"ஆப்ரேஷன் கொங்கு மண்டலம்"! 29தொகுதிகளை குறிவைக்கும் தவெக! செங்கோட்டையன் எடுத்த சபதம்?ஆட்டத்தை தொடங்கும் விஜய்!
Operation Kongu Mandalam Thaveka will target 29 constituencies The vow taken by Sengottaiyan Vijay will start the game
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. கூட்டணி அமைப்புகள், தொகுதி பங்கீடு, தேர்தல் வாக்குறுதிகள், பிரசாரத் திட்டங்கள் என அனைத்துக் கட்சிகளும் தீவிரமாகக் களமிறங்கியுள்ளன. இந்தச் சூழலில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு பிரதான கட்சிகளுக்கும் எதிரான அரசியலைத் தீவிரப்படுத்தி வருகிறது.
கோவையில் நடைபெற்ற தவெக மாவட்ட பொதுக்கூட்டம் அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்தக் கூட்டத்தில் பேசிய தவெக மூத்த நிர்வாகி செங்கோட்டையன், கொங்கு மண்டலத்தில் உள்ள 29 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி கனி பறித்து, அதை கட்சித் தலைவர் காலடியில் சமர்ப்பிப்பேன் என்று சபதம் ஏற்றார். அவரது இந்த உரை, தவெக அரசியலில் மேலும் வேகத்தை கூட்டியுள்ளதாக பேசப்படுகிறது.
உரையாற்றிய செங்கோட்டையன், கோவை மாவட்டத்தில் தற்போதைய ஆளுங்கட்சியைச் சேர்ந்த பல அமைச்சர்கள் இருந்தாலும், தவெக கூட்டம் அவர்களுக்கு “சிம்ம சொப்பனமாக” அமைந்துள்ளதாகக் கூறினார். தவெகவில் இணைந்த பிறகு தனக்கே 20 வயது குறைந்தது போல இளைஞர் துடிப்புடன் செயல்படத் தயாராகியுள்ளதாகவும், இரவு பகல் பாராமல் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக உழைக்கத் தயார் எனவும் தெரிவித்தார்.
கொங்கு மண்டல அரசியலை குறிப்பிட்டு பேசிய அவர், “இந்த 29 தொகுதிகளிலும் தவெக வெற்றிபெறும். 2026-ல் நம் தலைவர் யாரைக் கை காட்டுகிறாரோ, அவர்தான் சட்டமன்ற உறுப்பினர். அதை யாராலும் மாற்ற முடியாது” என்று உறுதியாக கூறினார். மேலும், சிலர் தவெக கூட்டத்தில் இருந்தபடியே அதிமுக அல்லது திமுக பக்கம் சாயலாம் என்று தவறான கணக்குப் போடுவதாகவும், இந்தக் கூட்டத்தைப் பார்த்த பிறகாவது உண்மையை புரிந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் விமர்சித்தார்.
தற்போதைய ஆட்சியை கடுமையாக விமர்சித்த செங்கோட்டையன், தமிழகத்தில் கொலை, கொள்ளை அதிகரித்துள்ளதாகவும், சட்ட ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும் குற்றம் சாட்டினார். பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்றும், வீதிகளில் குப்பைகள் மலைபோல் குவிந்துள்ளதாகவும், ரயில்வே மேம்பாலங்கள் பாதியில் நிற்கின்றன என்றும் பட்டியலிட்டார்.
புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் அரசியல் பயணத்தைத் தொடங்கியபோது எழுந்த விமர்சனங்களை நினைவுபடுத்திய அவர், “நடிகர் நாடாள முடியுமா என்று கேட்டார்கள். ஆனால் நடிகர் நாட்டை ஆண்ட வரலாற்றை உருவாக்கினார். அதேபோல் நம் தளபதி விஜய் தமிழகத்தை ஆளக்கூடிய தலைவராக வருவார்” என்று கூறினார்.
மேலும், பண பலம் இல்லாமல் தன்னெழுச்சியாக மக்கள் திரண்டிருப்பதே தவெகவின் உண்மையான பலம் எனக் கூறிய செங்கோட்டையன், ஆளுங்கட்சிகள் கூட்டம் கூட்ட கோடிக்கணக்கில் செலவு செய்வதாகவும், ஆனால் தவெக கூட்டத்தில் பணமின்றியே எழுச்சி காணப்படுவதாகவும் தெரிவித்தார். “இந்தக் கூட்டம் ஒரு வரலாற்றை படைக்கிறது. நாளை தமிழகம் மாறப்போகிறது. 2026 தேர்தலில் நம் தளபதிக்காக மக்கள் வாக்களிக்கத் தயாராக உள்ளனர்” என்று அவர் உரையை நிறைவு செய்தார்.
கோவை தவெக கூட்டத்தில் செங்கோட்டையன் முன்வைத்த இந்த சபதமும், கொங்கு மண்டலத்தில் 29 தொகுதிகளை குறிவைத்த அறிவிப்பும், 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி தமிழக அரசியலில் புதிய பரபரப்பை உருவாக்கியுள்ளதாக அரசியல் நோக்கர்கள் மதிப்பிடுகின்றனர்.
English Summary
Operation Kongu Mandalam Thaveka will target 29 constituencies The vow taken by Sengottaiyan Vijay will start the game