“கடந்த 5 ஆண்டுகளில் புதிய மின் திட்டமே இல்லை!” – மின் வெட்டு ஏற்பட காரணம் திமுக! ஆதவ் அர்ஜுனா கடும் குற்றச்சாட்டு
No new power projects in the last 5 years DMK is the reason for power cuts Aathav Arjuna levels a severe allegation
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக பல்வேறு பகுதிகளில் மின்வெட்டு ஏற்படுவதாக புகார்கள் அதிகரித்து வரும் நிலையில், அதற்கான காரணம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம் அளித்துள்ளார். கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுக ஆட்சியில் புதிய மின் உற்பத்தித் திட்டங்கள் போதிய அளவில் உருவாக்கப்படவில்லை என்பதே தற்போதைய மின்சாரப் பிரச்சினைக்கு காரணம் என்று அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, தனது லண்டன் பயணம் குறித்தும், தொழில்துறை அமைச்சர் ஏன் தன்னுடன் வரவில்லை என்பது குறித்தும் விளக்கம் அளித்தார். இதைத்தொடர்ந்து தமிழகத்தில் நிலவி வரும் மின்சாரப் பிரச்சினை குறித்தும் அவர் கருத்து தெரிவித்தார்.
லண்டன் பயணம் தொடர்பாக பேசிய அவர், விளையாட்டுத்துறை அமைச்சராகவும், தமிழகத்தில் ஒலிம்பிக் சிட்டி திட்டத்தை கொண்டுவரும் நோக்கத்துடனும் நடிகர் அஜித்குமாரின் அழைப்பை ஏற்று லண்டன் சென்றதாக தெரிவித்தார். தமிழகத்தில் லட்சக்கணக்கான இளைஞர்கள் மோட்டார் ஸ்போர்ட்ஸில் ஆர்வம் காட்டி வருவதால், அதற்கான உள்கட்டமைப்பை உருவாக்குவது தொடர்பாக அங்கு ஆய்வு மேற்கொண்டதாகவும் அவர் கூறினார்.
தொழில்துறை அமைச்சர் தன்னுடன் லண்டன் வராதது குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்படுவதாகக் கூறிய ஆதவ் அர்ஜுனா, அவருக்கு கடந்த நான்கு நாட்களாக உடல்நிலை சரியில்லாததால் பயணத்தில் பங்கேற்க முடியவில்லை என தெரிவித்தார். அந்த விவரம் முதலமைச்சரிடமும் தன்னிடமும் தெரிவிக்கப்பட்டிருந்ததாகவும், ஓய்வு தேவைப்பட்ட சூழலில் அவர் பயணம் மேற்கொள்ளவில்லை என்றும் கூறினார்.
மேலும், தொழில்துறை செயலாளரின் குடும்பத்தில் திருமண நிகழ்ச்சி இருந்ததால் அவராலும் பயணத்தில் பங்கேற்க முடியவில்லை என அவர் விளக்கமளித்தார். அதேநேரத்தில் முதலமைச்சர் அலுவலக அதிகாரிகள், தொழில்துறை செயலாளர்கள், மெம்பர் செக்ரட்டரி உள்ளிட்ட அதிகாரிகள் தங்களுடன் லண்டன் வந்திருந்ததாகவும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார்.
திமுக குறித்து பேசிய அவர், எதிர்க்கட்சிகள் தங்களது அரசியல் நோக்கத்திற்காக அரசுக்கு எதிரான எதிர்மறையான பிரச்சாரங்களை முன்னெடுப்பதாக குற்றம்சாட்டினார். “நான் திமுகவில் இருந்து வந்தவன் என்பதால் அவர்களின் அரசியல் அணுகுமுறை எனக்கு நன்றாகத் தெரியும்” என்றும் அவர் கூறினார். வரும் தேர்தல்களில் திமுகவை எதிர்கொண்டு அரசியல் ரீதியாக பதிலளிப்பதே தங்களது நோக்கம் என்றும் அவர் தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து தமிழகத்தில் அதிகரித்து வரும் மின்வெட்டு குறித்து விளக்கம் அளித்த ஆதவ் அர்ஜுனா, கடந்த ஐந்து ஆண்டுகால திமுக ஆட்சியில் புதிய மின் உற்பத்திக்கான கட்டமைப்புத் திட்டங்கள் போதிய அளவில் உருவாக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.
“கடந்த ஐந்து ஆண்டுகளில் 5,000 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் திட்டத்தை கொண்டு வந்தோம் என்று திமுகவால் சொல்ல முடியுமா?” என்று கேள்வி எழுப்பிய அவர், தற்போதைய மின்சாரத் தேவையை சமாளிக்க போதுமான புதிய உற்பத்தித் திட்டங்கள் உருவாக்கப்படவில்லை என்பதே பிரச்சினைக்கு காரணம் என்றார்.
தற்போது மழை குறைந்துள்ளதால் நீர்மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும், காற்றாலை மின்சார உற்பத்தியும் குறைந்துள்ளதாகவும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். இதன் காரணமாக வெளிச்சந்தையில் அதிக விலை கொடுத்து மின்சாரத்தை வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மின்சாரப் பிரச்சினைக்கு திமுக ஆட்சியே காரணம் என்று வெறுமனே பழி போடவில்லை என்றும், அதற்கான காரணங்களை மக்களிடம் விளக்கிவிட்டு, பிரச்சினையை சரிசெய்வதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதற்கு அவர் வாடகை வீட்டை உதாரணமாகக் கூறினார். “ஒரு வாடகை வீட்டுக்குள் செல்லும்போது அந்த வீடு ஏற்கனவே சேதமடைந்திருந்தால், முதலில் அந்த பிரச்சினையை சரி செய்ய வேண்டியிருக்கும். அதுபோல நிர்வாகத்தில் இருக்கும் சிக்கல்களை அடையாளம் கண்டு அவற்றை சரிசெய்து வருகிறோம்” என்றார்.
முந்தைய ஆட்சியில் நிர்வாகத்தில் ஏற்பட்டதாகக் கூறப்படும் பல்வேறு சிக்கல்களை சரிசெய்து, புதிய நிர்வாக கட்டமைப்பை உருவாக்குவதற்கு சிறிது கால அவகாசம் தேவைப்படும் என்றும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசு இந்த நிர்வாகச் சிக்கல்களை படிப்படியாக சரிசெய்து நல்லாட்சியை வழங்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
English Summary
No new power projects in the last 5 years DMK is the reason for power cuts Aathav Arjuna levels a severe allegation