ரேஷன் அரிசி மூட்டைகளைக் கழிவறையில் அடுக்குவதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் : டி.டி.வி. தினகரன் வலியுறுத்தல்..!
TTV Dhinakaran urges action against those responsible for dumping ration rice packets in toilets
ரேஷன் கடைகளில் நிலவும் இடவசதியின்மையைக் காரணம் காட்டி கழிவறையில் அரிசி மூட்டைகளை அடுக்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது எனவும், அதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுஅ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இயங்கி வரும் உழவர் சந்தையின் கழிவறை ஒன்றில் மக்களுக்கு விநியோகிக்க வேண்டிய ரேஷன் அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் காட்சிகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
-c3fub.png)
ஏழை, எளிய, சாமானிய மக்களுக்கு அன்றாடம் தேவைப்படக்கூடிய அத்தியாவசியப் பொருட்களைக் குறைந்த விலையில் விநியோகம் செய்யும் ரேஷன் கடைகளில் நிலவும் இடவசதியின்மையைக் காரணம் காட்டி கழிவறையில் அரிசி மூட்டைகளை அடுக்கியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஏற்கனவே, தரமற்ற பொருட்கள் விநியோகம், அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு என பல்வேறு புகார்கள் தொடர்ந்து எழுந்துவரும் நிலையில், தற்போது நடைபெற்றிருக்கும் இச்சம்பவம் ரேஷன் கடைகள் மீதான மக்களின் நம்பிக்கையை முழுமையாக இழக்கச் செய்திருக்கிறது.
தி.மு.க. அரசின் அமைச்சர்களும், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அவர்களது குடும்பத்தினரும், துளியளவும் சுகாதாரமற்ற கழிவறையில் அடுக்கி வைத்த மூட்டைகளில் இருக்கும் அரிசியைச் சமைத்து உண்பார்களா? விளிம்புநிலை மக்கள் என்றால் ஆட்சியாளர்களுக்கு இளக்காரமாகத் தெரிகிறதா? என்ற அடுக்கடுக்கான கேள்வியை அப்பகுதி மக்கள் எழுப்புகின்றனர்.
எனவே, ரேஷன் அரிசி மூட்டைகளைக் கழிவறையில் அடுக்குவதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு, ஏழை, எளிய மக்களுக்குச் சுகாதாரமான பொருட்களை விநியோகிக்க வேண்டும் எனத் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
TTV Dhinakaran urges action against those responsible for dumping ration rice packets in toilets