தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு! மின்கட்டமைப்பை பலப்படுத்த ரூ.15,032 கோடி திட்டம்? 5,000 ஊழியர்களை நியமிக்க ஆர்டர்!
Power outages continue in Tamil Nadu A 15032 crore plan to strengthen the power infrastructure Order issued to recruit 5000 employees
சென்னை, ஜூன் 16: தமிழ்நாட்டின் மின் விநியோக கட்டமைப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரூ.15,032 கோடி மதிப்பீட்டில் 231 புதிய துணை மின் நிலையங்களை அமைக்கவும், 15,058 மின் பணியாளர்களை முறையாக நியமிக்கவும் முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்ற எரிசக்தித் துறை ஆய்வுக் கூட்டத்தில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் மின் உற்பத்தி, மின் தேவை, மின் விநியோகம் மற்றும் கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் மின்துறை அமைச்சர் நிர்மல் குமார், துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்றனர்.
புதிய அரசு பொறுப்பேற்றதிலிருந்து சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் அவ்வப்போது மின்தடை ஏற்பட்டது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக இரவு நேர மின்வெட்டால் சென்னை மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகிய நிலையில், பிரச்சினைக்கு போர்க்கால அடிப்படையில் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது.
இதையடுத்து, மின் விநியோக கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளை முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
சென்னை மாநகரில் பழமையான மின் உபகரணங்கள், நிலத்தடி கேபிள் பழுதுகள், அதிகரித்த மின் பயன்பாடு மற்றும் பராமரிப்புப் பணிகள் காரணமாக மின்தடைகள் ஏற்பட்டுள்ளதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு தீர்வாக, சென்னை பகுதியில் மட்டும் சுமார் ரூ.2,275 கோடி மதிப்பில் மின் விநியோக கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மாநிலம் முழுவதும் ஏற்கனவே 121 புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட துணை மின் நிலையங்கள் ரூ.10,109 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனுடன் கூடுதலாக 231 புதிய துணை மின் நிலையங்கள் ரூ.15,032 கோடி மதிப்பீட்டில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மின்தடை புகார்களுக்கு உடனடி தீர்வு வழங்கும் வகையில்:
-
77 புதிய மின்தடை நீக்க மையங்கள்
-
7 கூடுதல் மின்பழுது நீக்கும் குழுக்கள்
-
125 மின்பழுது நீக்கும் வாகனங்கள்
-
10 உயர்மட்ட கண்காணிப்புக் குழுக்கள்
-
2 நிலத்தடி கேபிள் பழுது கண்டறியும் சிறப்பு குழுக்கள்
செயல்பாட்டில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின் பழுதுகளை விரைவாக சரிசெய்யவும், ரோந்து பணிகளை தீவிரப்படுத்தவும் 15,058 புதிய மின் பணியாளர்களை முறையாக நியமிக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தேவையான மின் தளவாடப் பொருட்களை உடனடியாக கொள்முதல் செய்து, பணியாளர்களை நேரடிப் பணியில் ஈடுபடுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் ஏற்கனவே உள்ள 125 ரோந்து குழுக்களை முழு நேர சுற்றுப்பணியில் ஈடுபடுத்தி, புகார் பெறப்பட்ட இடங்களுக்கு உடனடியாகச் சென்று மின் கோளாறுகளை சரிசெய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பொதுமக்களின் மின் புகார்களை பெறுவதற்காக மின்னகம் (94987 94987) மூலம் 24 மணி நேரமும் தொலைபேசி மற்றும் சமூக வலைதள கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் வாட்ஸ்அப் சேவையும் இந்த அமைப்புடன் இணைக்கப்பட உள்ளது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி, பேட்டரி மின் சேமிப்பு அமைப்புகள் (Battery Energy Storage Systems), புதிய அணுமின் நிலையங்கள் மற்றும் நீர்மின் திட்டங்கள் மூலம் எதிர்கால மின் தேவையை பூர்த்தி செய்ய தமிழக அரசு திட்டமிட்டு செயல்பட்டு வருவதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
“மக்களுக்கு தரமான, நம்பகமான மற்றும் தடையற்ற மின்சார சேவையை வழங்க அரசு உறுதிபூண்டுள்ளது. மின் கோளாறுகளுக்கு உடனடி தீர்வு வழங்க அதிகாரிகள் தீவிரமாக செயல்பட வேண்டும்” என முதல்வர் விஜய் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Power outages continue in Tamil Nadu A 15032 crore plan to strengthen the power infrastructure Order issued to recruit 5000 employees