செங்கோட்டையனுக்கு ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து – தவெக கூட்டணி சைகையா? தவெக கூட்டணியில் ஓபிஎஸ்!
O Panneerselvam congratulates Sengottaiyan Is it a gesture of the Tvk alliance OPS in the Thaweka alliance
தமிழக வெற்றிக் கழக (தவெக) நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையனுக்கு, முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்) பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்திருப்பது, தமிழக அரசியல் களத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர்ச்சியாக பல்வேறு கட்சிகளுக்கு தாவி வரும் சூழலில், அவரது இந்த சமூக வலைதள பதிவு பல்வேறு அரசியல் யூகங்களை கிளப்பியுள்ளது.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், ஓ.பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வருகிறார். “அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு” என்ற பெயரில் இயங்கி வந்த தனது அமைப்பை, அண்மையில் “அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகம்” என மாற்றியுள்ளார். கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து, ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
தற்போது 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அதிமுக–பாஜக கூட்டணி உறுதியாகியுள்ள நிலையில், ஓபிஎஸ்ஸை அந்தக் கூட்டணியில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி தயாராக இல்லை எனத் தெளிவுபடுத்தியுள்ளார். “ஓபிஎஸ்ஸை கூட்டணியில் சேர்க்க வாய்ப்பில்லை” என அவர் பலமுறை கூறியதோடு, சமீபத்திய பேட்டியிலும் அதையே மீண்டும் உறுதி செய்தார். இதனால் பாஜக கூட்டணியிலும் ஓபிஎஸ் இடம் பெற வாய்ப்பில்லை என்ற நிலை உருவானது. இதனைத் தொடர்ந்து, பாஜக கூட்டணியில் இல்லை என ஓபிஎஸ் தரப்பினர் அறிவித்தனர்.
இந்தச் சூழலில், அடுத்த கட்ட அரசியல் நகர்வு என்ன என்பது குறித்து ஓபிஎஸ் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வரும் 14ஆம் தேதி ஓ.பன்னீர்செல்வத்தின் பிறந்தநாளில், கூட்டணி நிலைப்பாடு, தனிக்கட்சி தொடங்குவது உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. தேர்தல் ஆணையத்தில் தனிக்கட்சியை பதிவு செய்து, தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைப்பது குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
ஓ.பன்னீர்செல்வம் தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக, தவெக நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, ஓபிஎஸ் ஆதரவாளர்களில் சிலர் விஜய் தலைமையிலான தவெகவில் இணைந்துள்ளனர். மேலும், ஓபிஎஸ் ஆதரவாளர்களான முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சுப்புரத்தினம் மற்றும் பாலகங்காதரன் ஆகியோர் திமுகவில் இணைந்ததும், ஓபிஎஸ் அணியின் பலம் குறைந்து வருவதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
இந்த பின்னணியில், செங்கோட்டையனுக்கு ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட பிறந்தநாள் வாழ்த்து பதிவு முக்கியத்துவம் பெற்றுள்ளது. அந்த பதிவில்,
“புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களால் அரசியலில் ஈர்க்கப்பட்டு, புரட்சித் தலைவி அம்மா அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்டவரும், ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவரும், பல்வேறு துறைகளின் அமைச்சராக திறம்பட பணியாற்றியவரும், தமிழக வெற்றிக் கழகத்தின் உயர்மட்ட நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான எனது அருமை சகோதரர் கே.ஏ. செங்கோட்டையன் அவர்களுக்கு எனது இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் நல்ல உடல் நலத்துடன் பல்லாண்டு வாழ்ந்து, மக்கள் சேவையாற்ற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்”
என்று ஓபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வாழ்த்து, ஓ.பன்னீர்செல்வம் தவெகவுடன் கூட்டணி அமைப்பதற்கான அரசியல் சைகையா, அல்லது செங்கோட்டையனுடன் தனது நெருக்கத்தை வெளிப்படுத்தும் முயற்சியா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது. தேர்தல் நெருங்கும் நிலையில், ஓபிஎஸ்ஸின் அடுத்த அறிவிப்பு தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா என்பதே இப்போது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
English Summary
O Panneerselvam congratulates Sengottaiyan Is it a gesture of the Tvk alliance OPS in the Thaweka alliance