'பெண்கள் மீதான வன்முறையில் இந்தியாவிலே தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றியதற்குப் பெயர்தான் திராவிட மாடலா..?' சீமான் சீற்றம்..! - Seithipunal
Seithipunal


பெண்கள் மீதான வன்முறையில் இந்தியாவிலே தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றியதற்குப் பெயர்தான் திராவிட மாடலா?பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கான சட்டத்தைக் கடுமையாக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

ராமநாதபுரத்தில் 12-ஆம் வகுப்பு மாணவி கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், மிகுந்த மனவேதனையையும் அளிக்கிறது. திமுக ஆட்சியில் பெண்கள் மீதான பாலியல் சீண்டல், வன்கொடுமை, படுகொலை, நகை பறிப்பு உள்ளிட்ட கொடுங்குற்றங்கள் நடைபெறாத நாளே இல்லை என்ற அளவிற்குச் சட்டம் ஒழுங்கு முற்று முழுதாகச் சீரழிந்துள்ளது.

நாட்டையே உலுக்கிய அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை, கும்மிடிப்பூண்டி பள்ளிச்சிறுமி பாலியல் வன்கொடுமை, கோவை கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை என்று அடுத்தடுத்து தொடரும் பெண்கள் மீதான கொடுமைகளின் உச்சமாகத் தற்போது பட்டப்பகலில் 12ம் வகுப்பு பள்ளி மாணவி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

திமுக ஆட்சியில் தொடர்ச்சியாக பெண்கள் மீது கொடுந்தாக்குதல் தொடுக்கும் துணிவு சமூக விரோதிகளுக்கு எங்கிருந்து வருகின்றது? பெண்கள் மீதான வன்முறைகளுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தியும் திமுக அரசு அதனை அலட்சியம் செய்வது ஏன்? ஒவ்வொரு முறையும் குற்றம் நடந்த பிறகு கடுமையான நடவடிக்கை எடுப்பது போலத் திமுக அரசு நடத்தும் நாடகம் இன்னும் எத்தனை நாட்களுக்குத் தொடரப்போகிறது?

பெண்கள் மீதான வன்முறைகள் நடைபெறாமல் தடுக்கவும், குறைக்கவும் திமுக அரசு என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்துள்ளது? அனைத்துச் சமூகக் குற்றங்களுக்கும் அடிப்படை காரணமான மதுக்கடைகளை மூடுவதற்குத் திமுக அரசிற்கு இன்னும் என்ன தயக்கம்? பெண்கள் மீதான வன்முறையில் இந்தியாவிலே தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றியதற்குப் பெயர்தான் திராவிட மாடலா?

திமுக ஆட்சியில் கட்டுக்கடங்காத போதைப்பொருள் புழக்கத்தால் சாமானிய மனிதரையும் சமூக விரோதியாக உருமாற்றியதுதான் திமுக அரசின் நான்கு ஆண்டுகாலச் சாதனையாகும். திமுக ஆட்சி தொடரும் கடைசி நாள்வரை பெண்கள் மீதான இத்தகைய கொடும் வன்முறைகள் தொடருமோ? என்று பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர். 12ம் வகுப்பு மாணவி கொலை வழக்கில் அதிவிரைவாகக் கடும் தண்டனையைப் பெற்றுத்தர தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இனியும், இதுபோன்ற பெண்களுக்கு எதிரான கொடும் வன்முறைகள் தொடராமல் தடுக்க உடனடியாக முழுமையான மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும். போதைப்பொருள் புழக்கத்தை முற்றிலுமாகக் கட்டுப்படுத்திச் சட்டம் ஒழுங்கை சீர்படுத்தம். பெண்களுக்கு எதிரான வன்முறைகளுக்கான சட்டத்தைக் கடுமையாக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.'' என்று சீமான் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Seeman says Tamil Nadu has become a state where women cannot live


கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

திமுக கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகினால் யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->