பெரியபாளையம் தொழிற்சாலை வாயுக்கசிவு: 2 பெண்கள் உயிரிழப்பு - ரூ.2 லட்சம் நிவாரணம் மற்றும் அதிரடி விசாரணைக்கு முதல்வர் ச.ஜோசப் விஜய் உத்தரவு!
Periyapalayam Factory Gas Leak 2 Women Dead CM Joseph Vijay Announces 2 Lakh Relief and Orders Immediate High Level Inquiry
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே கன்னிகைபேர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் மீன் உணவு ஏற்றுமதி தொழிற்சாலையில் நேரிட்ட அமோனியா வாயுக்கசிவு விபத்து குறித்து, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து, பாதிக்கப்பட்டவர்களுக்கான அதிகாரப்பூர்வ நிவாரணங்கள் மற்றும் உயர்மட்ட விசாரணைக்கான அதிரடி உத்தரவுகளை அரசாங்க செய்தி வெளியீடு வாயிலாக வெளியிட்டுள்ளார்.
விபத்தின் பின்னணி மற்றும் பாதிப்பு விவரங்கள்:
21.06.2026 அன்று இத்தனிியார் தொழிற்சாலையின் உற்பத்திப் பிரிவில் ஏற்பட்ட எதிர்பாராத அமோனியா வாயுக்கசிவு காரணமாக, அங்கு பணியில் இருந்த 64 நபர்கள் (60 பெண்கள், 4 ஆண்கள்) கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகினர். அவர்களின் தற்போதைய மருத்துவ நிலை விவரம்:
உயிரிழப்பு: விபத்தின் வீரியம் தாங்காமல் துரதிர்ஷ்டவசமாக 2 பெண் தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
அரசு மருத்துவமனை: 15 நபர்கள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
தனியார் மருத்துவமனை (ICU): 23 நபர்கள் தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொதுக் கண்காணிப்பு: மேலும் 24 நபர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளனர்.
காலக்கெடுவுடன் கூடிய உயர்மட்ட விசாரணை:
இவ்விபத்து குறித்துத் தகுந்த விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இயக்குநர், பொதுச் சுகாதாரத் துறை கூடுதல் இயக்குநர் மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரிய உறுப்பினர்-செயலாளர் ஆகியோர் தலைமையிலான குழுவினர் சம்பவ இடத்தில் நேரடி ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
விசாரணைக் காலக்கெடு: விபத்து குறித்து முதற்கட்ட விசாரணை அறிக்கையினை 24 மணி நேரத்திற்குள்ளாகவும், முழுமையான விரிவான விசாரணை அறிக்கையினை 3 நாட்களுக்குள்ளாகவும் அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும் என முதலமைச்சர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
முதலமைச்சரின் நிவாரண மற்றும் தற்காப்பு ஆணைகள்:
பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ஆதரவாகப் பின்வரும் முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்:
நிவாரணத் தொகை: உயிரிழந்த இரண்டு பெண் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா 2 லட்சம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும்.
அரசுச் செலவில் நல்லடக்கம்: உயிரிழந்தவர்கள் வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களது உடலினைச் சொந்த மாநிலத்திற்கு அனுப்பி நல்லடக்கம் செய்வதற்கான அனைத்துச் செலவுகளையும் அரசே ஏற்கும்.
காப்பீட்டு இழப்பீடு: பாதிக்கப்பட்ட மற்றும் உயிரிழந்த தொழிலாளர்களுக்குத் தொழிலாளர் மாநில ஈட்டுறுதி காப்பீட்டுத் (ESI) திட்டம் அல்லது வேலையாள் இழப்பீடு சட்டத்தின் கீழ் உரிய இழப்பீடை விரைந்து வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
பேராபாய தொழிற்சாலைகள் ஆய்வு: இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபத்துக்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, தமிழகத்தில் உள்ள அனைத்து பேராபாய தொழிற்சாலைகளிலும் (Hazardous Industries) உடனடியாகக் குழு ஆய்வுகள் நடத்த ஆணையிடப்பட்டுள்ளது.
தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர், உள்ளூர் சட்டமன்ற உறுப்பினர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் (மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி) மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் தற்பொழுது சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று ஆய்வுப் பணிகளையும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான அவசர உதவிகளையும் ஒருங்கிணைத்து வருகின்றனர்.
English Summary
Periyapalayam Factory Gas Leak 2 Women Dead CM Joseph Vijay Announces 2 Lakh Relief and Orders Immediate High Level Inquiry