எடப்பாடி கூட்டத்தில் பறந்த தவெக கொடி! அதிமுக கூட்டணியில் விஜய்..பிள்ளையார் சுழி போட்டாச்சாம்! அதிர்ச்சியில் திமுக!
Thaveka flag flying at Edappadi meeting Vijay in AIADMK alliance Pillaiyar has thrown a fit DMK in shock
குமாரபாளையம் தேர்தல் பிரச்சாரத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உரையாற்றிய போது, தவெக கூட்டணி குறித்த அவரது பேச்சு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2026 சட்டசபை தேர்தலை முன்னிட்டு அதிமுக தலைமை தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், நாமக்கல் மாவட்டத்தின் குமாரபாளையத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பேசினார் எடப்பாடி பழனிசாமி. அப்போது, “திமுக வெற்று கூட்டணி அமைத்துள்ளது. ஆனால் அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி உருவாகும்” என்று அவர் கூறினார்.
அவரது இந்த உரையின்போது கூட்டத்தில் சிலர் திடீரென தமிழக வெற்றிக் கழக கொடியை உயர்த்தி ஆரவாரம் செய்தனர். அதனை கவனித்த எடப்பாடி பழனிசாமி, “பாருங்க... கொடி பறக்குது! கூட்டணிக்கு பிள்ளையார் சுழி போட்டாச்சு. ஸ்டாலின் அவர்களே, இந்த ஆரவாரம் உங்க செவியைத் துளைக்கும்!” எனக் கூறியதோடு கூட்டம் முழுவதும் கைதட்டலால் முழங்கியது.
இது, தவெக அதிமுக கூட்டணியில் இணையப் போகிறது என்ற ஊகத்தை வலுப்படுத்தியுள்ளது. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி மற்றும் நடிகர் விஜய் தொலைபேசியில் பேசியதாகச் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், இப்போது அவரின் உரை புதிய அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
அதே கூட்டத்தில் மேலும் பேசிய எடப்பாடி பழனிசாமி, திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். “இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கிய அரசு என்ற சாதனையை திமுக அரசு படைத்துள்ளது. அதிமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்பட்டது. ஆனால் இன்று மக்கள் உறுப்புகளை விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. திமுக எம்.எல்.ஏ. மருத்துவமனையில் நடந்த கிட்னி முறைகேட்டில் தொடர்புடையவர் என்றே அரசு அமைத்த குழுவே கூறியுள்ளது. ஆனாலும் அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், கரூரில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்து, “அந்த துயரத்திற்கான விசாரணையை திமுக அரசு ஏன் அவசர அவசரமாக மேற்கொள்கிறது? அதில் உள்நோக்கம் இருக்கிறது. இந்தச் சம்பவத்தில் யார் ஈடுபட்டிருந்தாலும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சிபிஐ விசாரணை மட்டுமே நியாயத்தை வெளிக்கொணரும்” எனக் கூறினார்.
அத்துடன், துணை முதல்வர் குறித்து பேசும் போதும் அவர் கடுமையாக தாக்கினார். “மக்கள் துயரத்தில் இருக்க, துணை முதல்வர் வெளிநாட்டுப் பயணம் போயிருக்கிறார். மருத்துவமனையில் வந்து பாராட்டுக் காட்டி, திரும்ப துபாய் போய்விட்டார். இதுவே திமுக ஆட்சியின் உண்மை முகம்” எனவும் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
இவ்வாறு அதிமுக தலைமையில் வலுவான கூட்டணி உருவாகும் என கூறியதோடு, தவெக கொடி பறந்த அந்த காட்சியே, வரவிருக்கும் அரசியல் இணைப்புகளுக்கான தொடக்கச் சின்னமாகப் பார்க்கப்படுகிறது.
English Summary
Thaveka flag flying at Edappadi meeting Vijay in AIADMK alliance Pillaiyar has thrown a fit DMK in shock