தமிழ்நாட்டு சுற்றுலாத் துறையில் தனியார் முதலீடுகளை ஈர்க்க "தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு''..!
The Tamil Nadu Global Tourism Conference aims to attract private investments in Tamil Nadus tourism sector
சுற்றுலாத் துறையில் தனியார் முதலீட்டை ஈர்க்க தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு-2026-ஐ தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்துள்ளது. புதுமையான சுற்றுலா அனுபவங்கள் மற்றும் அதற்கேற்ற உள்கட்டமைப்பு திட்டங்களை ஏற்படுத்துதல் இம்மாநாட்டின் நோக்கம் என கூறப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
''2025-2026 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், "சுற்றுலாத் துறையில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில், பொது மற்றும் தனியார் துறை முதலீடுகளை ஈர்க்க பொருத்தமான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டு சுற்றுலாத் துறையில் தனியார் முதலீடுகளை ஈர்க்க "தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு" நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாத்துறையின் சார்பில் முதல் முறையாக செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள Four Points by Sheraton, ஓட்டல் வளாகத்தில் 02.02.2026 மற்றும் 03.02.2026 அன்று நடைபெறவுள்ள "தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு-2026" தமிழ்நாடு முதலமைச்சரால் துவக்கி வைக்கப்படவுள்ளது. தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையால் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ள இம்மாநாடு, மாநிலத்தின் பல்வேறு சுற்றுலாத் தலங்களை மேம்படுத்துவதற்கும், சுற்றுலா முதலீட்டாளர்களுடன் பொது தனியார் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும். “தமிழ்நாடு உலகளாவிய சுற்றுலா மாநாடு” தமிழ்நாடு சுற்றுலாத் துறையை உலகளாவிய முதலீட்டுத் தலமாக மாற்றும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இம்மாநாட்டில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள், சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்கள், சுற்றுலாவை மேம்படுத்துபவர்கள், சுற்றுலா மற்றும் வர்த்தக துறைகள் சார்ந்த வர்த்தக நிபுணர்கள் மற்றும் சுற்றுலா தொழில்முனைவோர்கள் ஆகியோரை அரசுடன் ஒருங்கிணைத்து, புதுமையான சுற்றுலா அனுபவங்கள் மற்றும் அதற்கேற்ற உள்கட்டமைப்பு திட்டங்களை ஏற்படுத்துதல் இம்மாநாட்டின் நோக்கமாகும்.
இம்மாநாட்டில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா முதலீட்டாளர்கள், சுற்றுலா பயண ஏற்பாட்டாளர்கள், சுற்றுலாவை மேம்படுத்துபவர்கள், சுற்றுலா மற்றும் வர்த்தக துறைகள் சார்ந்த வர்த்தக நிபுணர்கள், சுற்றுலா தொழில்முனைவோர்கள் மற்றும் அரசு உயர்தர பிரதிநிதிகள் இம்மாநாட்டில் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் சுற்றுலா தொடர்பான வேலைவாய்ப்பும் வர்த்தக வளர்ச்சியும் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விழாவில் அனைவரும் பங்குகொண்டு விழாவினை சிறப்பிக்க சுற்றுலாத் துறையின் சார்பில் பெருமிதத்துடன் அழைக்கிறோம்'' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
English Summary
The Tamil Nadu Global Tourism Conference aims to attract private investments in Tamil Nadus tourism sector