற்றிருந்தன. ஆனால், இன்று தவெக ஒரு தனி கட்சியாக நின்றே 1 கோடி வாக்குகள் என்ற இலக்கை மதியத்திற்குள்ளேயே கடந்துள்ளது.
ஆளுங்கட்சி மீதான அதிருப்தி மற்றும் புதிய மாற்று அரசியலுக்கான தேடல் ஆகியவையே தவெக-வின் இந்த அசுர வளர்ச்சிக்குக் காரணமாகக் கருதப்படுகிறது. மாலைக்குள் முழுமையான முடிவுகள் வெளிவரும்போது, தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய அதிகார மாற்றம் நிகழ்வது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
English Summary
TVK Crosses 1 Crore Votes A Paradigm Shift in Tamil Nadu Politics