தேவேந்திர குல வேளாளர் மக்கள் மீது தாக்குதல்! குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யுங்க - கிருஷ்ணசாமி!
PT Krishnasami Condemn to ilamanur people attack
புதிய தமிழகம் கட்சி.தலைவர் கிருஷ்ணசாமி விடுத்துள்ள கண்டன அறிக்கையில், "பரமக்குடி அருகே உள்ள இளமனூர் கிராம தேவேந்திர குல வேளாளர் மக்கள் மீது இரண்டு தினங்களுக்கு முன்பு நிகழ்த்தப்பட்ட சாதிய வன்முறை தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறேன். நயினார்கோவில் - பரமக்குடி சாலையில் அமைந்துள்ள இளமனூர் என்ற கிராமத்தில் வாழும் 50க்கும் மேற்பட்ட தேவேந்திர குல வேளாளர் குடும்பங்கள் தங்கள் சொந்த இடத்தில் தியாகி இமானுவேல் சேகரனார் புகைப்படம் தாங்கிய பெயர் பலகையைப் புதுப்பித்து நிறுவியுள்ளனர். இதைத் தாங்கிக்கொள்ள முடியாத ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த வன்முறைக் கும்பல், வட்டாட்சியர் முன்பாகவே, அப் பெயர் பலகையை அகற்றக் கோரி வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
அக் குறிப்பிட்ட பிரிவினர் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் பொது இடத்தில் அவர்கள் சார்ந்த சாதித் தலைவர் புகைப்படம் அடங்கிய பெயர் பலகையைத் தொடர்ந்து பல வருடங்களாக வைத்துள்ளனர். ஆனால், எவ்விதச் சம்பந்தமும் இல்லாமல், தங்களது சொந்த இடத்தில் தேவேந்திர குல வேளாளர் சமூக மக்கள் வைத்துள்ள பெயர் பலகையை அகற்ற வலியுறுத்தியபோது, அவர்கள் நீண்ட நாட்களாக வைத்துள்ள பெயர் பலகை அகற்ற நேரிடும் என வட்டாட்சியர் கூறியதால், காவல்துறை முன்னிலையில் குறிப்பிட்ட சாதியக் கும்பல் வன்முறையில் ஈடுபட்டு, தேவேந்திர குல வேளாளர்களின் பெயர் பலகையை அகற்றியதோடு; நிராயுதபாணியான அம்மக்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அத்தாக்குதலில் பத்துக்கும் மேற்பட்டவர்கள் பலத்த காயத்துடன் பரமக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
ஏறக்குறைய 50க்கும் மேற்பட்ட அக்கும்பலைச் சேர்ந்தவர்கள் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்து, அப்போதே கைது செய்து சிறையிலே அடைக்காமல், மீண்டும் அவர்களை வீட்டிலேயே கொண்டு சென்று விட்டிருக்கிறார்கள். அதுதான் தொடர் சம்பவங்களுக்குக் காரணமாக அமைந்துள்ளது. இப்பொழுது அவர்கள் அனைவரும் தப்பி விட்டார்கள்.
காவல்துறையின் இந்த ஒருதலைப்பட்சமான நடவடிக்கை மற்றும் வன்முறைக் கும்பலின் தாக்குதலைக் கண்டித்துப் பரமக்குடி, சத்திரக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று தினங்களாக அமைதியான முறையிலே பல்வேறு தர்ணா போராட்டங்கள் நடைபெற்றுள்ளன. ஊரோடு திரண்டு வந்து எளிய தேவேந்திர குல வேளாளர் மக்கள் மீது தாக்குதல் நடத்திய குறிப்பிட்ட சாதிய வன்முறைக் கும்பலைக் கைது செய்வதை விட்டுவிட்டு, இராமநாதபுரம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேவேந்திர குல வேளாளர் மக்களின் மீது நடத்தப்படும் பல்வேறு தாக்குதல்களைக் கண்டித்துப் போராடிய மக்கள் மீது கடுமையான வழக்குகளைப் பதிவு செய்து கைது செய்யும் அராஜகப் போக்குகள் நடைபெறுகின்றன.
சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் மாவட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்படும் குறிப்பிட்ட சாதி வன்முறைக் கும்பலின் அராஜகப் போக்குகள் முடிவுக்குக் கொண்டு வரப்பட வேண்டும்.
நியாயம் கேட்டுப் போராடி கைது செய்யப்பட்ட தேவேந்திர குல வேளாளர் சமூக இளைஞர்கள் அனைவரையும் எவ்வித நிபந்தனையும் இன்றி காவல்துறை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். தொடர்ந்து வேறு யாரையும் கைது செய்யக் கூடாது.
இவ்வளவு பிரச்சனைகள் அனைத்திற்கும் காரணமான இளமனூர் தேவேந்திர குல வேளாளர் மக்கள் மீது தாக்குதல் நடத்திய ஒரு குறிப்பிட்ட சாதி வன்முறைக் கும்பலைச் சார்ந்த குற்றவாளிகள் அனைவரையும் குண்டர் சட்டத்தில் உடனடியாகக் கைது செய்ய வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்..
English Summary
PT Krishnasami Condemn to ilamanur people attack