எனக்கு என் மக்கள்தான் முக்கியம்! போராட்டம் செய்யவும் தயார் - சௌமியா அன்புமணி! 
                                    
                                    
                                   Ready to protest for Dharmapuri Cauvery surplus water project Sowmya Anbumani
 
                                 
                               
                                
                                      
                                            தர்மபுரிக்கு கொண்டுவரப்பட்ட நலத்திட்டங்கள் அனைத்தும் பாட்டாளி மக்கள் கட்சியால் கொண்டு வந்த நலத்திட்டங்கள் என பசுமை தாயகம் தலைவர் சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த 18 வது மக்களவை தேர்தலில்  பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றிருந்த பாமக 10 நாடாளுமன்ற தொகுதிகளில் போட்டியிட்டது. அதில் தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் பாமக சார்பில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி போட்டியிட்டார்.
தேர்தல் முடிவுகளில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மணியை விட 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். இருப்பினும் தனக்கு வாக்களித்த தர்மபுரி நாடாளுமன்ற தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சௌமியா அன்புமணி பல்வேறு கிராமங்களுக்கு நேரடியாக சென்று மக்களை சந்தித்து நன்றி கூறி வருகிறார்.

அந்த வகையில், தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தர்மபுரி சட்டமன்ற தொகுதி அதகப்பாடி கிராமத்தில் மாம்பழ சின்னத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி கூறி வருகிறார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சௌமியா அன்புமணி பேசியதாவது, விக்கிரவாண்டி இடை தேர்தலில் உண்மையான வெற்றி பாமகவிற்கு தான். பணபலம், அதிகார பலம், ஆட்கள் பலம் அனைத்தையும் முறியடித்து ஒரு ரூபாய் கொடுக்காமல் பாட்டாளி மக்கள் கட்சி 50 ஆயிரம் மேற்பட்ட வாக்குகளை பெற்றுள்ளது.
தர்மபுரி- மொரப்பூர் ரயில்வே திட்டத்தை கொண்டு வந்தது பாட்டாளி மக்கள் கட்சி, தர்மபுரியில் சிப்காட் தொழிற்சாலையை கொண்டு வந்தது பாமக, தர்மபுரியில் மருத்துவ கல்லூரியை கொண்டுவந்தது பாமக இதுபோன்ற தர்மபுரிக்கு கொண்டுவரப்பட்ட அனைத்து நல திட்டங்களையும் செய்தது பாமக.
தோல்வி அடைந்தது பற்றி எனக்கு துளியும் வருத்தம் இல்லை. என்னை நம்பி 4 லட்சத்துக்கும் அதிகமானோர் வாக்களித்து உள்ளனர். அதிகமாக கிராமத்தில் இருக்கும் மக்கள் மாம்பழச் சின்னத்தில் வாக்களித்துள்ளனர். நான் தோல்வி அடைந்தாலும் இந்த மக்கள் பின்னால் நின்று இந்த மக்களுக்காக குரல் கொடுப்பேன். தர்மபுரி காவேரி உபரி நீர்  திட்டத்திற்காக போராட்டத்திலும் இறங்குவேன் என்று தெரிவித்தார்.
                                     
                                 
                   
                       English Summary
                       Ready to protest for Dharmapuri Cauvery surplus water project Sowmya Anbumani