கோபப்பட்ட செந்தில் பாலாஜி..யாரும் மேடையில் இருக்க முடியாது – கோவை திமுக நிர்வாகிகளை எச்சரித்த செந்தில் பாலாஜி! - Seithipunal
Seithipunal


சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், கோவை மாவட்டத்தில் திமுகவின் பலத்தை உறுதிப்படுத்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தீவிரம் காட்டி வருகிறார். கோவை மாவட்டத்தின் 10 சட்டசபைத் தொகுதிகளிலும் திமுக வெற்றி பெற வேண்டும் என்று வலியுறுத்திய அவர், கட்சி நிர்வாகிகள் செயல்பாடுகளில் அலட்சியம் காட்டினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

கடந்த 2021 சட்டசபைத் தேர்தலில் திமுக ஆட்சியைப் பிடித்தாலும், கொங்கு மண்டலத்தில் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. குறிப்பாக கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளிலும் திமுக தோல்வியை சந்தித்தது. இந்த பின்னணியில், கோவையில் கட்சியை வலுப்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு கவனம் செலுத்தி, கொங்கு மண்டல பொறுப்பாளராக செந்தில் பாலாஜியை நியமித்தார். அதன் பின்னர் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல் மற்றும் மக்களவைத் தேர்தல்களில் திமுக கோவையில் வெற்றிகளைப் பெற்றது.

ஆனால், சட்டசபைத் தேர்தல் வெற்றி என்பது வேறு, உள்ளாட்சி மற்றும் மக்களவைத் தேர்தல் வெற்றி என்பது வேறு என்பதை சுட்டிக்காட்டும் வகையில், “2026 சட்டசபைத் தேர்தலில் கோவையை திமுகவின் கோட்டையாக மாற்ற வேண்டும்” என்ற இலக்குடன் செந்தில் பாலாஜி செயல்பட்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் முழுவதும் திமுக தேர்தல் அலுவலகங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், தொண்டாமுத்தூர் தொகுதிக்கான திமுக தேர்தல் அலுவலகம் குனியமுத்தூரில் நேற்று திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செந்தில் பாலாஜி, ரிப்பன் வெட்டி அலுவலகத்தை திறந்து வைத்தார். பின்னர் பேசிய அவர், கட்சி நிர்வாகிகளுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.

“2026 சட்டசபைத் தேர்தலில், இதுவரை நமக்கு வாக்களிக்காதவர்களிடமும் அரசின் திட்டங்களை எடுத்துச் சொல்லி, அவர்களை நம் வாக்காளர்களாக மாற்ற வேண்டும். அப்படி செய்தால் தொண்டாமுத்தூர் தொகுதியில் உதயசூரியன் வெற்றிபெறும். 2021 தேர்தலில் கோவை மாவட்டத்தில் ஒரு தொகுதியில்கூட நாம் வெல்லவில்லை. ஆனாலும், கடந்த ஐந்து ஆண்டுகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகமாக வந்ததும், அதிக திட்டங்களை வழங்கியதும் கோவைக்குத்தான்,” என்று அவர் கூறினார்.

மேலும், “கோவை மாவட்டத்தின் 10 தொகுதிகளையும் வென்று கொடுப்பதே முதலமைச்சருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடன். குறிப்பாக தொண்டாமுத்தூரில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் வகையில் சரித்திர சாதனை படைக்க வேண்டும். மேடையில் அமர்ந்திருக்கும் நிர்வாகிகள் சரியாகப் பணியாற்றவில்லை என்றால், கீழே அமர வேண்டி இருக்கும். அதேபோல், கீழே இருப்பவர்கள் நன்றாக வேலை செய்தால், அவர்கள் மேடைக்கு வரலாம். பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், கட்சிக்காக அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்,” என்று கடுமையான தொனியில் பேசினார்.

செந்தில் பாலாஜியின் இந்த பேச்சு, கோவை திமுக வட்டாரங்களில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், வரவிருக்கும் சட்டசபைத் தேர்தலுக்கான கட்சி தயாரிப்புகள் எவ்வளவு தீவிரமாக நடைபெறுகின்றன என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Senthil Balaji is angry no one can be on stage Senthil Balaji warns Coimbatore DMK executives


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->