தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணி: 'ஜனநாயகத்துக்கு எதிரானது': உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ள திமுக அரசு..!
The DMK government has filed a petition in the Supreme Court against the special revision of the voter list in Tamil Nadu
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி ஜனநாயகத்துக்கு எதிரானது என அதற்கு எதிராக திமுக அரசு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. பீகாரை தொடர்ந்து, தமிழகம், கேரளா, மேற்கு வங்கம் உட்பட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி, நாளை முதல் ஒரு மாதம் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதற்கு, தி.மு.க., காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அ.தி.மு.க., - பா.ஜ., உள்ளிட்ட தே.ஜ., கூட்டணி கட்சிகள் வரவேற்றுள்ளன. இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள தனியார் ஹோட்டலில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது என தீர்மானனம் நிறைவேற்றப்பட்டது.

அதன்படி, தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: ''தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் கொண்டு வருவது வாக்காளர்களை நீக்கும் தந்திரம். பீஹாரில் நடந்த இப்பணிக்கு எதிரான வழக்கில் இறுதி உத்தரவு இன்னும் பிறப்பிக்கவில்லை. இச்சூழலில் தமிழகத்தில் இதனை செய்வது ஜனநாயகத்துக்கு எதிரானது.
தமிழகத்தில் தேர்தல் நடக்க சில மாதங்களே உள்ள நிலையில் இப்பணியை ஏற்க முடியாது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் காலகட்டத்தில் பண்டிகைகள் வருவதால் வாக்காளர் பட்டியலில் சேர விரும்பும் வாக்காளர்களின் பெயர் விடுபட நேரிடும்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தமிழக மக்களின் ஓட்டுரிமைக்கு எதிரான செயல். இதற்கு தடை அல்லது நடவடிக்கை கைவிட வேண்டும்.'' என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. குறித்த மனு மீதான விசாரணை வரும் 06 அல்லது 07-ஆம் தேதி விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுவதாக திமுக வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
English Summary
The DMK government has filed a petition in the Supreme Court against the special revision of the voter list in Tamil Nadu