அதிரடி காட்டும் திமுக! காங்கிரஸ் எம்எல்ஏக்கள் செயல்பாடுகள் குறித்த சர்வே! ரிப்போர்ட்டை தயார் செய்த திமுக.. அதிர்ச்சியில் கதர்கள்!
Survey on the activities of Congress MLAs DMK prepares report Kathirs are shocked
தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திராவிட முன்னேற்றக் கழகம் – இந்திய தேசிய காங்கிரஸ் கூட்டணியைச் சுற்றிய இழுபறி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோருடன் திமுக எம்பி கனிமொழி டெல்லியில் சந்தித்து ஆலோசனை நடத்தியதற்கு பின் 10 நாட்கள் கடந்தும், கூட்டணி இன்னும் அதிகாரப்பூர்வமாக இறுதி செய்யப்படாதது அரசியல் வட்டாரங்களில் கேள்விகளை எழுப்பியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் நடைபெற்ற அந்த சந்திப்பில், சுமார் 45 நிமிடங்கள் இரு தரப்பும் விரிவாக ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. அந்த சந்திப்பின் போது திமுக தலைமையின் நிலைப்பாடுகளை கனிமொழி, ராகுல் காந்தியிடம் தெளிவாக எடுத்துரைத்ததாகவும், அதேபோல் காங்கிரஸ் தரப்பிலிருந்து சில கணக்குகளும் முன்வைக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இந்த விவரங்களை கனிமொழி, சென்னை திரும்பிய பின்னர் திமுக தலைமைக்கு எடுத்துச் சென்றதாகவும் கூறப்படுகிறது.
ஆனால், இந்த சந்திப்புக்கு பிறகும் கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி தற்போது தீவிரமாக பேசப்படுகிறது. இதனிடையே, திமுக தரப்பில் இன்னும் அதிகாரப்பூர்வ கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்படாததும், இரு கட்சிகளுக்கிடையே வார்த்தை மோதல்கள் அதிகரித்து வருவதும், பேச்சுவார்த்தை எளிதானதாக இல்லை என்பதையே காட்டுகிறது.
இந்த சூழலில்தான், காங்கிரஸ் கட்சியின் தற்போதைய எம்எல்ஏக்களின் செயல்பாடுகள் குறித்து திமுக தனிப்பட்ட முறையில் ஒரு சர்வே எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த சர்வே அறிக்கையின் முடிவுகள், திமுக தலைமையை மேலும் கறாரான நிலைப்பாட்டுக்கு தள்ளியுள்ளதாக கூறப்படுகிறது. சர்வே முடிவின்படி, காங்கிரஸ் எம்எல்ஏக்களில் சுமார் 12 பேரின் களப்பணி மற்றும் மக்கள் தொடர்பு பெரிய அளவில் இல்லை என்றும், அவர்களுக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டால் அந்தந்த தொகுதிகளில் அதிமுக தலைமையிலான கூட்டணியே வெற்றி பெறும் வாய்ப்பு அதிகம் என்றும் தெரிய வந்ததாக சொல்லப்படுகிறது.
இந்த காரணத்தினாலேயே, காங்கிரஸ் கட்சிக்கான தொகுதி பங்கீட்டில் திமுக தலைமை மிகுந்த கறாருடன் செயல்பட முடிவு செய்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் தலைமையின் அழுத்தம் அதிகரித்தால், கூடுதலாக 2 தொகுதிகள் வரை வழங்க திமுக தயாராக இருக்கலாம் என்றும் பேசப்படுகிறது. அதே நேரத்தில், “ஒரு எம்பிக்கு 3 தொகுதிகள்” என்ற கணக்கில், காங்கிரஸ் கட்சிக்கு அதிகபட்சமாக 27 சட்டமன்றத் தொகுதிகள் வரை ஒதுக்க திமுக முன்வந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆட்சியில் பங்கு வழங்குவது தொடர்பான பேச்சுக்கு இடமில்லை என்பதையும், இந்த விஷயத்தில் திமுக தனது நிலைப்பாட்டை காங்கிரஸ் தரப்புக்கு தெளிவாக எடுத்துரைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் குறித்த சர்வே அறிக்கையை, நேரடியாக காங்கிரஸ் பேச்சுவார்த்தைக் குழுவிடம் காட்டி, திமுக தனது வாதத்தை உறுதிப்படுத்தத் தயாராகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனால், திமுக–காங்கிரஸ் கூட்டணி இறுதி செய்யப்படுவது வெறும் அரசியல் நட்பின் அடிப்படையில் அல்ல; களநிலை, வெற்றி வாய்ப்பு மற்றும் எண்கணித அடிப்படையிலேயே அமையும் என்பதற்கான சிக்னலாகவே இந்த நகர்வுகள் பார்க்கப்படுகின்றன. வரும் நாட்களில் இந்த சர்வே அறிக்கையே, தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையின் திசையை தீர்மானிக்கும் முக்கிய ஆயுதமாக மாறும் என்று அரசியல் விமர்சகர்கள் கணிக்கின்றனர்.
English Summary
Survey on the activities of Congress MLAs DMK prepares report Kathirs are shocked