அந்த தீர்ப்பை தவெக அரசு வெற்றி என்று கொண்டாடுவது வெட்கக்கேடானது - சீமான் கண்டனம்!
ntk seeman condemn to tvk govt medical seat issue
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில், தமிழ்நாட்டு அரசு மருத்துவர்களுக்கு சேர வேண்டிய 151 முதுநிலை மருத்துவ இடங்களை ஒன்றிய ஒதுக்கீட்டிற்கு வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை தவெக அரசு வலுவான வாதங்களை எடுத்து வைக்கத்தவறி, இடங்களை பறிகொடுத்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு சார்பாக முன்நின்று வாதங்களை முன்வைக்கக்கூட தவறியுள்ளது தமிழ்நாட்டின் உரிமையைத் தாரைவார்க்கும் பெருங்கொடுமையாகும்.
தமிழ்நாட்டிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரிகளில் முதுநிலை மருத்துவப் படிப்பிற்கு மொத்தம் 415 இடங்கள் உள்ளன. அவற்றில் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு, முதுநிலை மற்றும் பல்நோக்கு சிறப்பு மருத்துவப் படிப்புகளில் வழங்கப்பட்டு வந்த 50% இடஒதுக்கீடானது, நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர், இந்திய ஒன்றிய அரசால் தொடுக்கப்பட்ட வழக்கின் காரணமாக, கடந்த 2017ஆம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் நீக்கப்பட்டது. அதனை எதிர்த்து, 2018ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் சார்பில் இந்திய மருத்துவ கழகத்திற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. நீண்டகால சட்டப்போராட்டத்தின் விளைவாக, கடந்த 2020ஆம் ஆண்டு அரசு மருத்துவர்களுக்கு 50% ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரம் உண்டு என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பினை உச்சநீதிமன்றம் வழங்கியது. அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு அரசாணை எண் 462ஐ பிறப்பித்து, முதுகலை மருத்துவ படிப்புகளில் அரசு மருத்துவர்களுக்கு 50% இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியது. ஓய்வு பெறும் வரை அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டிய கட்டுப்பாட்டில் உள்ள அரசு மருத்துவர்களுக்கான இடஒதுக்கீடு என்பது வெறும் கல்வி வாய்ப்பு அல்ல; அது மாநிலத்தின் பொது சுகாதார கட்டமைப்பை பாதுகாக்கும் உயர்நோக்கு கொள்கையாகும்.
ஆனால், நடப்பு கல்வியாண்டிற்கான முதுநிலை மருத்துவப் படிப்புச் சேர்க்கையில், அரசு மருத்துவர்களுக்காக ஒதுக்கப்பட்ட 219 இடங்களில், நிரப்பப்படாத 151 இடங்களை அனைத்திந்திய ஒதுக்கீட்டிற்கு மாற்ற, கடந்த 29.05.2026 அன்று உச்சநீதிமன்றம் இட்ட உத்தரவினால், தமிழ்நாடு அரசு மருத்துவர்களின் உயர்கல்வி உரிமை மீண்டும் பறிக்கப்பட்டது. தவெக அரசின் அலட்சியத்தால் 151 மருத்துவ இடங்கள் பறிபோவதை கடுமையாக கண்டித்து கடந்த 03.06.2026 அன்று அறிக்கை வெளியிட்டதோடு, நீட் மதிப்பெண் வரம்பு குறைப்புக்காக தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான அரசு மருத்துவர்கள் காத்திருக்கும் சூழலில், இந்திய ஒன்றிய அரசு மாநில அரசுக்கு சொந்தமான உயர் மருத்துவ இடங்களை நீதிமன்றத்தின் மூலம் பறிக்கும் சூழ்ச்சியை தமிழ்நாடு அரசு சட்டப்போராட்டம் நடத்தி தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தேன். ஆனால் அதன் பிறகும் திறமையான மூத்த வழக்கறிஞர்களை நியமித்து, வழக்கினை திறம்பட தவெக அரசு நடத்தாதன் விளைவே தற்போது மீண்டும் தனது தீர்ப்பினை உச்சநீதிமன்றம் உறுதி செய்ய முதன்மைக்காரணமாகும்.
கடந்த சில ஆண்டுகளாக இந்திய மருத்துவ ஆலோசனைக் குழு (MCC) மருத்துவக் கலந்தாய்வு நீட் மதிப்பெண் வரம்பினை (NEET cut-off percentile) தொடர்ந்து குறைத்து வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளில் அது முற்றிலுமாக (Zero percentile) குறைக்கப்பட்டது. ஆனால் இந்திய மருத்துவ ஆலோசனைக் குழு இந்த ஆண்டு திட்டமிட்டு நீட் மதிப்பெண் (cut-off) குறைப்பு அறிவிப்பை வேண்டுமென்றே வெளியிடாமல் தாமதப்படுத்தி, அனைத்திந்திய இரண்டாம் சுற்று கலந்தாய்வையும் நீட்டித்தது. அதன் மூலம் தமிழ்நாட்டில் காலியாக உள்ள சேவை இடங்களை இந்திய ஒதுக்கீட்டில் சேர்க்க முயன்று, அதனை உச்சநீதிமன்ற வழக்கின் மூலம் சாதித்தது. அதனை தனது வாதத்தில் சுட்டிக்காட்டி தமிழ்நாடு அரசு மருத்துவர்களுக்கு கிடைக்க வேண்டிய இடங்களை முழுமையாக மீண்டும் திருப்பித்தர வேண்டும் என்ற உத்தரவை தமிழ்நாடு அரசு பெற்றிருக்க வேண்டும். அதனை விடுத்து, ஒருவேளை இரண்டாம் சுற்று கலந்தாய்வும் முடிந்து, நீட் மதிப்பெண் வரம்பினைக் குறைக்க நேரிட்டால், அப்போது 50% இடங்களை அதாவது 151 இல் பாதி இடங்களை மாநில அரசு ஒதுக்கீட்டிற்கு தர வேண்டும் என்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏதோ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுபோல அமைச்சர் அருண்ராஜ் கொண்டாடுவது வெட்கக்கேடானது. இதுதான் தவெக அரசு தமிழ்நாட்டு உரிமைகளைக் காக்கும் முறையா?
உண்மையில் தமிழ்நாட்டு மருத்துவர்களுக்கு சேர வேண்டிய 151 இடங்கள் பறிபோயுள்ளது. அதில் பாதி, அதாவது 151 இடங்களில் நிரம்பியதுபோக, மீதமுள்ள இடங்களில் பாதி இடங்கள், அதுவும் நீட் மதிப்பெண்ணைக் குறைக்க நேரிட்டால் மட்டுமே கிடைக்கும் சாத்தியம் உள்ளது. ஆனால், NEET SS cut-off குறைப்பு பொதுவாக மூன்றாம் சுற்று கலந்தாய்வின் போது அறிவிக்கப்படுவதால், அதற்குள் இந்த 151 இடங்களில் பெரும்பாலானவை அரசு சாரா (Non-Service) மருத்துவர்களால் நிரப்பப்பட்டிருக்கும். எனவே, அவை உச்சநீதிமன்றம் 75 இடங்களை ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தாலும், அதுகூட மீண்டும் கிடைக்கும் வாய்ப்பு மிகமிக குறைவே. தமிழ்நாட்டின் உரிமையை இழந்துள்ளோம் என்பதைக் கூட அறியாமல், அதனை ஏதோ பெரிய சாதனை போல தவெக அரசு கொண்டாடுவதுதான் மிகுந்த வேதனைக்குரியதாகும். 151 உயர் சிறப்பு மருத்துவ இடங்களை இழப்பது என்பது வெறும் அரசு மருத்துவர்களுக்கான இழப்பு மட்டுமல்ல; எதிர்காலத்தில் தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய 151 உயர்சிறப்பு அரசு மருத்துவர்களை இழப்பதாகும்.
ஆகவே, தமிழ்நாடு அரசு உடனடியாக உச்சநீதி மன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்து, நம்முடைய அரசு மருத்துவர்களின் உயர் மருத்துவப் படிப்பிற்கான இட ஒதுக்கீட்டை பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.
English Summary
ntk seeman condemn to tvk govt medical seat issue