பரபரப்பான அரசியல் சூழலில் தமிழகம் வரும் பிரதமர் மோடி..நயினார் நாகேந்திரன் கொடுத்த அப்டேட்.. பின்னணி என்ன?
Prime Minister Modi is coming to Tamil Nadu in a turbulent political environment Nainar Nagendran gave an update What is the background
ஜனவரி 9ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அல்லது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாடு வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பாஜக தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வரும் சூழலில் இந்த தகவல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், “தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்” என்ற பெயரில் அக்டோபர் 11ஆம் தேதி மதுரையில் தொடங்கிய சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
இந்த சுற்றுப்பயணம் ஜனவரி 9ஆம் தேதி புதுக்கோட்டையில் நிறைவடைய உள்ள நிலையில், நிறைவு விழாவை பிரம்மாண்டமாக நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 59 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த பொதுக்கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்களையும் மேடையேற்ற பாஜக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே என்டிஏ கூட்டணியை இறுதி செய்ய பாஜக தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சென்னை கிண்டியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற பாஜக உயர்மட்ட ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த நயினார் நாகேந்திரன், ஜனவரி 9ஆம் தேதி பிரதமர் மோடி அல்லது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வர வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் நாளையே தேர்தல் நடந்தாலும் அதை எதிர்கொள்ள பாஜக தயாராக இருப்பதாகவும் கூறினார். அதேபோல் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் டிசம்பர் 23ஆம் தேதி தமிழகம் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனிடையே, ஜனவரி 9ஆம் தேதி கடலூரில் தேமுதிக மாநாடு நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினமே தேமுதிக தனது கூட்டணி நிலைப்பாட்டை அறிவிக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதே நாளில் பாஜக பொதுக்கூட்டமும் நடைபெற இருப்பதால், தேமுதிக எந்த கூட்டணியில் இணையும் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது.
English Summary
Prime Minister Modi is coming to Tamil Nadu in a turbulent political environment Nainar Nagendran gave an update What is the background