''பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின் போது சாதி, மத அடையாளங்களை குறிப்பிடுவது கட்டாயம் இல்லை;''தமிழக அரசு..!
TN govt says it is not mandatory to mention caste and religious identities during student admissions to schools and colleges
'பள்ளி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின் போது சாதி, மத அடையாளங்களை குறிப்பிடுவது கட்டாயம் இல்லை' என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம், இனாம்ரெட்டியபட்டியை சேர்ந்த விக்ரமன், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில்,''தனியார் கல்வி நிறுவனங்களில் ஆரம்ப கட்டத்தில் மாணவர்களிடம் சாதி கேட்கக் கூடாது என விதி உள்ளது. இதை மீறி கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கையின் போது விண்ணப்பதாரர்களின் சாதி மற்றும் சமூக விவரங்களை கட்டாயமாகக் கேட்கப்படுகிறது. இது மாணவர்கள் தேர்வு மற்றும் சேர்க்கை செயல்முறைகளில் பாகுபாடு ஏற்பட வழிவகை செய்யும்.
எனவே, தமிழ்நாட்டில் உள்ள தனியார் கல்வி நிறுவனங்களில் விண்ணப்ப படிவங்களில் சாதி அல்லது சமூக விவரங்களை கட்டாயமாக சேகரிக்க தடை விதித்தும், தனியார் நிறுவனங்களில் பாகுபாடு இல்லாத சூழலை உறுதிசெய்ய வழிகாட்டுதல்களை உருவாக்கவும் உத்தரவிட வேண்டும்.'' என்று கூறப்பட்டிருந்தது.

குறித்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தது. அப்போது, மாணவர் சேர்க்கை விண்ணப்பத்தில் சாதி விவரங்கள் கேட்டு கட்டாயப்படுத்தக் கூடாது என அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளதா என நீதிபதிகள் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இந்நிலையில், தற்போது இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில், ''பள்ளிகளை தொடர்ந்து அரசு மற்றும் அரசு உதவிபெறும், கல்லூரி, தனியார் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கையின் போது சாதி, மாத அடையாளங்களை கட்டாயம் கேட்கக் கூடாது என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது''எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
''இதேபோன்ற மற்றொரு வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் பள்ளிகளில் சாதி, மாத அடையாளங்களை குறிப்பிட கட்டாயப்படுத்தக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையை பின்பற்றுவதை உறுதிசெய்ய வேண்டும். இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.'' என உத்தரவிட்டுள்ளனர்.
English Summary
TN govt says it is not mandatory to mention caste and religious identities during student admissions to schools and colleges