சர்வதேச தொழிலாளர் தினம்; அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து..!
Political Party Leaders Extend Greetings on International Workers Day
நாளை உலகமே முழுவதும் தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த மே 01 தினத்தை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது உழைப்பாளர் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
அதன்படி, எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது;
'' உழைப்பில்தான் உடல் வலிமை உறுதி பெறும்; உழைப்பு மட்டுமே நம்மை உயர்த்தும்; உழைப்பின் பயனால் கிடைக்கும் உயர்வே மனநிறைவு அளிக்கும்; நம்பிக்கையோடு உழைத்தால் வாழ்வில் வெற்றி பெறுவது நிச்சயம்.''
சண்முகம் (மார்க்சிஸ்ட்)
''உழைப்பவருக்கே உலகம் உரியது என்று எட்டுத் திசையிலும் கொட்டி முழக்கமிடுவதே மே தினமாகும். எட்டு மணி நேர வேலை, எட்டு மணி நேர ஓய்வு, எட்டு மணி நேர உறக்கம் என்பதைக் குருதி சிந்தி, உயிர் நீத்து போராடிப் பெற்றுக் கொடுத்த தொழிலாளி வர்க்கத்தின் மகத்தான தியாகிகளுக்கு வீர வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.''
வைகோ (மதிமுக)
''முதலாளித்துவ நுகத்தடியில் அடிமைகளாகப் பூட்டப்பட்டிருந்த உலகத் தொழிலாளர்கள் விடுதலை பெற்ற வீர வரலாறு பிரகடனம் செய்யப்பட்ட நாள்தான், ‘மே நாள்’ ஆகும். உலகத் தொழிலாளர் வர்க்கம் ரத்தம் சிந்தி, உயிர்ப் பலிகள் கொடுத்துப் போராடிப் பெற்ற உரிமையான எட்டு மணி நேரம் வேலைநாள் என்பது உலகம் முழுவதும் சட்டமாக்கப்பட்டது. உழைக்கும் தோழர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுவோம்.''
திருநாவுக்கரசர் (காங்கிரஸ்)
''தொழிலாளர்களே நாட்டின் முதுகெலும்பாகும். நாட்டின் வளர்ச்சிக்கும் பலத்திற்கும், உயர்விற்கும், முன்னேற்றத்திற்கும் அஸ்திவாரமாக திகழ்பவர்கள் தொழிலாள பெருமக்களே. அவர்களின் வாழ்வு சிறக்கவும், குடும்பத்தில் வளமும், நலமும் பெருகிடவும் உளமார வாழ்த்துகிறேன்.''
ஜி.கே.வாசன் (தமாகா)
''தொழிலாளர் தினத்தை கொண்டாடும் வேளையில் அவர்களின் உழைப்பு, சமூக மற்றும் பொருளாதார சாதனைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் நியாயமான வேலை நிலைகளுக்குப் போராடியவர்களின் தியாகத்தை நினைவுகூர்ந்து போற்ற வேண்டும்.''
செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்)
நாட்டின் ஒவ்வொரு முன்னேற்றத்திற்கும் அடிப்படைக் காரணம் உழைப்பாளர்களின் அர்ப்பணிப்பு. எனவே, அவர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும். அவர்கள் முன்னேறினால் தான் நாடு முன்னேறும். சமத்துவமும், சமூகநீதியும் நிலைநாட்டும் நாளாக இந்த மே தினம் அமையட்டும். வறுமையை வெல்லும் ஆயுதமானது உழைப்பு. அதை மதிப்பதும், காப்பதும் நம் ஒவ்வொருவரின் கடமையாகும். உழைப்பை போற்றி, உழைப்போரை உயர்த்தி சமத்துவத்தை நிலை நிறுத்துவோம். ''
என்.ஆர். தனபாலன் (பெருந்தலைவர் மக்கள் கட்சி)
''உழைக்கும் தொழிலாளர்கள்,விவசாயத் தொழிலாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள் நெசவுத் தொழிலாளர்கள் இன்னும் இது போன்ற எண்ணற்ற வேலைகளில் ஈடுபடும் அனைத்து உழைக்கும் தொழிலாளர்களுக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.''
எர்ணாவூர் நாராயணன் (சமத்துவ மக்கள் கழகம்)
''சாதி,மதம்,இனம் மொழி ஆகிய தடைகளை கடந்து தாங்கள் தொழிலாளர்கள் என்ற உணர்வுடன் ஒன்றுபட்டுப் போராடினால் வெற்றி கிடைக்கும் என்பதை மே தினத்தின் வரலாறு நமக்கு கற்பிக்கிறது. உழைக்கும் தொழிலாளர்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் இந்தநாள் கொண்டாடப்படுகிறது.''
புதிய நீதிக்கட்சி தலைவர் ஏசி சண்முகம், விஜய் வசந்த் எம்.பி, தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, நமதுரிமை காக்கும் கட்சி பொதுச்செயலாளர் செங்கை பத்மநாபன், இந்திய ரியல் எஸ்டேட் கூட்டமைப்பின் நிறுவனர் ஹென்றி, தமிழ்நாடு யாதவ மகா சபை தலைவர் ராமச்சந்திரன், தேசிய நாடார் சங்க பொதுச்செயலாளர் விஜயகுமார், இந்திய தேசிய ரியல் எஸ்டேட் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலத்தரகர்கள் சங்க தலைவர் கண்ணன், இந்திய நாடார்கள் பேரமைப்பு தலைவர் ராம் செளந்தர பாண்டியன், விஜிபி உலக தமிழ் சங்கத்தின் தலைவர் சந்தோஷ் ஆகியோர் மே தின வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
English Summary
Political Party Leaders Extend Greetings on International Workers Day