மேகதாது அணை கட்டப்பட்டிருந்தால், கபினியிலிருந்து இப்போது வரும் தண்ணீரும் கிடைத்திருக்காது - அன்புமணி இராமதாஸ்! - Seithipunal
Seithipunal


மேகதாது அணை கட்டப்பட்டிருந்தால், கபினியிலிருந்து இப்போது வரும் தண்ணீரும் கிடைத்திருக்காது: புதிய அணையை தமிழகம் தடுத்து நிறுத்தியே தீர வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கர்நாடகத்தில் கபினி அணை நிரம்பியதால் தமிழ்நாட்டுக்கு காவிரியியில்  நேற்று வினாடிக்கு 25 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடப்பட்ட நிலையில், இன்று காலை வினாடிக்கு 10 ஆயிரமாக குறைக்கப்பட்டு விட்டது. பின்னர் நீர்வரத்து வினாடிக்கு 28,009 கன அடியாக அதிகரித்ததைத் தொடர்ந்து நீர் திறப்பு வினாடிக்கு 14,958 கன அடியாக அதிகரிக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டிற்கு சட்டப்படியாக வழங்கப்பட வேண்டிய நீரை வழங்க கர்நாடக அரசு தயாராக இல்லை என்பதையும், உபரிநீரை திறந்து விடும் வெள்ள வடிகாலாக மட்டுமே தமிழகத்தின் காவிரியை பயன்படுத்துகிறது என்பதையுமே இது காட்டுகிறது.

கர்நாடகத்தில் உள்ள அணைகளில்  இன்று காலை நிலவரப்படி 74.05 டி.எம்.சி  தண்ணீர் உள்ளது. இது அங்குள்ள 4 அணைகளின் மொத்தக் கொள்ளளவான 114.57 டி.எம்.சியில்  64% ஆகும்.  கபினி அணையில் 94%, ஹாரங்கி அணையில் 92%, ஹேமாவதி அணையில் 73%, கிருஷ்ணராஜசாகர் அணையில் 42% நீர் உள்ளது. ஜூலை மாத இறுதி வரை தமிழ்நாட்டுக்கு கர்நாடகம்  40 டி.எம்.சி தண்ணீர் வழங்க வேண்டியுள்ள நிலையில்,  தமிழகத்திற்கு சட்டப்படியும், நியாயப்படியும் தண்ணீர் வழங்க வேண்டும் என்ற எண்ணம் இருந்திருந்தால் கிருஷ்ணராஜ சாகர் தவிர மீதமுள்ள 3 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு கர்நாடகம் தண்ணீரை திறந்து விட்டிருக்கலாம்.

ஆனால், கபினி அணை  நிரம்பிய நிலையில்  அதன் உபரி நீரை எங்கும் தேக்கி வைக்க முடியாது என்பதால் தான் வேறு வழியின்றி காவிரியில் திறந்து விட்டிருக்கிறது. ஹாரங்கி அணை நிரம்பி விட்ட நிலையில்,  அந்த அணைக்கு  10430 கன அடி நீர் வரும் நிலையில், அதைவிட  அதிகமாக 14470 கன அடி நீரை  திறந்து விட்டு கிருஷ்ணராஜசாகர் அணையில்  சேமித்து வைக்கிறது.  ஹேமாவதி அணை இன்னும் ஒரு வாரத்தில் நிரம்பி விடும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அதன் பின் அதன் உபரி நீரையும்  கிருஷ்ணராஜசாகர் அணையில் தான் சேமித்து வைக்கும். தமிழகத்திற்கு தண்ணீர் தரக்கூடாது என்ற கர்நாடகத்தின் நிலைப்பாட்டையே இது காட்டுகிறது.

கர்நாடக அரசால் புதிதாக கட்ட உத்தேசிக்கப்பட்டுள்ள  மேகதாது அணை மேற்கண்ட 4 அணைகளுக்கும் கீழாக, தமிழக  எல்லைக்கு அருகில் அமையும்.  அந்த அணை மட்டும் கட்டப்பட்டிருந்தால் கபினி அணையிலிருந்து திறக்கப்பட்டுள்ள தண்ணீரும் கூட தமிழ்நாட்டுக்கு கிடைக்காது. ஹாரங்கி, ஹேமாவதி அணைகளில் இருந்து  திறக்கப்பட்டு, கிருஷ்ணராஜ சாகர் அணை வழியாக காவிரியில் விடப்படும் தண்ணீரும் கூட மேகதாது அணையில் தடுக்கப்பட்டு விடும்.  மேகதாது அணையும் நிரம்பி தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கிடைப்பது என்பது எட்டாவது அதிசயமாகவும், குதிரைக் கொம்பாகவும் தான் இருக்கும்.  அதனால் தான் மேகதாது அணையை கட்ட அனுமதிக்கக் கூடாது என்று கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வருகிறது.

எனவே, மேகதாது அணை விவகாரத்தில்  தவறான நிலைப்பாடுகளை எடுத்து  கர்நாடக அரசின் சதிகளுக்கும், சூழ்ச்சிகளுக்கும் தமிழக அரசு இரையாகி விடக் கூடாது. மேகதாது அணையை கட்ட அனுமதிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும்.  அனைத்து அரசியல் கட்சிகள்,  வேளாண் அமைப்புகள் ஆகியவற்றின் கருத்துகளை அறிந்து  தெளிவான செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

pmk anbumani ramadoss cauvery issue karnataka


கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?


செய்திகள்



Seithipunal
--> -->