தமிழக மக்களுக்கு ஒருமுறை ரூ.5,000 மற்றும் 2 முறை ரூ.10,000 நிதியுதவி வழங்க வேண்டும் - ஓ.பி.எஸ்.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வெள்ளத்தால் ஒருமுறை பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5,000 மற்றும் 2 முறை பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.10,000 நிதியுதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் வலியுறுத்தி உள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்ற ஆண்டு நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெருமழை பெய்ததன் காரணமாக தமிழ்நாட்டில், பெரும்பாலான பகுதிகளில் தெருக்களிலும், வீடுகளிலும் மழைநீர் புகுந்து மக்களின் உடைமைகளுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டது. இந்தப் பாதிப்பிற்கு இதுவரை எவ்வித நிதியுதவியும் அளிக்காத நிலையில், 30-12-2021 அன்று சென்னை மற்றும் அதனையொட்டியுள்ள மாவட்டங்களில் வரலாறு காணாத மிகப்பெரிய கனமழை பெய்து மக்களுக்கு ஆற்றொணாத் துயரத்தினை அளித்து, கூடுதல் நிதிச் சுமையினை ஏற்படுத்தியுள்ளது. இது மிகவும் கவலை அளிக்கக்கூடியது.

சென்னையில் 30-12-2021 அன்று பிற்பகல் 12-15 மணிக்குத் தொடங்கிய மழை இரவு வரை தொடர்ந்து விடாமல் பெய்ததன் விளைவாக சென்னை மாநகரமே வெள்ளத்தில் மிதந்துள்ளது. சென்னை வாழ் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துவிட்டது. தியாகராய நகர், கே.கே. நகர், அசோக் நகர், வேளச்சேரி, நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், எக்மோர், தேனாம்பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, கோபாலபுரம், பாரிமுனை, அடையாறு, சைதாப்பேட்டை, கிண்டி, திருவான்மியூர், நீலாங்கரை, சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள அனைத்து சாலைகளும் ஆறு போல் - காட்சியளித்தது. பல இடங்களில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து மக்களின் உடைமைகள் சேதம் அடைந்துள்ளன. இதுகுறித்த முன்னறிவிப்பு ஏதுமில்லாததால் மக்கள் செய்வதறியாது திகைத்தனர். அண்ணா சாலை, பூந்தமல்லி நெடுஞ்சாலை, டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலை உள்ளிட்ட பிரதான சாலைகளில் எல்லாம் ஆறு போல் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாயினர். மேட்லி சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, ரிசர்வ் வங்கி சுரங்கப்பாதை, கெங்குரெட்டி சுரங்கப் பாதை ஆகியவை மூடப்பட்டதால், வாகனங்கள் மாற்று வழியில் திருப்பி விடப்பட்டன.

இதன் விளைவாகவும், பல சாலைகள் ஆறு போல் காட்சி அளித்ததன் காரணமாகவும், பத்து நிமிடத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு இரண்டு மணி நேரம் ஆகியது. இரு சக்கர வாகனங்கள் பழுதடைந்ததன் காரணமாக, பல வாகன ஓட்டிகள் வாகனங்களை சாலையின் ஓரமாக நிறுத்திவிட்டு நடந்தும், ரெயில் மூலமாகவும் தங்கள் இல்லம் சென்றடைந்து இருக்கின்றனர். அலுவலகங்களிலிருந்து வீடு திரும்புவது என்பது மிகப்பெரிய சவாலாகிவிட்டது. அனைத்து மக்களும் உயிரைப் பணயம் வைத்து பயணம் செய்திருக்கிறார்கள். ஏற்கெனவே பாதிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக தற்போது பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. இரண்டு பாதிப்புகளுக்கும் நிதியுதவி அளிக்க வேண்டிய கடமை தி.மு.க. அரசிற்கு உள்ளது. அந்தக் கடமையை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
 
2015-ஆம் ஆண்டு இதேபோன்று வெள்ளப் பெருக்கு ஏற்பட்டபோது, ஜெயலலிதா அவர்கள் எந்ததெந்தத் தெருக்கள் வெள்ளத்தால் சூழப்பட்டு இருந்ததோ, அந்தத் தெருக்களில் வசிக்கும் எல்லோருக்கும், எவ்வித வித்தியாசமுமின்றி 5,000 ரூபாய் நிதியுதவி வழங்கினார்கள். ஆனால் 2021 நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் பெய்த மழை காரணமாகவும், 30-12-2021 அன்று தமிழக கடற்கரையோரம் நிலவிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் - இரண்டு முறை மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். ஏற்கெனவே தெருக்களில் மழைநீர் தேங்கி இருந்ததன் காரணமாகவும், வீடுகளில் மழைநீர் புகுந்ததன் விளைவாகவும் இருபதாயிரம் ரூபாய்க்கு மேல் ஒவ்வொரு குடும்பத்தினரும் செலவழித்துள்ளனர்.

தற்போது மீண்டும் அதே செலவை மேற்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள். 2015 ஆம் ஆண்டே 5,000 ரூபாய் நிவாரணமாக அளிக்கப்பட்டு இருப்பதையும், தற்போது விலைவாசி பன் மடங்கு உயர்ந்திருப்பதையும் கருத்தில் கொண்டு பார்த்தால், 10,000 ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட வேண்டும். இருப்பினும் குறைந்தபட்சம் 2015 ஆம் ஆண்டு அளித்த 5,000 ரூபாய் நிவாரணத்தையாவது அளிக்க வேண்டும் என்பதும், இரண்டு முறை பாதிக்கப்பட்டதால் 10,000 ரூபாய் வழங்கப்பட வேண்டும் என்பதும் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

எனவே, பொதுமக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையிலும், மக்களின் பாதிப்பினை ஓரளவு குறைக்கும் வகையிலும், ஒருமுறை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 5,000 ரூபாய் நிதியுதவியும், இரண்டு முறை பாதிக்கப்பட்டவர்களுக்கு 10,000 ரூபாய் நிதியுதவியும் வழங்க  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ops says about rs 5000 and 10000


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->