அதிமுக கூட்டணிக்குள் பரபரப்பு: 50 தொகுதிகளில் பாஜக போட்டியா..? 50 தொகுதிகளுக்கு பாஜக சுற்றுப்பயண பொறுப்பாளர்கள் நியமனம்!
Tension within the AIADMK alliance Will BJP contest in 50 seats BJP appoints tour in charges for 50 seats
தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக சார்பில் 50 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு சுற்றுப்பயண பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, அதிமுக–பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) தொகுதி பங்கீடு பேச்சுகள் நடைபெற்று வரும் சூழலில், பாஜக வெளியிட்டுள்ள இந்த பட்டியல் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் பிரசாரம், கூட்டணி, தொகுதி பங்கீடு, பொதுக்கூட்டங்கள் என தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றன. இந்த சூழலில், அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணியில் பாஜக, பாமக (அன்புமணி), அமமுக, தமாகா, இந்திய ஜனநாயக கட்சி, புதிய நீதி கட்சி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், புரட்சி பாரதம் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
சமீபத்தில் மதுராந்தகத்தில் நடைபெற்ற என்டிஏ பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பிரசாரம் மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து, தமிழக பாஜக சார்பில் தேர்தலை முன்னிட்டு தொடர் சுற்றுப்பயணம் மேற்கொள்ள 50 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு பொறுப்பாளருக்கும் 2 முதல் 7 தொகுதிகள் வரை ஒதுக்கப்பட்டுள்ளன.
அதன்படி, முன்னாள் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு சிங்காநல்லூர், மதுரை தெற்கு, விருகம்பாக்கம், காரைக்குடி, ஸ்ரீவைகுண்டம், பத்மநாபபுரம் ஆகிய 6 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மத்திய இணை அமைச்சர் எல்.முருகனுக்கு திருப்பரங்குன்றம், ராதாபுரம், வால்பாறை, திருப்பூர் வடக்கு, உதகமண்டலம் ஆகிய தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழிசை சவுந்தரராஜனுக்கு மயிலாப்பூர், கும்மிடிப்பூண்டி, நாங்குநேரி, பொள்ளாச்சி, கிள்ளியூர் ஆகிய தொகுதிகளும், பொன்.ராதாகிருஷ்ணனுக்கு பழனி, தென்காசி, மேட்டுப்பாளையம், பரமக்குடி ஆகிய தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளன. வானதி சீனிவாசனுக்கு திருப்பூர் தெற்கு, குன்னூர், கோயம்புத்தூர் தெற்கு ஆகிய தொகுதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதேபோல் எச்.ராஜா, கேடி ராகவன், விபி துரைசாமி உள்ளிட்ட தலைவர்களுக்கும் பல்வேறு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மொத்தமாக 50 தொகுதிகளுக்கு பாஜக சுற்றுப்பயண பொறுப்பாளர்களை மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நியமித்துள்ளதால், “இந்த 50 தொகுதிகளில்தான் அதிமுக கூட்டணியில் பாஜக போட்டியிட உள்ளதா?” என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே பாஜக 50–56 தொகுதிகள் வரை கோருவதாக தகவல்கள் வெளியான நிலையில், அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்றால் அதிமுக குறைந்தது 150 தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அந்த கணக்கில், பாஜக 50 தொகுதிகளில் போட்டியிட்டால், மீதமுள்ள கூட்டணி கட்சிகளுக்கு எவ்வளவு தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இதனால், பாஜக 50 தொகுதிகளை முன்கூட்டியே குறி வைத்து சுற்றுப்பயண பொறுப்பாளர்களை நியமித்துள்ளதா, அல்லது இது வெறும் அமைப்பு வலுப்படுத்தும் நடவடிக்கையா என்ற விவாதம், அதிமுக கூட்டணிக்குள் தீவிரமாக பேசப்பட்டு வருகிறது.
English Summary
Tension within the AIADMK alliance Will BJP contest in 50 seats BJP appoints tour in charges for 50 seats