தமிழகத்தில் பீகாரில் வென்ற அதே யுக்தி! வன்னியர் + தலித் + தேவர் + நாடார்.. ஓட்டுகளை அள்ள பாஜக மெகாபிளான்.. தமிழகத்தில் எடுபடுமா?
The same strategy that won in Bihar in Tamil Nadu Vanniyar Dalit Thevar Nadar BJP mega plan to win votes Will it be adopted in Tamil Nadu
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், பாஜக தனது அரசியல் வியூகங்களை தீவிரப்படுத்தியுள்ளது. அதிமுக–பாஜக மீண்டும் கூட்டணி அமைத்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகளின் வாக்குகள் சிதறாமல் ஒருங்கிணைப்பதே பாஜகவின் பிரதான இலக்காக மாறியுள்ளது. இதற்காக, பீகாரில் வெற்றிகரமாக செயல்பட்ட ‘பீகார் பாணி’ சமூக ஒருங்கிணைப்பு மாதிரியை தமிழகத்திலும் அமல்படுத்த பாஜக முயற்சி மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
கடந்த ஆண்டு பீகாரில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில், நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம்–பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்குப் பின்னணியாக, மாநிலத்தில் உள்ள முக்கிய சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மற்றும் தலைவர்களை ஒரே குடையின் கீழ் இணைத்தது குறிப்பிடப்படுகிறது. முன்னேறிய, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகங்களின் வாக்குகளை தனித்தனி கட்சிகள் வழியாக ஒருங்கிணைத்ததே பீகார் வெற்றியின் மையம் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
தமிழக அரசியலில் இதுவரை திமுக அல்லது அதிமுக என இரு பெரும் திராவிடக் கட்சிகளே மாறி மாறி ஆட்சியை பிடித்து வந்துள்ளன. 1967-க்கு பிறகு மூன்றாவது சக்தி உருவாக முடியாத சூழலில், பாஜக தனித்து வளர்ச்சி அடைய முடியாமல் இருந்தது. இதனால், மாற்றத்தை உருவாக்குவோம் என வந்த பல கட்சிகளும் இறுதியில் திமுக அல்லது அதிமுகவுடன் கூட்டணி அமைத்ததே நடைமுறையாக இருந்து வருகிறது.
இந்த பின்னணியில், வரும் தேர்தலில் திமுகவை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில், அதிமுக–பாஜக கூட்டணி வாக்கு சிதறலைத் தடுக்கும் பணியில் கவனம் செலுத்துகிறது. அதன் ஒரு பகுதியாக, அதிமுகவில் இருந்து பிரிந்த அணிகளை மீண்டும் ஒருங்கிணைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன. அமமுக தலைவர் டிடிவி தினகரன் கூட்டணிக்குள் இணைந்துள்ள நிலையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணியையும் சேர்க்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் தென் மாவட்டங்களில் முக்குலத்தோர் வாக்குகளை ஒருங்கிணைக்க முடியும் என பாஜக நம்புகிறது.
கொங்கு மண்டலத்தில் கவுண்டர் சமூகத்தின் ஆதரவை பெறவும் கூட்டணி வியூகம் அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கவுண்டர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதும், பாஜகவில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த தலைவர்கள் அதிகம் இருப்பதும் இந்தப் பகுதியை கூட்டணிக்கான பலமாக மாற்றுகிறது. இதனால் கொங்கு மண்டல வாக்குகள் அதிமுக–பாஜக கூட்டணிக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது.
வட மாவட்டங்களில் வன்னியர் சமூகத்தின் ஆதரவைக் கூட்டணிக்குள் கொண்டு வர பாமக முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பாமக ஏற்கனவே கூட்டணியில் இருப்பதால், வன்னியர் வாக்குகள் பெருமளவில் கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில், பாமக நிறுவனர் ராமதாஸ் தனி அணியாக செயல்பட்டு வருவதால், அவரையும் மீண்டும் கூட்டணிக்குள் கொண்டுவர முயற்சிகள் நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தென் மாவட்டங்களில் தலித் சமூக வாக்குகளை ஒருங்கிணைப்பதற்காக, தமிழ் மக்கள் முன்னேற்றக் கழகம் மற்றும் புதிய தமிழகம் போன்ற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. இதன் மூலம் தேவேந்திர குல வேளாளர் வாக்குகளை பெற முடியும் என கணிக்கப்படுகிறது. மேலும், பாஜக தலைவர் எல். முருகன் அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், அந்த சமூகத்தின் ஆதரவைப் பெறவும் திட்டமிடப்பட்டுள்ளது.
நாடார் சமூக வாக்குகளை ஒருங்கிணைக்க, பொன். ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன், சரத்குமார் உள்ளிட்ட தலைவர்கள் மூலம் தென் மாவட்டங்களில் தாக்கம் ஏற்படுத்த பாஜக முயற்சி மேற்கொள்கிறது. இதுதவிர, தமிழ் மாநில காங்கிரஸ், ஐஜேகே, புதிய நீதிக்கட்சி போன்ற கட்சிகள் வழியாக உடையார், துளுவ வெள்ளாளர் உள்ளிட்ட சமூகங்களின் வாக்குகளையும் ஒருங்கிணைக்க முயற்சி நடைபெறுகிறது.
பீகாரில் அனைத்து சமூகங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளை ஒரே அணியில் இணைத்ததால் பாஜக தலைமையிலான கூட்டணி பெரும் வெற்றியை பெற்றது. அதே மாதிரியாக, தமிழகத்திலும் வன்னியர், கவுண்டர், நாடார், தலித் உள்ளிட்ட பெரும்பான்மை சமூகங்களின் வாக்குகளை ஒருங்கிணைக்கும் வகையில் அதிமுக–பாஜக கூட்டணியை வடிவமைத்து வருகிறது பாஜக. இந்த ‘பீகார் பாணி’ வியூகம் தமிழகத்திலும் கைக்கொடுப்பதா என்பது வரவிருக்கும் தேர்தலில் தான் தெரியவரும் என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
English Summary
The same strategy that won in Bihar in Tamil Nadu Vanniyar Dalit Thevar Nadar BJP mega plan to win votes Will it be adopted in Tamil Nadu