கண்டன ஆர்ப்பாட்டம்! வருகிற 9-ம் தேதி அதிமுக சார்பில் திருப்போரூரில் கலந்து கொள்ளுங்கள்! - எடப்பாடி பழனிச்சாமி - Seithipunal
Seithipunal


அ.தி.மு.க. பொதுச்செயலாளரும்,எதிர்கட்சித் தலைவருமான 'எடப்பாடி பழனிசாமி' அவர்கள் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் குறிப்பிட்டதாவது,"திருப்போரூர் பேரூராட்சியில், அம்மா அவர்களின் நல்லாசியோடு செயல்பட்ட கழக ஆட்சியில், மக்கள் நலன் கருதி செயல்படுத்தப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டம், தற்போதைய விடியா திமுக ஆட்சியில், படவட்டம்மன் கோயில் தெரு, எம்.ஜி.ஆர். நகர், குமரன் நகர், மேட்டுக்குப்பம் ஆகிய பகுதிகளில் நிறைவேற்றப்படவில்லை. இதனால், சுகாதார சீர்கேடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மாண்புமிகு அம்மா அவர்களின் ஆட்சியில் தொடங்கப்பட்டு சிறந்த முறையில் செயல்பட்டு வந்த திருப்போரூர் அரசு மருத்துவமனையில், தற்போதைய கையாலாகாத விடியா திமுக ஆட்சியில், மருத்துவ சிகிச்சைக்கு தேவைப்படும் எக்ஸ்ரே மெஷின் சரியாக செயல்படுவதில்லை. அதே போல், ஸ்கேன் வசதி, அவசர சிகிச்சைப் பிரிவு மற்றும் போதிய மருத்துவர்கள் இல்லாத காரணத்தால் பொதுமக்கள் 30 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது.

பழைய மாமல்லபுரம் சாலை-கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும் திருப்போரூர்-நெம்மேலி சாலையை ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை ஒருவழி சாலையாக இருப்பதால், போக்குவரத்து நெரிசலும், அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. இங்கு நான்குவழிச் சாலை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்துகின்றனர்.திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகம் சுமார் 150 ஆண்டுகாலம் பழமையான அலுவலகம் என்பதாலும், போதுமான இடவசதி இல்லாத காரணத்தாலும், பத்திரப் பதிவுக்கு வருகைதரும் மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர்.

மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றாமல் இருந்து வரும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.இந்நிலையில், செங்கல்பட்டு கிழக்கு மாவட்டம், திருப்போரூர் தொகுதி வாழ் மக்களின் அத்தியாவசிய, அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றாமலும்; மக்கள் நலன் கருதி கழக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கிடப்பில் போட்டு வைத்தும்; ஏழை, எளிய மக்களுக்கு உரிய மருத்துவ சிகிச்சையை வழங்காமலும் மெத்தனப் போக்கோடு இருந்து வரும் விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும்; மக்களின் அடிப்படைத் தேவைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வலியுறுத்தியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்தின் சார்பில் வருகிற 9-ந்தேதி புதன் கிழமை காலை 10 மணியளவில், திருப்போரூர் பேரூராட்சி மன்ற அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக மகளிர் அணிச் செயலாளரும், கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான பா. வளர்மதி தலைமையிலும்; செங்கல்பட்டு கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் திருக்கழுக்குன்றம் ஆறுமுகம் முன்னிலையிலும் நடைபெறும்.இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் பாராளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள்; மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள்; உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், நகர, பேரூராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

நிர்வாகத் திறனற்ற விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், வியாபாரிகள், பல்வேறு தரப்பட்ட தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.  


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Protest Participate in Thiruporur on behalf of AIADMK 9th Edappadi Palaniswami


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->