பரந்தூர் விமான நிலையத் திட்டம்: "தமிழ்நாடு அரசு திட்டத்தை நிறுத்தக் கோரவில்லை" – மாநிலங்களவையில் மத்திய அரசு விளக்கம்
Parandur Airport Project Did not ask to halt the project Central Government clarifies in Rajya Sabha
பரந்தூர் பசுமை விமான நிலையத் திட்டம் தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளது. அதில், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை நிறுத்துமாறு தமிழ்நாடு அரசு எந்த கோரிக்கையையும் மத்திய அரசிடம் விடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக மாநிலங்களவை உறுப்பினர் பி. வில்சன், பரந்தூர் விமான நிலையத் திட்டத்தின் தற்போதைய நிலை, திட்டச் செலவு, முன்னேற்றம், நிறைவு காலக்கெடு மற்றும் புதிய தமிழக அரசு திட்டத்தின் இடத்தை மாற்ற அல்லது நிறுத்த கோரிக்கை வைத்துள்ளதா என்பது உள்ளிட்ட பல கேள்விகளை மாநிலங்களவையில் எழுப்பியிருந்தார்.
இதற்கு, சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் முரளிதர் மொஹோல் எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார்.
அந்தப் பதிலில், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO) 2024-ஆம் ஆண்டு பரந்தூரில் புதிய பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பித்ததாகவும், அதனைத் தொடர்ந்து 2025 ஏப்ரல் 7-ஆம் தேதி மத்திய சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் கொள்கை ரீதியிலான (In-Principle) ஒப்புதலை வழங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், முதல் கட்டத் திட்டத்தின் மதிப்பிடப்பட்ட செலவு சுமார் ரூ.10,500 கோடி எனவும், நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மறுசீரமைப்பு, சுற்றுச்சூழல் அனுமதிகள், நிதி ஏற்பாடுகள் உள்ளிட்ட பணிகளை மாநில அரசு அல்லது திட்டத்தை செயல்படுத்தும் அமைப்பே மேற்கொள்ள வேண்டுமென 2008-ஆம் ஆண்டுக்கான பசுமை விமான நிலையக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் விளக்கப்பட்டுள்ளது.
முக்கியமாக, "பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை நிறுத்த வேண்டும் அல்லது இடத்தை மாற்ற வேண்டும் என்று தமிழ்நாடு அரசு மத்திய அரசிடம் எந்த கோரிக்கையும் விடுக்கவில்லை" என்று அமைச்சர் தனது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரத்தில், திட்டம் எப்போது முழுமையாக நிறைவடையும் என்பது நிலம் கையகப்படுத்துதல், சுற்றுச்சூழல் அனுமதிகள், நிதி உள்ளிட்ட பல்வேறு நிர்வாக அம்சங்களைப் பொறுத்தே அமையும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
விமான நிலைய விரிவாக்கப் பணிகள்
மத்திய அரசு தனது பதிலில், மாநிலத்தின் பிற முக்கிய விமான நிலையங்களில் நடைபெற்று வரும் மேம்பாட்டுப் பணிகள் குறித்தும் தகவல்களை வழங்கியுள்ளது.
-
சென்னை விமான நிலையம்: ரூ.2,467 கோடி மதிப்பில் இரண்டாம் கட்ட நவீனமயமாக்கல் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதுவரை சுமார் 81% பௌதிக முன்னேற்றமும், 71% நிதி முன்னேற்றமும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மழைநீர் வடிகால், டெர்மினல்-1 புதுப்பிப்பு மற்றும் ஏர்சைடு உள்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகளும் நடைபெற்று வருகின்றன.
-
திருச்சிராப்பள்ளி விமான நிலையம்: ரூ.80.17 கோடி செலவில் புதிய விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரம் (ATC) மற்றும் தொழில்நுட்பக் கட்டடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டம் சுமார் 76% பௌதிக முன்னேற்றத்தை எட்டியுள்ளது.
-
கோயம்புத்தூர் விமான நிலையம்: புதிதாக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் எல்லைச் சுவர் அமைத்தல் மற்றும் தற்போதைய முனையக் கட்டிடத்தை விரிவுபடுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பரந்தூர் விமான நிலையத் திட்டம் குறித்து அரசியல் கட்சிகள் மற்றும் உள்ளூர் மக்களிடையே தொடர்ந்து பல்வேறு கருத்துகள் நிலவி வருகின்றன. எனினும், மாநிலங்களவையில் மத்திய அரசு அளித்துள்ள பதிலின்படி, தமிழ்நாடு அரசு திட்டத்தை நிறுத்துமாறு அல்லது அதன் இடத்தை மாற்றுமாறு இதுவரை எந்த அதிகாரப்பூர்வ கோரிக்கையும் விடுக்கவில்லை என்பது தெளிவாகியுள்ளது.
English Summary
Parandur Airport Project Did not ask to halt the project Central Government clarifies in Rajya Sabha