'தவறிழைத்த அதிகாரிகளை காப்பாற்றுவதா'...? - முதல்வருக்கு சி.பி.எம். மாநில செயலாளர் சரமாரி கேள்வி...! - Seithipunal
Seithipunal


இடதுசாரி இயக்கங்களை கட்டுப்படுத்தும் நோக்கில் செயல்பட்டதாகக் கூறப்படும் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, சி.பி.எம். மாநில செயலாளர் பெ.சண்முகம், தமிழக முதலமைச்சர் விஜய்க்கு கடிதம் எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் அவர் தெரிவித்திருப்பதாவது,"தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்ற கூட்டத்தில், இடதுசாரி இயக்கங்கள் மற்றும் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி அமைப்பினர் நடத்தும் போராட்டங்களில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் பங்கேற்பதைத் தடுக்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வித்துறை, காவல்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என சுற்றறிக்கை வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைக்கு மிகுந்த முன்னுரிமையும் அவசரத்தன்மையும் வழங்கப்பட்டதுடன், மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையும் கேட்கப்பட்டுள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள போராட்ட உரிமையை கட்டுப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கை சட்டவிரோதமானது என்றும், திட்டமிட்டு இடதுசாரி அமைப்புகளை குறிவைக்கும் முயற்சியாகவே இதை பார்க்க வேண்டியுள்ளது என்றும் பெ.சண்முகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அரசின் நிர்வாகக் கட்டமைப்பில் உயர்ந்த பொறுப்பில் இருக்கும் தலைமைச் செயலாளர் எடுக்கும் முடிவு அரசின் முடிவாகவே கருதப்படும் என்பதால், இந்த விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இடதுசாரி அமைப்புகள் மட்டுமின்றி எந்தவொரு அமைப்பும் ஜனநாயக முறையில் போராடுவதற்கான உரிமையை பெற்றுள்ளது. அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள இந்த உரிமையை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து நடவடிக்கை மேற்கொள்வது சட்டத்திற்கும் ஜனநாயக நடைமுறைக்கும் எதிரானது என கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கல்வி நிறுவனங்களுக்குள் காவலர்களை அனுப்பி நடவடிக்கை எடுக்கும் வகையிலான செயல்பாடுகளுக்கு இது வழிவகுக்கும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் தலைமைச் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் ஜனநாயக இயக்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்காமல், சுற்றறிக்கையை கல்லூரிகளுக்கு அனுப்பிய இணை இயக்குநரிடம் மட்டும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.இந்த விவகாரம் தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் சட்டமன்றத்தில் மன்னிப்பு கோரியுள்ளார்.

ஆனால், யாரிடமும் மன்னிப்பு கோர வேண்டும் என்பது தங்களது கோரிக்கை அல்ல என்றும், தவறிழைத்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருவதாகவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.இதுகுறித்து அரசு தரப்பில் இதுவரை பொறுப்பான விளக்கம் எதுவும் அளிக்கப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை வட்டாட்சியர், அந்த வட்டத்திற்குட்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் விவரங்களை சேகரிக்க கிராம நிர்வாக அலுவலர்களுக்கு உத்தரவிட்டதாகவும் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசுப் பதவியில் இருக்கும் அதிகாரி ஒருவர் அரசியல் கட்சி உறுப்பினர்களின் விவரங்களை சேகரிக்க உத்தரவிட்டது நேரடியான அச்சுறுத்தல் மட்டுமின்றி, அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான செயலும், அதிகார துஷ்பிரயோகமும் ஆகும் என பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும், வட்டாட்சியரின் பயிற்சி காலம் நிறைவடைந்ததால் அவரை இடமாற்றம் செய்வதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.பின்னர், அரசு ஊழியர் நடத்தை விதிகளின் 17 ஏ பிரிவின் கீழ் விளக்கம் கேட்கப்பட்டதாகவும், இதன்மூலம் தீவிரமான குற்றச்சாட்டை சிறிய அளவிலான தவறாக கருதி அரசு மென்மையான அணுகுமுறையை கடைப்பிடிப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

வட்டாட்சியரின் நடவடிக்கைக்கும் அரசுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு காரணமாகவே அவர் அந்த சுற்றறிக்கையை அனுப்பியதாகவும் சட்டத்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.ஆனால், அரசுப் பதவியில் இருக்கும் ஒருவர் தனிப்பட்ட நோக்கத்திற்காக தனது அதிகாரத்தை பயன்படுத்தியிருந்தால், அது சாதாரண தவறாக கருத முடியாது என்றும், கடுமையான நடவடிக்கைக்கு உரிய விவகாரம் என்றும் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார்.

இத்தகைய சூழலில், மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் தேவையில்லை என்ற வகையில் அமைச்சர் அளித்த பதிலும், வட்டாட்சியரிடம் 17 ஏ பிரிவின் கீழ் மட்டும் விளக்கம் கேட்கப்பட்டிருப்பதும், தவறிழைத்த அதிகாரியை தண்டிப்பதற்குப் பதிலாக அவரை பாதுகாக்கும் முயற்சியாகவே தெரிகிறது என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த விவகாரத்தில் முதல்-அமைச்சர் நேரடியாக தலையிட்டு, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், குஜிலியம்பாறை வட்டாட்சியர் உள்ளிட்ட தவறிழைத்த அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சி.பி.எம். மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், தலைமைச் செயலாளர் பங்கேற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை உடனடியாக ரத்து செய்வதுடன், அதனடிப்படையில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையையும் முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Protecting erring officials CPM State Secretary questions Chief Minister


கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் விஜய் தலைமையிலான இந்த 100 நாள் ஆட்சி...




Seithipunal
--> -->