“அதிமுகவை அழித்ததில் 100% பங்கு ஆர்பி உதயகுமாருக்கு” – அமைச்சர் நிர்மல் குமார் கடும் விமர்சனம்
RB Udhayakumar bears 100 of the responsibility for destroying the AIADMK Minister Nirmal Kumar scathing criticism
அதிமுகவை அழிவின் பாதைக்கு கொண்டு சென்றதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாருக்கு 100 சதவீத பங்கு இருப்பதாக தமிழக மின்சாரத்துறை அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தபடியாக அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்கான முயற்சிகளில் ஆர்.பி. உதயகுமார் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மதுரையில் உலகப் புகழ்பெற்ற மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழா வரும் 17-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமார் ஆய்வு மேற்கொண்டார். மாநகர காவல் ஆணையர், மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் நடைபெற்ற ஆய்வுக்குப் பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், குடமுழுக்கு விழாவையொட்டி பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் ஏற்படுத்துவது தொடர்பாக தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். அனைத்து பணிகளும் திட்டமிட்டபடி சிறப்பாக நடைபெற்று வருவதாகவும், வீர வசுந்தராயர் மண்டபம் திறக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.
கோயில் அறங்காவலர் குழு நியமனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சட்ட விதிகளுக்கு உட்பட்டே அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார். உண்மையான பக்தர்களாக இருந்து கோயிலுக்காக சிறப்பாக பணியாற்றுபவர்களே அறங்காவலர் குழுவில் இடம்பெறுவார்கள் என்றும், திமுகவைச் சேர்ந்தவர்களுக்கு இதில் இடமில்லை என்றும் அவர் கூறினார்.
தொடர்ந்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் விமர்சனங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, அவரை கடுமையாக விமர்சித்த அமைச்சர் நிர்மல் குமார், தன்னுடைய அரசியல் இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக உதயகுமார் தினமும் ஏதாவது ஒரு கருத்தை தெரிவித்து வருவதாகக் கூறினார்.
மேலும், “இன்னும் ஆறு மாதங்களில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தேவையில்லை, நானே போதும் என்று ஆர்.பி. உதயகுமார் கூறுவார்” என அவர் விமர்சித்தார்.
ஓ.பன்னீர்செல்வம் தேவையில்லை என்றும், சசிகலாவை முதல்வராக்க வேண்டும் என்றும் முதலில் கூறியவரே ஆர்.பி. உதயகுமார் தான் என குற்றம்சாட்டிய அமைச்சர், அதிமுகவை அழித்ததில் உதயகுமாருக்கு 100 சதவீத பங்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.
மேலும், எடப்பாடி பழனிசாமிக்கு அடுத்தபடியாக அதிமுக பொதுச்செயலாளர் பதவியை கைப்பற்றுவதற்கான முயற்சிகளையே ஆர்.பி. உதயகுமார் மேற்கொண்டு வருவதாகவும் சிடிஆர் நிர்மல் குமார் விமர்சித்தார்.
தமிழக முதல்வர் விஜய் பிரதமர் பதவிக்கான போட்டியில் மூன்றாவது இடத்தில் இருப்பதாக வெளியான கருத்துக்கணிப்பு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், தேசிய அரசியல் தொடர்பாக விஜய் எப்போது என்ன முடிவு எடுக்கிறார் என்பதைப் பொறுத்தே அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் இருக்கும் என தெரிவித்தார்.
அதேபோல், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு மைதானம் தொடர்பாகவும் அமைச்சர் கருத்து தெரிவித்தார். பாரம்பரியமாக நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசியல் விளம்பரத்திற்காக பயன்படுத்தக் கூடாது என்றும், அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பாரம்பரியமாக அந்தந்த வாடிவாசல்களில் ஜல்லிக்கட்டு நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.
அமைச்சர் சிடிஆர் நிர்மல் குமாரின் இந்தக் கருத்துகள், தவெக மற்றும் அதிமுக இடையேயான அரசியல் மோதலை மேலும் தீவிரப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.
English Summary
RB Udhayakumar bears 100 of the responsibility for destroying the AIADMK Minister Nirmal Kumar scathing criticism