''உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்''; வழக்கறிஞர் பி.வில்சன் வாதம்..!
Lawyer P Wilson argues for the dismissal of the election case against Udhayanidhi Stalin
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என உதயநிதி தரப்பில் வாதிடப்பட்டது.
சட்டப்பேரவைத் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கக் கோரி அந்த தொகுதியில் போட்டியிட்ட தேனியைச் சேர்ந்த மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக் கோரி உதயநிதி தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுமீதான விசாரணை நீதிபதி ஜி.அருள்முருகன் முன்பு வந்தது. அப்போது உதயநிதி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் வாதிட்டார். அப்போது, இந்த தேர்தல் வழக்கு 45 நாட்கள் காலக்கெடுவுக்குப் பிறகு தொடரப்பட்டுள்ளதால், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, இந்த வழக்கு நிலைக்கத்தக்கது அல்ல என்று வாதிட்டார்.

அத்துடன், தேர்தல் முடிவு வெளியான நாளையும் கணக்கில் கொண்டால் ஜூன் 17 அன்று தேர்தல் வழக்கு தொடர்ந்திருக்க வேண்டும் என்றும், ஆனால், ஒருநாள் தாமதமாக ஜூன் 18-ஆம் தேதி தொடரப்பட்டுள்ளதால் இந்த வழக்கை நிராகரித்து தள்ளுபடி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார்.
அதற்கு மிலானி தரப்பில் வாதிடுகையில், ''இந்த வழக்கு உரிய காலக்கெடுவுக்குள் தொடரப்பட்டு இருப்பதை உயர் நீதிமன்ற பதிவுத்துறை அனுமதித்து ஏற்றுக் கொண்டுள்ளதால் இது தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும்.'' என்று குறிப்பிடப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் இரு தரப்பும் தங்கள் எழுத்துப்பூர்வ வாதங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டு விசாரணையை வரும் அக்.26-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
English Summary
Lawyer P Wilson argues for the dismissal of the election case against Udhayanidhi Stalin