ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் பாஜக ஏன் 'நடுவில்' வருகிறது? - திருமாவளவன் கேள்வி..!
Thirumavalavan Questioned About BJP Interfere in Armstrong Murder
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், "தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினிடம் தமிழகத்தில் நிலவும் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து விவாதித்தேன். மேலும் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில், கொலை செய்ததாக சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இவர்கள் மட்டுமின்றி இந்த கொலையைத் திட்டமிட்ட அனைவரையும் கைது செய்யவேண்டும் என்று முதல்வரிடம் வலியுத்தியுள்ளோம். தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கை சீர்குலைத்து பதற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் சில அரசியல் கட்சிகள் செயல்படுகின்றன. அவற்றில் முதன்மையாக பாஜக செயல்படுகிறது.
ஆம்ஸ்ட்ராங் படுகொலையில் கூட வேறு ஏதோ செயல்திட்டம் இருப்பதாகவே விசிக சந்தேகிக்கிறது. ஏனெனில் ஆம்ஸ்ட்ராங் உயிரிழந்த சில நிமிடங்களிலேயே பாஜகவைச் சேர்ந்த ஒருவர் செய்தியாளர்களை சந்திக்கிறார். மேலும் சிபிஐ விசாரணை கோருகிறார்.
இந்த கொலை குறித்து காவல்துறை விசாரணையில் இறங்குவதற்கு முன்பே, படுகொலை செய்யப்பட்டவரின் சொந்த கட்சியான பகுஜன் சமாஜ் கட்சி கோரிக்கை வைப்பதற்கு முன்பே, இந்த கொலையை சிபிஐ தான் விசாரிக்க வேண்டும் என்று ஒட்டுமொத்த பாஜகவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஆருத்ரா கோல்ட் நிறுவனத்திற்கு ஆம்ஸ்ட்ராங் கொலையில் சம்பந்தம் இருப்பதாக பேசப்படுகிறது. இந்நிலையில் ஆருத்ராவோடு பாஜகவினருக்கு உள்ள தொடர்பு குறித்து கடந்த சில மாதங்களாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாஜக ஏன் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 'நடுவில்' வருகிறது? என்ற சந்தேகம் விசிக- விற்கு எழுந்துள்ளது. திமுக அரசுக்கு எதிராக பதற்றத்தை ஏற்படுத்தவே பாஜக முயற்சிப்பதாக சந்தேகம் எழுகிறது" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
Thirumavalavan Questioned About BJP Interfere in Armstrong Murder