செந்தில் பாலாஜியை பழிவாங்குவதே நோக்கம்!வழக்குகளால் திமுகவை அழித்துவிட முடியாது! ஆர்.எஸ்.பாரதி பேச்சு!
The aim is to exact revenge on Senthil Balaji The DMK cannot be destroyed by these cases RS Bharathi remarks
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடர்ச்சியாக மேற்கொள்ளப்படும் வழக்கு நடவடிக்கைகள் அரசியல் பழிவாங்கும் நோக்கத்துடன் நடைபெறுகின்றன என்றும், இதுபோன்ற வழக்குகளால் திமுகவை ஒருபோதும் வீழ்த்த முடியாது என்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.
தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்பான பல்வேறு வழக்குகள் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தவெக எம்எல்ஏக்கள் குதிரைப் பேரம் தொடர்பான வழக்கில் அவரது பெயர் இணைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியான நிலையில், காவல்துறையினர் கைது நடவடிக்கைக்கு முயன்றனர். இதையடுத்து செந்தில் பாலாஜி நீதிமன்றத்தை அணுகி முன்ஜாமீன் பெற்றதுடன், விசாரணைக்கு தொடர்ந்து ஆஜராகி வருகிறார்.
அதேநேரத்தில், டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அவரது தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தியது. பின்னர் கைது நடவடிக்கைக்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், உச்சநீதிமன்றம் அவருக்கு முன்ஜாமீன் வழங்கியதோடு, கைது செய்ய இடைக்காலத் தடையும் விதித்துள்ளது.
இந்தச் சூழலில் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ். பாரதி, "கொங்கு மண்டலத்தில் செந்தில் பாலாஜிக்கு பொறுப்பு வழங்கப்பட்ட பிறகு திமுகவின் செல்வாக்கு அதிகரித்தது. அதனால்தான் அவரை அரசியல் ரீதியாக பழிவாங்கும் நோக்கில் தொடர்ந்து குறிவைத்து வருகிறார்கள். ஏற்கனவே 19 மாதங்கள் சிறையில் இருந்தவர் செந்தில் பாலாஜி. வழக்குகள் போட்டு யாரையும் அழிக்க முடியாது; திமுகவையும் வீழ்த்த முடியாது" என்று தெரிவித்தார்.
மேலும், "சிபிஐ வழக்குகள் உள்ளிட்ட பல அரசியல் சோதனைகளை திமுக ஏற்கனவே எதிர்கொண்டுள்ளது. 2001-ஆம் ஆண்டு கலைஞர் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டபோதும் இறுதியில் எந்த வழக்கும் நிலைக்கவில்லை. அதுபோலவே தற்போது அரசியல் விளம்பரத்திற்காக பொய் வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன" என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
தற்போதைய தமிழக அரசின் செயல்பாடுகளையும் விமர்சித்த ஆர்.எஸ். பாரதி, "மேகதாது அணை விவகாரம், நீட் பிரச்சினை, மின்வெட்டு, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட மக்களின் முக்கிய பிரச்சினைகளில் அரசு கவனம் செலுத்தவில்லை. மாறாக எதிர்க்கட்சியினரை குறிவைத்து வழக்குகள் பதிவு செய்வதில்தான் முழு கவனமும் செலுத்துகிறது. மின் கட்டணத்தை உயர்த்தி மக்களிடமிருந்து அதிக பணம் வசூலிப்பதும் ஒரு வகையான மோசடிதான்" என்று சாடினார்.
செந்தில் பாலாஜி மீதான நடவடிக்கைகள் அரசியல் களத்தில் தொடர்ந்து விவாதத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், ஆர்.எஸ். பாரதியின் இந்தக் கருத்துகள் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் இடையேயான மோதலை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
English Summary
The aim is to exact revenge on Senthil Balaji The DMK cannot be destroyed by these cases RS Bharathi remarks