'சிஜேபி, திமுக எதுவாக இருந்தாலும் மக்களுக்காகப் போராட உரிமை உண்டு; ஆனாலும் சிஜேபி போன்ற கட்சிகளுக்கு அரசியல் ஆதரவு இல்லை'; அண்ணாமலை..!
Annamalai says that parties like the CJP lack political support
'வீ த லீடர்ஸ்' அமைப்பு சார்பில் மண்டல அளவிலான 'பெண்கள் வளர்ச்சி மாநாடு' கிருஷ்ணகிரி பையனப்பள்ளியில் இன்று மாலை நடந்தது. இந்த நிகழ்வில் கிருஷ்ணகிரி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நரசிம்மன், சாந்திவிக்ரம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் தாரகை மகளிர் சுயஉதவிக் குழு தொடங்கப்பட்டு, -8 குழுவினருக்கு அரசு மற்றும் தனியார் வங்கிகள் மூலம் ரூ.1.48 கோடி கடனுதவிகளை, அமைப்பின் தலைவர் அண்ணாமலை வழங்கி உரையாற்றினார்.
'வீ த லீடர்ஸ்' அமைப்பு சார்பில் பதிவு செய்யப்பட்ட தாரகை மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டுள்ளது. பெண்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும், தலைநிமிர்ந்து வாழ வேண்டும் என்றால் அவர்களின் கைகளில் பொருளாதார சக்தியை வழங்க வேண்டும் என்றும், இதற்காக வருகிற 06 மாதங்களில் புதிதாக 25 மகளிர் சுய உதவிக் குழுக்கள் தொடங்கப்படும் என்று குறிப்பிட்டார்.
அத்துடன், இந்தியாவில் வாக்குப்பதிவின் போது பெண்கள் 51 சதவீதமும், ஆண்கள் 49 சதவீதம் வாக்களிக்கின்றனர். வாக்குச்சாவடியில் பெண்கள் முன்னணியில் இருந்தாலும், அரசியல் அதிகாரம், சட்டம் இயற்றும் இடங்களில் பெண்களின் பிரதிநிதித்துவம் 10 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இந்த நாட்டின் எதிர்காலம், குழந்தைகள் நலமுடன் வாழ, குடும்பத் தலைவிகளுக்கு உரிய மரியாதை கிடைக்க பெண்களுக்கு போதிய அரசியல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்று பேசினார்.
அதேப்போன்று குழந்தைகள் நிறைய மொழிகள் கற்க வேண்டும் என்றும் அவ்வாறு கற்கும் போது, நமக்கு புதிய கலாச்சாரத்தின் நுட்பங்களை அறிந்து கொள்ள முடியுமென்றும், நாட்டின் எந்த பகுதிக்கு சென்றாலும் நாம் பிழைத்து கொள்வோம் என்கிற நம்பிக்கையை கொடுக்கிறது என்று கூறினார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பேசப்படும், தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகள், தமிழகத்திற்கு இலக்கணமாக திகழ்கிறது என்று தெரிவித்தார்.
அத்துடன், மத்திய, மாநில அரசுகள் சரியாக செயல்படும்போது சரி என்றும், தவறாக செய்யும் போது தவறு என்றும் கூற வேண்டும் என்று தெரிவித்ததோடு, போட்டோ ஷூட்கள், விளம்பரங்கள், தொடக்க விழாக்களுக்கு கோடிக்கணக்கில் செலவழிப்பது, வெற்று நலத்திட்டங்களை அறிவிப்பது மக்களுக்கு நிரந்தர பலன் தராது என்று சுட்டிக்காட்டினார்.
அதாவது, உண்மையான பொருளாதார வளர்ச்சியும், வேலைவாய்ப்புகளுமே மக்களுக்குத் தேவை என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும், காகித வளர்ச்சியாக இல்லாமல், சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் உண்மையான பொருளாதாரப் புரட்சியை நாம் உருவாக்க வேண்டும் என்றும், சிஜேபி, திமுக என எந்த அமைப்பாக இருந்தாலும் மக்களுக்காகப் போராட உரிமை உண்டு. அடக்குமுறையைக் கையாண்டால் எதிர்ப்பின் வேகம் அதிகரிக்கும் என்பதை ஆட்சியாளர்கள் உணர வேண்டும் என்று குறிப்பிட்டதோடு,அதேநேரம், கொள்கை முரண்பாடுகள் காரணமாக சிஜேபி போன்ற கட்சிகளுக்கு அரசியல் ஆதரவு இல்லை என்று தெரிவித்தார்.
அத்துடன், வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்றபோது களப்பணி செய்யாமல், தேர்தல் முடிந்து புதிய அரசு அமைந்து 06 மாதங்களுக்குப் பிறகு வாக்காளர் பட்டியல் சரியில்லை எனக் காங்கிரஸ் குற்றம்சாட்டுவது அரசியல் நாடகம் என்று தெரிவித்தார்.
சிஜேபி கட்சியினர், மாணவர்கள் தவறு செய்திருந்தால் சட்டப்படியான நடைமுறைகளைப் பின்பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, பழிவாங்கும் நோக்கில் செயல்படக் கூடாது என்று வலியுறுத்தினார்.
மேலும், வெளிநாட்டு நிதியுதவி பெற்று உள்நாட்டில் குழப்பம் விளைவிப்பவர்கள் மீது சமூக வலைதளங்களில் வெறும் கருத்துப் பரிமாற்றங்கள் செய்யாமல், உளவுத்துறையும், காவல்துறையும் கொண்டு நேரடி சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இளைஞர்கள் புதிய அரசியல் கட்சிகளை நோக்கி செல்லும் போது, ஆழமாக யோசிக்க வேண்டும் என்றும், மாற்றம் என சொல்வது எளிது. ஆனால், அதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது கடினம் என்று குறிப்பிட்டார். எனக்கும், முதல்வர் விஜய்க்கும் எந்த தொடர்பும் இல்லை. இருப்பினும் தேர்தலுக்கு முன்பு திமுக அரசு தவெக-வுக்கு நெருக்கடி கொடுத்தபோது குரல் கொடுத்தேன் என்று அதனையும் நிகழ்வில் பதிவு செய்து பேசினார்.
அத்துடன், எனக்கு யாரும் தேசியம் பற்றி பாடம் எடுக்க வேண்டாம் என்றும், நான் எல்லா மாநிலங்களுக்கும் சென்று வந்து உள்ளேன். 35 சதவீத வாக்குகளை பெறுவதே நம் இலக்கு. கிருஷ்ணகிரி அணையை கட்டிய காமராஜருக்கு அரசு சிலை அமைக்க வேண்டும் என்று அண்ணாமலை அங்கு குறிப்பிட்டு பேசினார்.
English Summary
Annamalai says that parties like the CJP lack political support