பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளுக்கு வாழ்நாள் சிறைத்தண்டனை எனும் தீர்ப்பு பெரும் ஆறுதல்: சீமான்..!
Seeman says the verdict of life imprisonment for Pollachi sex offenders is a great comfort
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகள் 09 பேருக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை எனும் கோவை மகளிர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பெரும் ஆறுதல் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடே எதிர்நோக்கியிருந்த பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிகள் 9 பேருக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை வழங்கியிருக்கும் கோவை மகளிர் நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. இத்தீர்ப்பு பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், தமிழக மக்களுக்கும் கிடைத்திருக்கும் பெரும் ஆறுதலாகும். பல்வேறு அரசியல் நெருக்கடிகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும், மிரட்டல்களுக்கும் மத்தியிலும், பிறழ்சாட்சியாக மாறாது நெஞ்சுரத்தோடும், துணிவோடும் நீதிமன்றத்தில் சாட்சியமளித்து நீதியின் பக்கம் நின்ற பெண்களின் செயல்பாடு போற்றத்தக்கது.

நினைத்துப் பார்க்கவே முடியாத பாலியல் கொடூரங்களை நிகழ்த்திய அக்கொடுங்கோலர்கள் தண்டனைக்கு உட்படுத்தப்பட்டிருப்பது மிகச் சரியான முடிவாகும். “அண்ணா.. அடிக்காதீங்கண்ணா..” எனப் பாலியல் குற்றவாளிகளிடம் சிக்குண்டுக் கதறிய தங்கையின் அழுகுரலும், விம்மலும் இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அவளின் அண்ணனாக இத்தீர்ப்பை முழுமனதோடு ஏற்கிறேன். சக உயிரான பெண்ணை காக்காமல் மண்ணைக் காக்க போராடி என்ன பயன்?
அதிமுகவின் ஆட்சிக்காலத்தில் நடந்தேறிய இப்பாலியல் வன்கொடுமையில் அதிகாரவர்க்கமும், காவல்துறையும் குற்றவாளிகளைக் காப்பாற்றவும், பாதிக்கப்பட்டப் பெண்களை அச்சுறுத்தவுமே முனைந்தன. பலதரப்பட்டத் தரப்பிலுமிருந்தும் போராட்டங்கள் வெடித்து, அரசியல் நெருக்கடிகள் கொடுக்கப்பட்டப் பிறகே, வழக்கை ஒன்றியப் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்றியது அன்றைய அதிமுக அரசு.

அன்றைக்குக் குற்றவாளிகளைக் காப்பாற்ற துணைநின்ற அதிமுக, இன்றைக்கு தங்களால்தான் நீதிகிடைத்தது எனச் சொந்தம் கொண்டாடி, இதிலும் அரசியல் செய்ய முனைவது மிக இழிவானதாகும். அதனைப் போலவே, அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட மாணவி விவகாரத்தில், ‘யார் அந்த சார்?’ எனும் ஒட்டுமொத்த தமிழக மக்களின் கேள்வியைப் புறந்தள்ளி, பின்புலத்திலிருக்கும் அதிகாரப்புள்ளிகளைக் காப்பாற்றிய திமுக அரசுக்கும் இதனைப் பேச எந்தத் தார்மீகமும் இல்லை. இவ்விவகாரத்திலும் திமுகவும், அதிமுகவும் அறிக்கைப்போர் தொடுத்து, ஒருவரையொருவர் மாறி மாறிக் குற்றஞ்சாட்டிக் கொண்டு அரசியல் இலாபமீட்ட முற்படுவது வெட்கக் கேடானதாகும்.

இவ்வழக்கில் கிடைக்கப் பெற்றிருக்கும் நீதியானது, நியாயத்திற்காகப் போராடியப் பொதுமக்களுக்கும், பாதிக்கப்பட்டு அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டபோதும் துணிந்து நீதிமன்றத்தின் படியேறிய பெண்களுக்கும் கிடைத்திருக்கும் வெற்றியாகும். இத்தீர்ப்பின் மூலம் பாலியல் குற்றவாளிகள் அனுபவிக்கப்போகும் சிறைத்தண்டனை, பெண்களைப் போகப் பொருளாக எண்ணி, அத்துமீற நினைக்கும் அத்தனைப் பேருக்குமான பாடமாகவும், எச்சரிக்கையாகவும் அமைய வேண்டும்.
ஆகவே, மரணம்வரை வாழ்நாள் தண்டனை எனக் கிடைத்திருக்கும் இத்தீர்ப்பு மேல்முறையீடுகளில் நீர்த்துப் போகாமலிருக்க வலுவான சட்டப்போராட்டங்களை நடத்த வேண்டுமெனவும், பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளைத் தடுக்கவும், அவர்களுக்கானப் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் கடும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.' என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Seeman says the verdict of life imprisonment for Pollachi sex offenders is a great comfort