ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் A1 குற்றவாளி ரெளடி நாகேந்திரன் மருத்துவமனையில் மரணம்!
Rowdy Nagendran A1 accused Armstrong case dies
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளியாக (A1) இருந்த ரெளடி நாகேந்திரன் இன்று காலை சிகிச்சை பலனினின்றி மருத்துவமனையிலேயே மரணமடைந்தார்.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் தனது இல்லத்தின் அருகே ஆறு பேர் கொண்ட கும்பல் தாக்கி வெட்டிக் கொன்றது. இதையடுத்து, போலீசார் ஆற்காடு சுரேஷ் தம்பி பொன்னை பாலு, நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன், பல அரசியல் பிரமுகர்கள், வழக்கறிஞர்கள் உள்ளிட்ட 27 பேரை கைது செய்தனர். இதில் ரெளடி திருவேங்கடம் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிவாங்கும் நோக்கில், சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்தபடியே ஆம்ஸ்ட்ராங் கொலை சதி செய்ததாக நாகேந்திரன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
இந்த நிலையில், சிறையில் இருந்தபோது நாகேந்திரன் கல்லீரல் கோளாறால் பாதிக்கப்பட்டு, கடந்த வாரம் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
ஏற்கனவே கல்லீரல் மாற்று அறுவைச் சிகிச்சை செய்திருந்த நாகேந்திரனுக்கு, மீண்டும் கல்லீரல் செயலிழப்பு ஏற்பட்டதால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனளிக்காமல் அவர் இன்று காலை உயிரிழந்ததாக மருத்துவமனை தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட, அதனை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், வழக்கின் முதல் குற்றவாளியே மரணமடைந்திருப்பது, இந்த வழக்கை வலுவிழக்கும் சூழலுக்கு கொண்டு சென்றுள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Rowdy Nagendran A1 accused Armstrong case dies