'தைத்திங்களை கூட கொண்டாட முடியாமல் தமிழ்நாடே போர்க்களம் போல காட்சியளிக்கிறது'; பொங்கல் வாழ்த்து செய்தியில் சீமான் ..!
Seeman says that the entire state of Tamil Nadu looks like a battlefield
தைத்திங்களில் தமிழர்களின் மாபெரும் பண்பாட்டுத் திருவிழாவினைக்கூட கொண்டாட முடியாமல் தமிழ்நாடே போர்க்களம்போல காட்சியளிக்கிறது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது;
உலகிற்கு உணவளிக்கும் வேளாண் பெருங்குடி மக்கள் உரிய கொள்முதல் விலையும், மழையில் மூழ்கி வீணான பயிர்களுக்கு உரிய இழப்பீடும் கேட்டு போராடுகின்றனர். வெயிலிலும் மழையிலும் வெம்பாடு பட்டு குருதியை வியர்வையாக சிந்தி விளைவித்த விளைப்பொருட்கள் வீதியில் கொட்டப்படுவதைக் கண்ணீர் சிந்தும் விவசாயிகள், சேமிப்பு கிடங்குகள் அமைத்து பாதுகாக்க கோரி
போராடுகின்றனர்.
அறிவை வளர்க்கும் ஆசிரியர் பெருமக்கள் உரிய ஊதியம் கேட்டுப்போராடுகின்றனர். உயிரைக் காக்கும் மருத்துவர் - செவிலியர்கள் உரிய ஊதியம், பணிநிரந்தரம் கோரி போராடுகின்றனர்.
ஊரைத் தூய்மையாக்கி உடல் நலத்தை காக்கும் தூய்மைப்பணியாளர்கள் நிரந்தரப் பணி கேட்டுப்போராடுகின்றனர். பாலியல் வன்கொடுமைக்கு எதிராக பெண்கள் போராடுகின்றனர்.

பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ? நாங்கள்-சாகவோ? என்று பாட்டன் பாரதி வருந்திப் பாடியதற்கேற்ப நாளும் கொள்ளை போகும் கனிமவளங்களை காக்க சமூக ஆர்வலர்கள் போராடுகின்றனர்.
இரப்பர் தோட்ட தொழிலாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் முதல் தொகுப்பூதிய பேராசிரியர்கள் வரை பழைய ஓய்வூதியம் கேட்டு ஓய்வின்றி போராடுகின்றனர்.
இவற்றையெல்லாம் காணும் போது பெருந்துயரம் நெஞ்சை சூழ்கிறது. புத்தாண்டு கூட தமிழ்ப்பெருங்குடி மக்களுக்கு திண்டாட்டமாக உள்ளது. பெருவிழா கூட தமிழர்களுக்கு பெருந்துயரமாக உள்ளது மிகுந்த மனவேதனையளிக்கிறது.
தை பிறந்தால் வழி பிறக்கும் எனும் பழந்தமிழர் கூற்றுக்கு இணங்க
இக்கொடுமைகளுக்கு எல்லாம் விரைவில் முடிவு ஏற்பட்டு நல்விடிவு பிறக்கட்டும்.

கொலை, கொள்ளை, சாதிய இழிவு, தீண்டாமை, அடக்குமுறை, ஒடுக்குமுறை, மது – மத போதை, நிலவளச் சுரண்டல், கனிமவள கொள்ளை, பாலியல் வன்கொடுமை, பெண்ணடிமைத்தனம் இவைகளுக்கு எதிரான மாபெரும் அரசியல் புரட்சி இம்மண்ணில் பூக்கட்டும்! வையம் போற்றும் தைத்திருநாளில் தமிழர் வாழ்வு சிறக்கட்டும்!
எம் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிரான நெருப்பெரிந்து, தமிழர் இல்லங்களிலும் உள்ளங்களிலும் பொங்கட்டும் புரட்சிப்பொங்கல்!
தமிழ்மொழி மீட்க,
தமிழர் நலன் காக்க,
தமிழ்நாட்டின் வளங்கள் காத்திட,
தமிழ் முன்னோர்களின் ஈகம் போற்றிட,
தமிழர்தம் கலை, இலக்கியப் பண்பாடு, வரலாறு காத்திட
தை மகளே வருக!
தமிழர் நலம் பெருக!
உலகெங்கும் பரவி வாழும் எம்முயிர்ச்சொந்தங்கள் அனைவருக்கும், நெஞ்சம் நிறைந்த தமிழ்ப்புத்தாண்டு பொங்கல் நல்வாழ்த்துகள்! என்று சீமான் தெரிவித்துள்ளார்.
English Summary
Seeman says that the entire state of Tamil Nadu looks like a battlefield