மக்களின் குரலே தி.மு.க. தேர்தல் அறிக்கை...! - கோவையில் கனிமொழி எம்.பி. உறுதி
peoples voice DMKs election manifesto Kanimozhi MP affirms Coimbatore
மேற்கு மண்டல தி.மு.க. மகளிர் அணி மாநாடு வரும் 29-ம் தேதி திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்வதற்காக, தி.மு.க. மகளிர் அணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி. இன்று சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வந்தடைந்தார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கனிமொழி எம்.பி., பேசுகையில்,“தி.மு.க. தேர்தல் அறிக்கை என்பது ஒரு கட்சியின் அறிக்கையாக அல்ல; மக்களின் எதிர்பார்ப்புகளை பிரதிபலிக்கும் மக்கள் அறிக்கையாக இருக்க வேண்டும் என்பதே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விருப்பம்.
அதற்காக தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியில், கோவையை மையமாக வைத்து நிர்வாகிகள், தொழில்துறையினர், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரிடமும் கருத்துகள் பெறப்படும்” என்றார்.மேலும்,“மக்கள் என்ன விரும்புகிறார்கள், அவர்களின் தேவைகள் என்ன என்பதை நேரில் கேட்டறிந்து, நடைமுறையில் செய்யக்கூடியவற்றையே வாக்குறுதிகளாக வழங்குவோம்.
வாக்குறுதிகளின் எண்ணிக்கை முக்கியமல்ல; அவற்றின் பயன் முக்கியம்” என தெரிவித்தார்.தேர்தல் காலங்களில் எழும் விமர்சனங்கள் குறித்து பேசிய அவர்,“அரசியல் காரணங்களுக்காக பலரும் விமர்சனங்களை முன்வைப்பார்கள். அவற்றுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
யாருக்கு எவ்வளவு ஆதரவு கிடைக்கும் என்பது தேர்தல் முடிவில் தான் தெளிவாக தெரியும். எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது. மீண்டும் திராவிட மாடல் ஆட்சி தொடரும். மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக மீண்டும் பொறுப்பேற்பார்” என்று உறுதியாக தெரிவித்தார்.
இதற்கு முன், கோவை விமான நிலையத்தில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் கனிமொழி எம்.பி.க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர்கள் தொண்டாமுத்தூர் அ.ரவி, தளபதி முருகேசன், துரை செந்தமிழ்செல்வன் உள்ளிட்ட தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டனர்.
English Summary
peoples voice DMKs election manifesto Kanimozhi MP affirms Coimbatore