சாலை நெரிசலுக்கு தீர்வு தேடும் தமிழக அரசு...! ரூ.2 லட்சம் கோடி திட்டம் குறித்து அமைச்சர் தகவல்...! - Seithipunal
Seithipunal


மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை விடப்பட்டிருந்த நிலையில், தமிழக சட்டசபை இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் கூடியது. த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு சட்டசபையில் இன்று கேள்வி நேரம் நடைபெற்றது. இதில் பல்வேறு தொகுதிகளின் முக்கிய பிரச்சினைகளை உறுப்பினர்கள் அடுத்தடுத்து எழுப்பியதால், அவை பரபரப்பாக காணப்பட்டது. சாலை வசதி, ரெயில்வே மேம்பாலம், போக்குவரத்து நெரிசல் உள்ளிட்ட பொதுமக்களின் அன்றாட பிரச்சினைகள் குறித்து கேள்விகள் முன்வைக்கப்பட்டன. உறுப்பினர்களின் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர்.

கேள்வி நேரத்தின்போது உறுப்பினர் மாரிமுத்து, திருத்துறைப்பூண்டியில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலை அவையின் கவனத்திற்கு கொண்டு வந்தார். அப்பகுதியில் ரெயில்வே கிராசிங்கை கடக்க பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருப்பதால், ரெயில்வே மேம்பாலம் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்குமா என அவர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, ரெயில்வே மேம்பாலங்கள் அமைப்பது தொடர்பாக துறை ரீதியாக விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார். ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் விரைவில் உரிய அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அவர் கூறினார்.

திருத்துறைப்பூண்டி மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் ரெயில்வே கிராசிங்குகள் உள்ள பகுதிகளில் மேம்பாலங்கள் இல்லாததால் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாக அமைச்சர் தெரிவித்தார். சில இடங்களில் ரெயில்வே கிராசிங்கை கடப்பதற்காக ஒரு மணி நேரம் வரை காத்திருக்க வேண்டிய சூழல் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் இதேபோன்ற பிரச்சினைகள் அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவித்த அமைச்சர், அனைத்து மாவட்டங்களிலும் ரெயில்வே மேம்பாலங்கள் அமைப்பதற்கு முன்னுரிமை அளித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

அதேபோல், நகர்ப்புறங்களில் நீண்டகாலமாக நிலவி வரும் சுற்றுச்சாலை பிரச்சினைக்கும் விரைவில் தீர்வு காணப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.தொடர்ந்து முன்னாள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசுகையில், சென்னை முதல் திருச்சி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருவதாக தெரிவித்தார்.

இந்த நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரை உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் திட்டம் அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் ஒப்புதல் பெறப்பட்டு, பணிகளை தொடங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார். ஆனால், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டதாக தெரிவித்த எடப்பாடி பழனிசாமி, நிலுவையில் உள்ள பணிகளை மீண்டும் தொடங்கி விரைந்து நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

இதற்கு பதிலளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, சென்னை முதல் கன்னியாகுமரி வரை சாலையை 8 வழிச்சாலையாக மேம்படுத்தும் திட்டத்தை தமிழக அரசு முன்னெடுத்து வருவதாக தெரிவித்தார். இதுதொடர்பாக மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சருடனான சந்திப்பிலும் வலியுறுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

சென்னை முதல் கன்னியாகுமரி வரையிலான சாலை கட்டமைப்பை வலுப்படுத்துவது, அடுத்த 30 ஆண்டுகளில் உருவாகக்கூடிய போக்குவரத்து நெரிசலுக்கு நீண்டகால தீர்வாக அமையும் என அமைச்சர் தெரிவித்தார்.திருச்சியில் இருந்து செங்கல்பட்டு வருவதற்கு சுமார் 4 மணி நேரம் ஆகும் நிலையில், செங்கல்பட்டில் இருந்து சென்னை நகருக்குள் வருவதற்கே சுமார் 3 மணி நேரம் ஆகிறது. அதேபோல் பெங்களூருவில் இருந்து திருவள்ளூர் வரை சுமார் 3 மணி நேரத்தில் வந்துவிட முடிந்தாலும், திருவள்ளூரில் இருந்து சென்னை நகருக்குள் வருவதற்கு மேலும் 3 மணி நேரம் வரை செலவாகிறது என அவர் தெரிவித்தார்.

மகாபலிபுரத்தில் இருந்து சென்னை வருவதிலும் அதிக அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக சுட்டிக்காட்டிய அமைச்சர், சென்னையை சுற்றியுள்ள முக்கிய சாலைகளை விரிவுபடுத்தி மேம்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.இதுதொடர்பாக மத்திய அரசுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், விரைவில் சாதகமான அறிவிப்பு வெளியாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் நடைபெற்று வரும் சாலை திட்டங்களில் ஏற்பட்டுள்ள தாமதம் குறித்தும், தமிழகத்திற்கு தேவையான புதிய சாலை திட்டங்கள் குறித்தும் மத்திய சாலை போக்குவரத்துத்துறை அமைச்சரிடம் நேரில் எடுத்துரைத்துள்ளதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.

அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான சாலை திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த மத்திய அரசு தயாராக இருப்பதாகவும், மத்திய சாலை நிதியை ரூ.1,000 கோடியாக உயர்த்தி வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.முந்தைய ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட பல்வேறு நிர்வாக ரீதியான இடர்பாடுகள் காரணமாக தமிழகத்திற்கு தேவையான சில சாலை திட்டங்கள் வருவதில் தாமதம் ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த இடர்பாடுகளை களைந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டால், தமிழகத்திற்கு மத்திய அரசிடம் இருந்து ரூ.2 லட்சம் கோடி மதிப்பிலான சாலை திட்டங்களை கொண்டு வர முடியும் என்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu government looking solution road congestion Minister informs about 2 lakh crore project


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->