வாக்காளர் திருத்தப் பணியாள் 1 கோடி பேரின் வாக்குகள் பறிக்கப்படும் - சீமான் தலைமையில் சென்னையில் ஆர்ப்பாட்டம்!
Sir Voting Rights NTK Seeman DMK BJP
வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளை (SIR) உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் இன்று (நேற்று) சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எழும்பூரில் சாரல் மழை பெய்து வந்த நிலையிலும், கட்சியினர் மழையில் நனைந்தபடி மத்திய அரசுக்கும் தேர்தல் ஆணையத்துக்கும் எதிராகக் கோஷங்களை எழுப்பினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், "வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளை ஏன் இவ்வளவு அவசர அவசரமாகக் கொண்டு வருகிறீர்கள்? திடீரெனப் போலி வாக்காளர்களைக் கண்டுபிடித்தது போலப் பேசுவது ஏன்?" என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், "ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் கள்ள ஓட்டுகள் போடப்பட்டது தேர்தல் ஆணையத்துக்குத் தெரியாதா? ஒரே மாதத்தில் 6 கோடி வாக்காளர்களை எப்படிச் சரிபார்க்க முடியும்? குறைந்தது ஓராண்டு கால அவகாசம் எடுத்து எஸ்ஐஆர் பணிகளைச் செய்திருக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
ஆளும் கட்சிகள் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தித் தங்களுக்கான வாக்காளர்களைத் தேர்ந்தெடுப்பதாகவும், இது போன்ற பணிகளைத் தங்களைப் போன்ற வளர்ந்து வரும் கட்சிகள் எதிர்கொள்வது கடினம் என்றும் சீமான் குற்றம் சாட்டினார். இந்த அவசர நடவடிக்கை காரணமாகக் குறைந்தது ஒரு கோடி பேர் தங்களது வாக்குரிமையை இழக்க நேரிடும் என்றும் அவர் கவலை தெரிவித்தார்.
English Summary
Sir Voting Rights NTK Seeman DMK BJP