'பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை நேரலையில் ஒளிபரப்பக் கூடாது’: தேசவிரோத உள்ளடக்கங்கள் இடம்பெறக் கூடாது'; TV சேனல்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை..!
The central government has warned television channels against featuring content that promotes an anti national sentiment
தொலைக்காட்சி சேனல்கள் ஒளிபரப்பும் நிகழ்ச்சிகள் மூலமாக சமூக நல்லிணக்கத்துக்குபங்கம் விளைவிக்கும் வகையில் அல்லது தேசவிரோத மனப்பான்மையை ஊக்குவிக்கும் வகையில் எந்தவிதமான உள்ளடக்கங்களும் இடம்பெறக் கூடாது என மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேபிள் தொலைக்காட்சி நெட்வொர்க் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் உள்ள இந்த விதிகளை காட்சி ஊடகங்கள் (சேனல்கள்) கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்றும் மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சில ஒளிபரப்புகள் விதிகளை மீறிச் செயல்பட்டுள்ளதாகத் துறைகளுக்கு இடையேயான குழு சுட்டிக் காட்டியுள்ளதைத் தொடர்ந்து இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
சேனல்களில் ஒளிபரப்புகளில் முறையற்ற நடத்தைகள் அல்லது ஆபாசமான மொழிகள் இயல்புபடுத்தப்படுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது பாதுகாப்புப் படையினரின் நேரலை ஒளிபரப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

அத்துடன், ஆபரேஷன் முடியும் வரை அங்கீகரிக்கப்பட்ட அதிகாரியின் அதிகாரபூர்வ தகவல்களுக்கு மட்டுமே ஊடகங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், குற்றச் சம்பவங்கள் அல்லது வன்முறைகளைக் செய்தி சேகரிக்கும் போது உண்மைத்தன்மை, சமநிலை மற்றும் பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என மத்திய அரசு அனைத்து சேனல்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
குறிப்பாக, வேண்டுமென்றே பரப்பப்படும் வதந்திகள், பொய்யான தகவல்கள் மற்றும் அரைகுறை உண்மைகளைத் தவிர்க்குமாறும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான காட்சிகளை வெளியிடும்போது கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்ந்து, இயற்கை இடர்பாடுகள் மற்றும் விபத்துகளின் போது பீதியைக் தவிர்க்கக் காட்சிகள் முத்திரையிடப்பட வேண்டும் என்றும், சர்வே ஆஃப் இந்தியா வெளியிட்ட அதிகாரபூர்வ இந்திய வரைபடங்களை மட்டுமே கிராபிக்ஸ் மற்றும் டிஜிட்டல் ஒளிபரப்புகளில் பயன்படுத்த வேண்டும் என்றும், நேரலை விவாதங்களில் வகுப்புவாத மோதல்களைத் தூண்டும் கருத்துக்களைத் தவிர்க்க வேண்டுமென்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அவதூறான கருத்துக்களை உடனுக்குடன் மியூட் செய்வது அல்லது துண்டிப்பது போன்ற உடனடி நடவடிக்கைகளை சேனல்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும், செயற்கை நுண்ணறிவைப் பொறுத்தவரை, அது செய்தி உள்ளடக்கங்களின் நம்பகத்தன்மைக்கு எந்த வகையிலும் குந்தகம் விளைவிக்கக் கூடாது என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
English Summary
The central government has warned television channels against featuring content that promotes an anti national sentiment