3 நாட்கள் பட்டினி… 15 மாத்திரைகள்...! தவெக நிர்வாகியின் வேதனைக்குரல்... இரண்டாவது நாளாக சிகிச்சையில்...!
Three days starvation 15 pills anguished voice DMDK functionary undergoing treatment second consecutive day
தமிழக வெற்றிக் கழகத்தில் ஏற்பட்ட உட்பகை விவகாரம், தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த அஜிதா ஆக்னல், தமிழக வெற்றிக் கழகத்தின் செயல்வீரியமான நிர்வாகியாக செயல்பட்டு வந்தவர். கட்சியில் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்படாததால் ஏற்பட்ட அதிருப்தி, அவர் மேற்கொண்ட தீவிர நடவடிக்கைகளாக வெளிப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, கடந்த நாட்களில் சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைவர் நடிகர் விஜயின் காரை முற்றுகையிட்டு, அஜிதா ஆக்னலும் அவரது ஆதரவாளர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, கட்சித் தலைமையகம் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டமும் நடத்தப்பட்டது.
இந்த சம்பவம் கட்சிக்குள் பெரும் பேசுபொருளாக மாறியது.இந்த நிலையில், கடந்த 3 நாட்களாக உணவு அருந்தாமல் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படும் அஜிதா ஆக்னல், நேற்று காலை தனது வீட்டில் சுமார் 15 தூக்க மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை அறிந்த அவரது கணவர் உள்ளிட்ட குடும்பத்தினர் உடனடியாக அவரை தூத்துக்குடியில் உள்ள வீட்டருகே இருக்கும் தனியார் மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்துச் சென்றனர்.
அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக, தூத்துக்குடி தமிழ் சாலை பகுதியில் அமைந்துள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு அவர் மாற்றப்பட்டார். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது,“அஜிதா ஆக்னலுக்கு எக்ஸ்ரே உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
தூக்க மாத்திரைகளின் தாக்கத்தை குறைக்கும் மருந்துகள் வழங்கப்பட்டு வருகின்றன. 10-க்கும் மேற்பட்ட மாத்திரைகளை எடுத்துக் கொண்டதால் தற்போது மயக்க நிலையில் உள்ளார். இருப்பினும், பெரிய ஆபத்து எதுவும் இல்லை. விரைவில் அவர் குணமடைவார்” என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது உடல்நிலை மேம்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.தேவையான மருத்துவ பரிசோதனைகள் முடிந்த பின், அஜிதா ஆக்னலை அவசர சிகிச்சை பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
English Summary
Three days starvation 15 pills anguished voice DMDK functionary undergoing treatment second consecutive day