அமைச்சருக்கு ஜெபமாலை ஓகே... இந்துக்களுக்கு மட்டும் பாரபட்சமா? - பேரவையில் நடந்த சம்பவத்தால் கொதித்தெழுந்த தமிழிசை...!
Rosary OK minister Is it discrimination against Hindus only Tamilisai enraged by incident assembly
தமிழக சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை தாக்கலின்போது எழுந்த மதச்சார்பின்மை தொடர்பான சர்ச்சையில், இந்து மதத்திற்கும் பிற மதங்களுக்கும் வேறுபட்ட அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுவதாக தமிழக முன்னாள் பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் வெளியிட்டுள்ள கருத்தில், சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையின் நகல் திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வரப் பெருமாள் திருவடியில் வைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களின் நிலைப்பாடு குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன், "இந்தியா மதச்சார்பற்ற நாடாக இருக்கும் நிலையில், நிதிநிலை அறிக்கையை கோவிலில் வைத்து வழிபடுவது எவ்வாறு நியாயமானது?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

ஆனால், இதற்கு முன்பு சட்டப்பேரவைக்குள் ஜெபமாலை மற்றும் இயேசு சிலை கொண்டு வரப்பட்டபோது இதேபோன்ற எதிர்ப்பை அவர் பதிவு செய்யவில்லை என்று தமிழிசை சவுந்தரராஜன் சுட்டிக்காட்டியுள்ளார்.மேலும், இந்து மத வழக்கங்கள் தொடர்பான நிகழ்வுகளை மதச்சார்பின்மைக்கு எதிரானவை என தொடர்ந்து விமர்சித்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ஜெபமாலை சட்டப்பேரவைக்குள் இடம்பெற்றபோது ஒவ்வொருவருக்கும் தங்களது மத நம்பிக்கையை வெளிப்படுத்தும் உரிமை உள்ளது என்று கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை போன்ற நிகழ்வுகள் நடத்தப்படுவதை கடந்த காலங்களில் எதிர்த்து கருத்து தெரிவித்த திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, தற்போதைய விவகாரம் குறித்து அமைதி காத்திருப்பது ஏன் என்ற கேள்வியையும் அவர் முன்வைத்துள்ளார்.கடந்த காலங்களில் கையில் காப்பு அணிவது, நெற்றியில் விபூதி அல்லது குங்குமம் தரித்தல் உள்ளிட்ட இந்து மத அடையாளங்கள் மதவாதமாக சித்தரிக்கப்பட்டதுடன், மாணவர்கள் கூட இத்தகைய அடையாளங்களுடன் கல்வி நிலையங்களுக்கு வரக்கூடாது என்ற கருத்துகள் வலியுறுத்தப்பட்டதாகவும் தமிழிசை சவுந்தரராஜன் நினைவுபடுத்தியுள்ளார்.
ஆனால், பிற மத அடையாளங்கள் சட்டப்பேரவைக்குள் இடம்பெற்றபோது அதே அளவிலான விமர்சனங்கள் எழாதது இரட்டை அணுகுமுறையை வெளிப்படுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார்.நிதி அமைச்சர் தனது தனிப்பட்ட மத நம்பிக்கையின்படி ஜெபமாலை அணிவதையோ, சிலுவைக் குறி இடுவதையோ தாம் விமர்சிக்கவில்லை என்றும், இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு குடிமகனுக்கும் தங்கள் மதத்தை கடைப்பிடிக்கவும், வெளிப்படுத்தவும் முழுமையான அடிப்படை உரிமையை வழங்கியுள்ளதாகவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆனால், இந்து மத நம்பிக்கைகள் வெளிப்படுத்தப்படும் போதெல்லாம் அவை மதவாதம் அல்லது மதச்சார்பின்மைக்கு முரணான செயலாக சித்தரிக்கப்படுவதும், அதே நேரத்தில் பிற மதங்களின் வெளிப்பாடுகள் மதச் சுதந்திரத்தின் பெயரில் ஏற்றுக்கொள்ளப்படுவதும் ஏன் என்ற கேள்விக்கு பதில் அளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்துக்களின் மத நம்பிக்கைகள், வழிபாட்டு மரபுகள் மற்றும் பண்பாட்டு அடையாளங்கள் சமமான மரியாதையுடன் அணுகப்படுகிறதா என்பதை தமிழக மக்கள் சிந்திக்க வேண்டிய நேரம் இது என்றும், மதச்சார்பின்மை என்பது அனைத்து மதங்களுக்கும் ஒரே அளவுகோலில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
English Summary
Rosary OK minister Is it discrimination against Hindus only Tamilisai enraged by incident assembly