பயிர் சேதம் கணக்கெடுப்பில் குழப்பம்...! புதிய நடைமுறையை கைவிட அரசுக்கு வைகோ வலியுறுத்தல்...!
Confusion crop damage survey Vaiko urges government abandon new practice
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,"கடந்த நவம்பர் மாதத்தில் தமிழகத்தை தாக்கிய கனமழை மற்றும் திட்வா புயல் காரணமாக, மாநிலம் முழுவதும் 2 லட்சத்து 11 ஆயிரத்து 239 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி கடுமையாக சேதமடைந்தன.
வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகள், சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தமிழக அரசை நாடினர்.இதையடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.20 ஆயிரம் இழப்பீடு வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இதற்காக, ‘Crop Damage Assessment’ என்ற கணக்கீட்டு செயலியின் மூலம் வேளாண் அலுவலர்கள் பயிர் சேதத்தை கணக்கெடுத்து வருகின்றனர்.

இந்த செயலி நடைமுறையின் படி, பயிர் பாதிக்கப்பட்ட நிலத்துக்கே நேரில் சென்று, புல எண், உட்பிரிவு விவரங்களை பதிவு செய்து, பாதிக்கப்பட்ட பயிர்களின் புகைப்படங்களை ஜிபிஆர்எஸ் வசதியுடன் செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்னர், அந்த விவரங்கள் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர், வேளாண்மை உதவி இயக்குநர் ஆகியோரால் சரிபார்க்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டால் மட்டுமே, அந்த பயிர்கள் சேதப்பட்ட பட்டியலில் சேர்க்கப்படுகின்றன.
ஆனால், இந்த சிக்கலான நடைமுறை காரணமாக காவிரி டெல்டா மாவட்டங்கள் முழுவதும் விவசாயிகள் பெரும் மனவேதனையில் மூழ்கியுள்ளனர். குறிப்பாக, நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் நிலம் பெற்றவர்கள், கோவில் நிலங்களில் சாகுபடி செய்பவர்கள், பட்டா மாற்றம் செய்யப்படாத நிலங்களில் பயிரிடுபவர்கள், ஒரே சர்வே எண்ணில் பல உட்பிரிவுகளில் சாகுபடி செய்பவர்கள், குத்தகை விவசாயிகள் உள்ளிட்டோர் நிவாரணத்திலிருந்து விலக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
“பல லட்சம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி நடைபெறும் டெல்டா மாவட்டங்களில், இந்த செயலி அடிப்படையிலான கணக்கெடுப்பு நடைமுறை நடைமுறைசாத்தியமற்றது” என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர்.மேலும், இந்த பணிக்காக போதிய அலுவலர்கள் இல்லாததால், கணக்கெடுப்பு பணிகள் தாமதமாகின்றன.
கடந்த குறுவை பருவத்தில் இதே செயலி மூலம் கணக்கெடுக்கப்பட்டபோது, ஆயிரக்கணக்கான விவசாயிகள் விடுபட்டதாகவும், இன்றளவும் அவர்களுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை என்றும் விவசாயிகள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
எனவே, இந்த புதிய செயலி நடைமுறையை உடனடியாக கைவிட்டு, ஏற்கெனவே நடைமுறையில் இருந்த முறையின்படி, வேளாண் உதவி அலுவலர்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்களைக் கொண்டு நேரடி கணக்கெடுப்பு நடத்தி, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் பாகுபாடின்றி நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
மேலும், ஒரு ஏக்கர் சாகுபடிக்காக அரசு ஹெக்டேருக்கு ரூ.90 ஆயிரம் வரை கடன் வழங்கும் நிலையில், பயிர்கள் முற்றிலும் சேதமடைந்தபோது வெறும் ரூ.20 ஆயிரம் மட்டுமே நிவாரணமாக அறிவித்திருப்பது போதுமானதல்ல.
ஆகையால், வழங்கப்படும் கடன் தொகைக்கு ஈடான அளவில் நிவாரணத் தொகையை உயர்த்தி, வாழ்வாதாரத்தை இழந்த விவசாய பெருமக்களின் விழிநீரைத் துடைக்க அரசு முன்வர வேண்டும் என்று வைகோ வலியுறுத்தியுள்ளார்.
English Summary
Confusion crop damage survey Vaiko urges government abandon new practice