விஜய் பிரச்சாரத்தில் மந்தம்? தேர்தல் ஹீட்டிலும் பனையூரில் ரெஸ்ட்? விஜய்யின் ஸ்டைல் மீது தவெக தொண்டர்களே அதிருப்தி!
Slowdown in Vijay campaign Rest in Panayur even in the heat of the election Tvk volunteers are unhappy with Vijay style
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 20 நாட்களே உள்ள நிலையில், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளி வேகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார அணுகுமுறை அவரது சொந்த கட்சித் தொண்டர்களிடையே கூட அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
மார்ச் 30ஆம் தேதி சென்னை பெரம்பூரில் வேட்புமனு தாக்கல் செய்த விஜய், அங்கு மற்றும் கொளத்தூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது திரண்ட பெரும் கூட்டம் காரணமாக அவர் நகர முடியாமல் போனது. இதனால், திட்டமிட்டிருந்த வில்லிவாக்கம் பிரச்சாரத்தை ரத்து செய்து வீடு திரும்பினார். இதற்கு போதிய போலீஸ் பாதுகாப்பு இல்லாததே காரணம் என தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து சில நாட்கள் வெளியில் வராத விஜய், ஏப்ரல் 2ஆம் தேதி திருச்சியில் வேட்புமனு தாக்கல் செய்து, குறுகிய நேரம் மட்டுமே பிரச்சாரம் செய்து மீண்டும் சென்னைக்கு திரும்பினார். இதனால், “மாநிலம் முழுவதும் சுற்றி மக்களை சந்திக்கவில்லை” என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மற்ற தலைவர்கள் தினமும் பல மாவட்டங்களில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வரும் நிலையில், விஜய் இதுவரை குறைந்த எண்ணிக்கையிலான மாவட்டங்களிலேயே நேரடியாக சென்றுள்ளார். மீதமுள்ள பகுதிகளுக்கு செல்ல நேரம் போதுமா என்ற சந்தேகமும் எழுகிறது.
இதனால், தங்களை மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்த விஜய் வருவார் என எதிர்பார்த்திருந்த வேட்பாளர்கள் மற்றும் தொண்டர்கள் ஏமாற்றமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக தேர்தல் நெருங்கும் நேரத்திலும் அவர் தீவிரமாக களமிறங்கவில்லை என்ற விமர்சனங்கள் அதிகரித்துள்ளன.
இதற்கிடையில், தவெக மாநில இணைப் பொதுச்செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார், தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி, விஜய்யின் பிரச்சாரத்திற்கு போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மேலாண்மை குறைபாடுகள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த சூழலில், விஜய்யின் பிரச்சார வேகம் மற்றும் அணுகுமுறை, தேர்தல் முடிவில் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அரசியல் வட்டாரத்தில் கவனிக்கப்படும் விஷயமாகியுள்ளது.
English Summary
Slowdown in Vijay campaign Rest in Panayur even in the heat of the election Tvk volunteers are unhappy with Vijay style