இடைக்கால ஓய்வூதியத்தில் கூடுதல் தொகை பிடித்தம் செய்யும் உத்தரவை திரும்பப் பெற்றுள்ள தமிழக அரசு..!
The TN govt withdrawn the order to deduct an additional amount from interim pensions
தமிழகத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் இடைக்கால ஓய்வூதியத்தில் இருந்து கூடுதலாக வழங்கப்பட்ட தொகையை பிடித்தம் செய்யும் உத்தரவை தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது.
இது தொடர்பாக நிதித்துறை (செலவினம்) செயலர் அருண் ராய், கருவூலம் மற்றும் கணக்குத் துறை இயக்குநருக்கு அனுப்பிய சுற்றறிக்கை;
''ஒய்வூதியம் வழங்குவதில் அரசாணை 111-ல் உள்ள நடைமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்பட வேண்டும்.
அதன்படி, குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு, கடைசியாகப் பெற்ற அடிப்படை ஊதியத்தில் 30 சதவீதம் அல்லது மாதம் ரூ.10,000 ஆகியவற்றில் எது அதிகமோ அந்தத் தொகை இனி இடைக்கால மாதாந்திர ஓய்வூதியமாக வழங்கப்படும். இதனுடன் 60 சதவீத அகவிலைப்படி நிவாரணமும் சேர்த்து வழங்கப்படும்.
இடைக்கால ஓய்வூதியமாக இதுவரை வழங்கப்பட்ட தொகைக்கும், டாப்ஸ் விதிமுறைகளின்படி இறுதியாக நிர்ணயிக்கப்படும் ஓய்வூதியத் தொகைக்கும் இடையே ஏதேனும் வேறுபாடு இருந்தால், அது எதிர்காலத்தில் சரிசெய்யப்படும். முந்தைய உத்தரவின் அடிப்படையில், கூடுதலாக வழங்கப்பட்ட தொகையைத் திரும்பப் பெறுவதற்காக ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள பிடித்தம் செய்யும் நடவடிக்கைகளை உடனே நிறுத்த வேண்டும்.
இந்த சுற்றறிக்கையில் படி, ஆயிரக்கணக்கான ஓய்வூதியர்களுக்கு ஏற்பட இருந்த சம்பள பிடித்தம் தவிர்க்கப்பட்டுள்ளது. முன்னதாக, தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் (டேப்ஸ்), கடந்த ஜனவரி-1ந் தேதி முதல் தகுதியான ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கும், பணியில் இருக்கும்போதே உயிரிழந்த அரசு ஊழியர்களின் குடும்பத்துக்கும் இடைக்கால மாதாந்திர ஓய்வூதியத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே 10 முதல் 18 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட பணிக்காலம் கொண்ட ஓய்வூதியர்களுக்கு ஒரே தொகையாக ரூ.10,000 மற்றும் அகவிலைப்படியை இடைக்கால தொகையாக வழங்கவும், அவர்களுக்கு ஏற்கெனவே அதிகமாக வழங்கப்பட்ட தொகையை செப்டம்பர் முதல் 10 தவணைகளில் பிடித்தம் செய்யவும் தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவு தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளது.
English Summary
The TN govt withdrawn the order to deduct an additional amount from interim pensions