தமிழகத்தில் 498 புதிய இவி சார்ஜிங் நிலையங்கள்: மத்திய அரசின் ‘PM E-DRIVE’ திட்டத்தால் மின்சார வாகனப் பயணிகளுக்கு பெரும் நிம்மதி!
498 New EV Charging Stations in Tamil Nadu Major Relief for Electric Vehicle Users Thanks to the Central Government’s ‘PM E-DRIVE’ Scheme!
சென்னை: இந்தியாவில் பசுமைப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் நோக்கில் மத்திய அரசு மின்சார வாகன உள்கட்டமைப்பை தீவிரமாக விரிவுபடுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ‘பிஎம் இ-டிரைவ் (PM E-DRIVE)’ திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 4,874 பொதுப் பயன்பாட்டு மின்சார வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த மெகா திட்டத்திற்காக மத்திய அரசு ரூ.2,000 கோடி மானிய நிதி ஒதுக்கியுள்ளது. நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ள 74 முக்கிய தேசிய நெடுஞ்சாலை வழித்தடங்களில் இந்த சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இதில், 50 வழித்தடங்கள் மின்சார கார்கள் மற்றும் பேருந்துகளுக்காகவும், 24 வழித்தடங்கள் கனரக இ-டிரக்குகள் மற்றும் சரக்கு வாகனங்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளன.
தமிழகத்திற்கு 498 புதிய சார்ஜிங் நிலையங்கள்
இந்த தேசிய அளவிலான திட்டத்தின் முதற்கட்ட செயல்பாட்டில் தமிழகத்திற்கு முக்கிய இடம் வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் 498 புதிய அதிவேக சார்ஜிங் நிலையங்கள் தமிழகத்தின் முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட உள்ளன.
இதற்காக ரூ.34.6 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் மின்சார வாகனப் பயன்பாடு அதிகரித்து வருவதையும், நீண்ட தூரப் பயணிகளின் எண்ணிக்கையையும் கருத்தில் கொண்டு இந்த முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எந்தெந்த வழித்தடங்களில் அமைகின்றன?
புதிய சார்ஜிங் நிலையங்கள் பின்வரும் முக்கிய தேசிய நெடுஞ்சாலை வழித்தடங்களில் அமைக்கப்பட உள்ளன:
மேலும், திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட முக்கிய தொழில் மற்றும் போக்குவரத்து மையங்களை இணைக்கும் சாலைகளிலும் சார்ஜிங் புள்ளிகள் அமைக்கப்பட உள்ளன.
நீண்ட தூர பயணிகளுக்கு ‘ரேஞ்ச் அங்க்ஸைட்டி’ இனி இல்லை
தமிழகத்தில் தற்போது சுமார் 1,800 பொதுச் சார்ஜிங் நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன. புதிய 498 அதிவேக சார்ஜிங் நிலையங்கள் சேர்க்கப்படுவதால், மாநிலத்தின் மின்சார வாகன உள்கட்டமைப்பு மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம், சென்னை முதல் நாகர்கோவில் வரை நீண்ட தூரம் பயணிக்கும் மின்சார கார் மற்றும் டாக்ஸி ஓட்டிகள் இனி சார்ஜ் தீர்ந்து விடுமோ என்ற அச்சமின்றி பயணம் செய்ய முடியும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
தேசிய சராசரியை விட குறைந்த செலவு
தமிழகத்தில் ஒரு சார்ஜிங் நிலையத்தை அமைப்பதற்கான சராசரி செலவு ரூ.6.9 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது. இது தேசிய சராசரி செலவான ரூ.10.3 லட்சத்தை விட குறைவு. காரணம், தமிழகத்தில் முதற்கட்டமாக அமைக்கப்படவிருக்கும் நிலையங்கள் பெரும்பாலும் மின்சார இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்கள் பயன்பாட்டை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன.
தென்னிந்தியாவில் இவி பயன்பாட்டுக்கு புதிய ஊக்கம்
அண்டை மாநிலமான கேரளாவிலும் 147 புதிய சார்ஜிங் நிலையங்கள் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட உள்ளன. இதன் மூலம் ஒட்டுமொத்த தென்னிந்தியாவிலும் மின்சார வாகனப் பயன்பாடு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலைகளில் குறிப்பிட்ட இடைவெளியில் சார்ஜிங் வசதி கிடைப்பது, தமிழகத்தில் மின்சார வாகன விற்பனையையும் பசுமைப் பொருளாதார மாற்றத்தையும் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
English Summary
498 New EV Charging Stations in Tamil Nadu Major Relief for Electric Vehicle Users Thanks to the Central Government’s ‘PM E-DRIVE’ Scheme!