2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் OBC/DNT பிரிவினரைத் தனித்துப் பட்டியலிடுக - டாக்டர் இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் OBC/DNT பிரிவினரைத் தனித்துப் பட்டியலிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர், தலைவர் மருத்துவர் ச.இராமதாஸ்  வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்த் அவரின் அறிக்கையில், "இந்தியாவில் வரும் 2027-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பத்தாண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) மற்றும் சீர்மரபினர் (DNT) ஆகியோரைத் தனிப்பிரிவாகச் சேர்த்து கணக்கெடுக்க வேண்டும் எனப் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். மத்திய அரசு அண்மையில் வெளியிட்டுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிவிப்புகளில், வீடுகள் பட்டியலிடும் பணியின் போது கேட்கப்படும் சாதி குறித்த வினாவில் 'பட்டியல் சாதிகள்/பட்டியல் பழங்குடியினர்' மற்றும் 'மற்றவர்கள்' என்று மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 100 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட OBC மற்றும் சீர்மரபினர் மக்கள் 'மற்றவர்கள்' என்ற பொதுவான பிரிவில் அடைக்கப்பட்டு, முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பது சமூக நீதிக்கு இழைக்கப்படும் மிகப்பெரிய துரோகமாகும். ஒரு நாட்டின் முறையான நிர்வாகத்திற்கும், சமூக-பொருளாதாரத் திட்டமிடலுக்கும் நம்பகமான மற்றும் துல்லியமான தரவுகள் மிக அவசியமானவை. 1872-ல் ஆங்கிலேயர் காலத்திலேயே சாதி வாரியான தரவுகள் சேகரிக்கப்பட்ட நிலையில், சுதந்திர இந்தியாவில் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமைகளின்படி, பிற்படுத்தப்பட்ட மக்களுக்குப் போதுமான பிரதிநிதித்துவம் வழங்கத் தேவையான சாதி வாரியான கணக்கெடுப்பை நடத்த இதுவரை எந்த அரசுமே முன்வரவில்லை என்பது வேதனையானது.

SC/ST பிரிவினரை மட்டும் தனிப் பிரிவாகக் கொண்டு கணக்கெடுத்துவிட்டு, அதே நிலையில் உள்ள OBC/DNT பிரிவினரைத் தவிர்ப்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14, 15 மற்றும் 16-வது பிரிவுகளின் கீழ் வழங்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறும் தன்னிச்சையான செயலாகும். காகா காலேல்கர் ஆணையம் முதல் மண்டல் ஆணையம் வரையிலான பல்வேறு பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்கள் சாதி வாரியான கணக்கெடுப்பின் அவசியத்தை வலியுறுத்தியும், மத்திய அரசு அதனைத் தொடர்ந்து தட்டிக்கழித்து வருகிறது. தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் OBC மக்களுக்கான இடஒதுக்கீட்டை உறுதி செய்யத் துல்லியமான தரவுகள் அவசியம் என்று உச்ச நீதிமன்றமே பலமுறை சுட்டிக்காட்டியுள்ளது. முறையான தரவுகள் இல்லாத காரணத்தால், உள்ளாட்சி அமைப்புகளில் OBC பிரிவினருக்கான இடஒதுக்கீட்டு உரிமைகளை நீட்டிக்க முடியாத சூழல் நிலவுகிறது.

செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் வளர்ந்துள்ள இந்த டிஜிட்டல் யுகத்தில், கோடிக்கணக்கான தரவுகளை நொடிப்பொழுதில் சேகரிக்க முடியும் போது, ஒரு சிறு குறியீட்டைச் சேர்ப்பதன் மூலம் OBC மக்களைக் கணக்கெடுப்பது ஒன்றும் கடினமான காரியம் அல்ல. கால்நடைகளுக்கும் விலங்குகளுக்கும் கணக்கெடுப்பு நடத்தும் அரசு, 100 கோடி மக்களின் எண்ணிக்கையைக் கணக்கெடுக்க மறுப்பது அவர்களை இழிவுபடுத்தும் செயலாகும்.

தமிழகத்தில் வரும் ஜூலை 17, 2026 முதல் ஜூலை 31, 2026 வரை நடைபெறவுள்ள வீடுகள் பட்டியலிடும் பணியிலும், 2027-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பிலும், OBC/DNT பிரிவினரைத் தனிப்பிரிவாகச் சேர்த்து கணக்கெடுக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்துகிறேன். 2012-ஆம் ஆண்டின் சமூக பொருளாதார சாதி கணக்கெடுப்பில் (SECC) நடந்த குளறுபடிகளைத் தவிர்க்க, 1948-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்புச் சட்டத்தின் கீழ் முறையான கணக்கெடுப்பை மத்திய அரசு நடத்த வேண்டும். சமூக நீதியே சரிநிகர் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதால், 100 கோடி மக்களின் உரிமையைப் பறிக்கும் வகையில் அவர்களைப் புறக்கணிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மத்திய அரசு உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, OBC மக்களின் நீண்ட காலக் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pmk Ramadoss obc dnt census issue


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..




Seithipunal
--> -->