கரூர் கூட்டநெரிசல் விசாரணை ஆணையம்: உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு சீமான் கண்டனம்..!
Seeman condemns Supreme Court verdict on Karur Massacre Inquiry Commission
கரூர் துயர சம்பவம் தொடர்பில் சிபிஐ விசாரணை வேண்டும் எனக் கோரி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. அதன்படி, வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே. கே. மகேஸ்வரி , என்.வி. அஞ்சாரியா தலைமையிலான அமர்வு கரூர் கூட்ட நெரிசல் விவகாரத்தை சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டு தீர்ப்பளித்தனர்.
அத்துடன், இந்த சிபிஐ விசாரணையை கண்காணிக்க முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 03 பேர் கொண்ட மேற்பார்வைக் குழுவையும் அமைத்துள்ளது. அப்போது, ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி ரஸ்தோகி மற்றும் காவல்துறையில் ஐ.ஜி. பதவிக்குக் குறையாத, தமிழகப் பிரிவைச் சேர்ந்த, ஆனால், தமிழ்நாட்டைச் பூர்வீகமாகக் கொண்டிராத இரண்டு மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் குழுவில் உறுப்பினர்களாக இருப்பார்கள். சிபிஐ விசாரணையை இந்தக் குழு கண்காணிக்கும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்த தீர்ப்புக்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது:

''கரூர் உயிரிழப்பு குறித்த விசாரணை ஆணையத்தில் பூர்விக தமிழர்கள் அதிகாரிகளாக இடம்பெறக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்திற்கு முரணானது!
கரூரில் நடைபெற்ற தவெக பரப்புரையில் 41 பேர் உயிரிழந்த கொடுந்துயர நிகழ்வு குறித்த உண்மையைக் கண்டறிய உச்சநீதிமன்றம் நியமித்துள்ள விசாரணை ஆணையத்தில் தமிழ் அதிகாரிகள் இடம்பெறக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது.
தமிழ்நாட்டில் பணியாற்றும் அதிகாரிகள் பங்கேற்கலாம், ஆனால், அவர்கள் தமிழ்நாட்டை பூர்வீகமாகக் கொண்டிருக்கக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது இல்லையா? தமிழ்நாட்டில், தமிழர்கள் மரண நிகழ்வு குறித்த விசாரணையில் தமிழ் அதிகாரிகள் இடம்பெறக்கூடாது என்ற நிபந்தனையை விதித்ததன் மூலம் உச்சநீதிமன்றம் ஒட்டுமொத்த தமிழ் அதிகாரிகளின் நேர்மையையும், ஒப்படைப்பையும் ஐயுறுகிறதா? ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் அவமதிக்கும் உச்சநீதிமன்ற உத்தரவு மிகுந்த மனவேதனை அளிக்கிறது.
தமிழ் அதிகாரிகளுக்கு நடந்த இந்த அவமதிப்பிற்கு, தமிழ்நாட்டு அதிகாரிகளுக்கு ஏற்பட்ட இந்த தலைகுனிவிற்கு தமிழக அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காதது கடும் கண்டனத்திற்குரியது. சுயமரியாதை, மாநில சுயாட்சி என பெரும் பேச்சுக்கள் பேசியவர்கள் இப்பொழுது வாய் மூடி இருப்பது ஏன்?
தமிழ்நாட்டில் தமிழர்கள் உயிரிழக்கக் காரணமான துயர நிகழ்விற்காகத் தமிழர்களிடம் நடைபெறும் நீதி விசாரணையில் தமிழ் நன்கு தெரிந்த அதிகாரி இடம்பெறுவதுதானே சரியானதாக இருக்க முடியும்? தமிழர் நிலத்தின் வரலாறும், அரசியலும் தெரியாத, தமிழர் மண்ணிற்குச் சிறிதும் தொடர்பில்லாத அதிகாரிகள் விசாரணை செய்வது எப்படிச் சரியானதாக இருக்க முடியும்? அது விசாரணையில் தேவையற்ற தாமதத்தையும், தடங்கலையும் ஏற்படுத்தாதா?

மணிப்பூர் கலவரத்திற்கான விசாரணையில் அம்மாநில மொழி தெரியாத ஒருவரை விசாரணை அதிகாரியாக நியமித்தால் அம்மாநில மக்கள் ஏற்பார்களா? அல்லது கும்பமேளா நெரிசல் மரணம் குறித்து விசாரணை செய்ய இந்தி தெரியாத அதிகாரியை நியமித்தால் அம்மாநில மக்கள்தான் ஏற்பார்களா? அதிலும், குஜராத் கலவரத்தில் வன்கொடுமை செய்யப்பட்ட பில்கிஸ் பானு வழக்கில் கொடூரக் குற்றவாளிகளை விடுவித்து வழங்கிய தவறான தீர்ப்பினை உச்சமன்றமே ரத்து செய்த நிலையில், அந்த நீதிபதியின்கீழ் கரூர் வழக்கு விசாரணை நடைபெறுவது எப்படி நம்பிக்கைக்கு உரியதாக இருக்க முடியும்?
ஒவ்வொரு ஆண்டும் 10 விழுக்காடு அளவிற்குக் குடிமைப்பணி அதிகாரிகள் இந்த நாட்டின் சேவைப் பணிக்காகத் தமிழர் நிலம் அளித்து வருகின்றது. இந்த நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தமிழ் அதிகாரிகள் சிறப்புற பணியாற்றி மொழி, இன, மதம், கடந்து மக்கள் தொண்டாற்றி வருகின்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் தங்களின் சிறப்பான செயற்பாடுகளால் நேர்மையானவர்கள், பணியாற்றல்மிக்க நிர்வாகிகள் என்றே பெயரெடுத்தவர்கள். தமிழ் அதிகாரிகளின் உண்மையும், உழைப்பும் இந்தியாவின் வேறு எந்த மாநிலத்தவருக்கும் சற்றும் குறைந்தது இல்லை.
இந்த நாட்டின் விடுதலைப் போராட்டம் முதல் இன்றைய எல்லைப் பாதுகாப்பு வரை எப்படித் தமிழர்களின் பங்கு மற்ற மாநிலத்தவருக்குக் குறைந்தது இல்லையோ, எப்படி வரி செலுத்தி, வாக்கு செலுத்தி இந்த நாட்டின் ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும், இறையாண்மையும் பேணுவதில் தமிழர்களின் பங்கு மற்ற இனத்தினரை விடவும் முதன்மையாக உள்ளதோ, அதைப்போலவே தமிழ் அதிகாரிகளும் மற்ற மாநில அதிகாரிகளை விடவும் சிறப்பானவர்கள் என்பதே கடந்தகால வரலாறாகும். தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகள் வேண்டாம் என்று கோருபவர்கள், தமிழ்நாட்டைச் சேர்ந்த மக்கள் வாக்கு செலுத்த வேண்டாம், வரி செலுத்த வேண்டாம் என்றும் கோருவார்களா?

தமிழர்களின் உரிமைக்கும் உணர்வுக்கும் இந்த நாடு உரிய மதிப்பைத் தராவிட்டால், இந்த நாட்டின் சட்டத் திட்டங்களின் மீது தமிழர்களுக்கு எப்படி மதிப்பு வரும்? நாட்டுப்பற்றுமிக்க, நடுநிலைமை தவறாத தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகளை, ஒரு வழக்கு விசாரணையின் உண்மைத்தன்மை பாதிக்கும் என்று கூறி விலக்கி வைப்பது ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் நேர்ந்துள்ள தேசிய இன அவமதிப்பாக, மானமிழப்பாகத்தான் பார்க்க முடியும்.
ஏற்கனவே, ஒரிசா மாநில மக்களின் முன்னேற்றத்திற்காகத் தம் வாழ்வையே அர்ப்பணித்த குடிமைப்பணி அதிகாரி கார்த்திகேயபாண்டியனை, தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதற்காக அவதூறு பரப்பி அவமதித்தது அம்மாநில பாஜக. ஒட்டுமொத்த இந்தியாவிற்குமான கட்சி என்று கூறிக்கொண்டு இனப்பாகுபாடு காட்டி அவமதித்த பாஜகவின் பொய் குற்றச்சாட்டிற்குச் சற்றும் குறைவில்லாதது தற்போதைய இந்திய உச்சநீதிமன்றத்தின் உத்தரவுமாகும். தமிழர்களின் மனதைக் காயப்படுத்துவதாக அமைந்துள்ள இவ்வுத்தரவை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள்.
இந்த அறிக்கையில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகள் ஒவ்வொன்றும் உங்களுக்கு நியாயமானதாகத் தோன்றுமானால், கரூர் உயிரிழப்பு விசாரணை ஆணையத்தில் தமிழ்நாட்டை பூர்விகமாகக் கொண்ட அதிகாரிகள் இடம்பெறக்கூடாது என்ற உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பினை மறு ஆய்வு செய்யக்கோரி தமிழ்நாடு அரசு உடனடியாக மனுதாக்கல் செய்ய வேண்டுமா? வேண்டாமா? என்பதை இந்த அறிக்கையைப் படிப்பவர்களின் மனச்சான்றுக்கே விட்டுவிடுகிறேன்.'' என்று சீமான் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Seeman condemns Supreme Court verdict on Karur Massacre Inquiry Commission